தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
16
வினை மாட்சிய விரை புரவியொடு,
மழை உருவின தோல் பரப்பி,
முனை முருங்கத் தலைச் சென்று, அவர்
விளை வயல் கவர்பூட்டி,
5
மனை மரம் விறகு ஆகக்
கடி துறை நீர்க் களிறு படீஇ,
எல்லுப் பட இட்ட சுடு தீ விளக்கம்
செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற,
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை,
10
துணை வேண்டாச் செரு வென்றி,
புலவு வாள், புலர் சாந்தின்,
முருகற் சீற்றத்து, உரு கெழு குருசில்!
மயங்கு வள்ளை, மலர் ஆம்பல்,
பனிப் பகன்றை, கனிப் பாகல்,
15
கரும்பு அல்லது காடு அறியாப்
பெருந் தண் பணை பாழ் ஆக,
ஏம நல் நாடு ஒள் எரி ஊட்டினை,
நாம நல் அமர் செய்ய,
ஓராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே.
திணை வஞ்சி; துறை மழபுலவஞ்சி.
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங் கண்ணனார் பாடியது.

125
பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன,
நெருப்புச் சினம் தணிந்த நிணம் தயங்கு கொழுங் குறை,
பரூஉக் கள் மண்டையொடு, ஊழ் மாறு பெயர
உண்கும், எந்தை! நிற் காண்கு வந்திசினே,
5
நள்ளாதார் மிடல் சாய்த்த
வல்லாள! நின் மகிழ் இருக்கையே.
உழுத நோன் பகடு அழி தின்றாங்கு
நல் அமிழ்து ஆக, நீ நயந்து உண்ணும் நறவே;
குன்றத்து அன்ன களிறு பெயர,
10
கடந்து அட்டு வென்றோனும், நிற் கூறும்மே;
'வெலீஇயோன் இவன்' என,
'கழல் அணிப் பொலிந்த சேவடி நிலம் கவர்பு
விரைந்து வந்து, சமம் தாங்கிய,
வல் வேல் மலையன் அல்லன் ஆயின்,
15
நல் அமர் கடத்தல் எளிதுமன், நமக்கு' எனத்
தோற்றோன்தானும், நிற் கூறும்மே,
'தொலைஇயோன் இவன்' என,
ஒரு நீ ஆயினை பெரும! பெரு மழைக்கு
இருக்கை சான்ற உயர் மலைத்
20
திருத் தகு சேஎய்! நிற் பெற்றிசினோர்க்கே.
திணை வாகை; துறை அரச வாகை.
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழி, சோழற்குத் துப்பாகிய தேர்வண்மலையனை வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடியது.

367
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம்
தமவேஆயினும் தம்மொடு செல்லா;
வேற்றோர்ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங் கை நிறையப்
5
பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து,
பாசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய
நார் அரி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,
இரவலர்க்கு அருங் கலம் அருகாது வீசி,
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்;
10
வாழச் செய்த நல்வினை அல்லது
ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை;
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண் குடைக் கொடித் தேர் வேந்திர்!
15
யான் அறி அளவையோ இதுவே: வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப்
பரந்து இயங்கு மா மழை உறையினும்,
உயர்ந்து மேந் தோன்றிப் பொலிக, நும் நாளே!
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், ஒருங்கு இருந்தாரை ஒளவையார் பாடியது.

377
பனி பழுநிய பல் யாமத்துப்
பாறு தலை மயிர் நனைய,
இனிது துஞ்சும் திரு நகர் வரைப்பின்,
இனையல் அகற்ற, என் கிணை தொடாக் குறுகி,
5
'அவி உணவினோர் புறங்காப்ப,
அற நெஞ்சத்தோன் வாழ, நாள்' என்று,
அதற் கொண்டு வரல் ஏத்தி,
'''கரவு இல்லாக் கவி வண் கையான்,
வாழ்க!'' எனப் பெயர் பெற்றோர்
10
பிறர்க்கு உவமம் தான் அல்லது,
தனக்கு உவமம் பிறர் இல்' என,
அது நினைந்து, மதி மழுகி,
ஆங்கு நின்ற எற் காணூஉச்
'சேய் நாட்டுச் செல் கிணைஞனை!
15
நீ புரவலை, எமக்கு' என்ன,
மலை பயந்த மணியும், கடறு பயந்த பொன்னும்,
கடல் பயந்த கதிர் முத்தமும்,
வேறு பட்ட உடையும், சேறுபட்ட தசும்பும்,
கனவில் கண்டாங்கு, வருந்தாது நிற்ப,
20
நனவின் நல்கியோன், நசைசால் தோன்றல்;
நாடு என மொழிவோர், 'அவன் நாடு' என மொழிவோர்;
வேந்து என மொழிவோர், 'அவன் வேந்து' என மொழிவோர்;
.........................பொற் கோட்டு யானையர்,
கவர் பரிக் கச்சை நல் மான்,
25
வடி மணி, வாங்கு உருள,
.....................,..........நல் தேர்க் குழுவினர்,
கதழ் இசை வன்கணினர்,
வாளின் வாழ்நர், ஆர்வமொடு ஈண்டி,
கடல் ஒலி கொண்ட தானை
30
அடல் வெங் குருசில்! மன்னிய நெடிதே!
திணை அது; துறை வாழ்த்தியல்.
சோழன் இராசசூயம் வேட்ட பெரு நற்கிள்ளியை உலோச்சனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 23:04:55(இந்திய நேரம்)