தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

கண்டீரக்கோப் பெரு நள்ளி

கண்டீரக்கோப் பெரு நள்ளி
148
கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி! நின்
அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி,
நாள்தொறும் நன் கலம் களிற்றொடு கொணர்ந்து,
கூடு விளங்கு வியல் நகர், பரிசில் முற்று அளிப்ப;
5
பீடு இல் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டி,
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யாதாகின்று, எம் சிறு செந் நாவே.
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
கண்டீரக் கோப் பெருநள்ளியை வன்பரணர் பாடியது.

149
நள்ளி! வாழியோ; நள்ளி! நள்ளென்
மாலை மருதம் பண்ணி, காலை
கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி,
வரவு எமர் மறந்தனர் அது நீ
5
புரவுக் கடன் பூண்ட வண்மையானே.
திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

150
கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன
பாறிய சிதாரேன், பலவு முதல் பொருந்தி,
தன்னும் உள்ளேன், பிறிது புலம் படர்ந்த என்
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி,
5
மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால்,
வான் கதிர்த் திரு மணி விளங்கும் சென்னி,
செல்வத் தோன்றல், ஓர் வல் வில் வேட்டுவன்,
தொழுதனென் எழுவேற் கை கவித்து இரீஇ,
இழுதின் அன்ன வால் நிணக் கொழுங் குறை,
10
கான் அதர் மயங்கிய இளையர் வல்லே
தாம் வந்து எய்தாஅளவை, ஒய்யெனத்
தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, 'நின்
இரும் பேர் ஒக்கலொடு தின்ம்' எனத் தருதலின்,
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி,
15
நல் மரன் நளிய நறுந் தண் சாரல்,
கல் மிசை அருவி தண்ணெனப் பருகி,
விடுத்தல் தொடங்கினேனாக, வல்லே,
'பெறுதற்கு அரிய வீறுசால் நன் கலம்
பிறிது ஒன்று இல்லை; காட்டு நாட்டேம்' என,
20
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம்
மடை செறி முன்கைக் கடகமொடு ஈத்தனன்;
'எந் நாடோ?' என, நாடும் சொல்லான்;
'யாரீரோ?' என, பேரும் சொல்லான்;
பிறர் பிறர் கூற வழிக் கேட்டிசினே
25
'இரும்பு புனைந்து இயற்றாப் பெரும் பெயர்த் தோட்டி
அம் மலை காக்கும் அணி நெடுங் குன்றின்,
பளிங்கு வகுத்தன்ன தீம் நீர்,
நளி மலை நாடன் நள்ளி அவன்' எனவே.
திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

151
பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப,
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
கிழவன் சேட் புலம் படரின், இழை அணிந்து,
புன் தலை மடப் பிடி பரிசிலாக,
5
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ்க்
கண்டீரக்கோன்ஆகலின், நன்றும்
முயங்கல் ஆன்றிசின், யானே; பொலந் தேர்
நன்னன் மருகன் அன்றியும், நீயும்
முயங்கற்கு ஒத்தனை மன்னே; வயங்கு மொழிப்
10
பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடு மழை
அணங்கு சால் அடுக்கம் பொழியும் நும்
மணம் கமழ் மால் வரை வரைந்தனர், எமரே.
திணையும் துறையும் அவை.
இளங் கண்டீரக்கோவும் இள விச்சிக்கோவும் ஒருங்கு இருந்தவழி, சென்ற பெருந்தலைச் சாத்தனார் இளங் கண்டீரக்கோவைப் புல்லி, இள விச்சிக்கோவைப் புல்லாராக 'என்னை என் செயப் புல்லீராயினீர்?' என, அவர் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:54:46(இந்திய நேரம்)