தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

மோசி கீரனார்

மோசி கீரனார்
50
மாசு அற விசித்த வார்புறு வள்பின்
மை படு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணித் தார்,
பொலங் குழை உழிஞையொடு, பொலியச் சூட்டி,
5
குருதி வேட்கை உரு கெழு முரசம்
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை
10
அதூஉம் சாலும், நல் தமிழ் முழுது அறிதல்;
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சி, தண்ணென
வீசியோயே; வியலிடம் கமழ,
இவண் இசை உடையோர்க்கு அல்லது, அவணது
15
உயர் நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம் படு குருசில்! நீ ஈங்கு இது செயலே?
திணை அது; துறை இயன்மொழி.
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை முரசுகட்டில் அறியாது ஏறிய மோசிகீரனைத் தவறு செய்யாது, அவன் துயில் எழுந்துணையும் கவரி கொண்டு வீசியானை மோசிகீரனார் பாடியது.

154
திரை பொரு முந்நீர்க் கரை நணிச் செலினும்,
அறியுநர்க் காணின், வேட்கை நீக்கும்
சில் நீர் வினவுவர், மாந்தர்; அது போல்,
அரசர் உழையராகவும், புரை தபு
5
வள்ளியோர்ப் படர்குவர், புலவர்: அதனால்,
யானும், 'பெற்றது ஊதியம்; பேறு யாது?' என்னேன்;
உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனனே;
'ஈ' என இரத்தலோ அரிதே; நீ அது
நல்கினும், நல்காய் ஆயினும், வெல் போர்
10
எறி படைக்கு ஓடா ஆண்மை, அறுவைத்
தூ விரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
தண் பல இழிதரும் அருவி நின்
கொண் பெருங் கானம், பாடல் எனக்கு எளிதே.
திணை அது; துறை பரிசில் துறை.
கொண்கானங்கிழானை மோசிகீரனார் பாடியது.

155
வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ,
'உணர்வோர் யார், என் இடும்பை தீர்க்க?' என,
கிளக்கும், பாண! கேள், இனி நயத்தின்,
பாழ் ஊர் நெருஞ்சிப் பசலை வான் பூ
5
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டாஅங்கு,
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க்
கொண் பெருங் கானத்துக் கிழவன்
தண் தார் அகலம் நோக்கின, மலர்ந்தே.
திணை அது; துறை பாணாற்றுப்படை.
அவனை அவர் பாடியது.

156
ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம்; என்றும்
இரண்டு நன்கு உடைத்தே கொண் பெருங் கானம்;
நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்
தொடுத்து உணக் கிடப்பினும் கிடக்கும்; அஃதான்று
5
நிறை அருந் தானை வேந்தரைத்
திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே.
திணை அது; துறை இயன் மொழி.
அவனை அவர் பாடியது.

186
நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்:
அதனால், யான் உயிர் என்பது அறிகை
வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே.
திணையும் துறையும் அவை.
மோசிகீரனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:36:50(இந்திய நேரம்)