தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பிட்டங்கொற்றன்

பிட்டங்கொற்றன்
168
அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக்
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு,
கடுங் கண் கேழல் உழுத பூழி,
5
நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர்
உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை
முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார்
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால்,
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி
10
வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி,
சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளம் கவினிய குளவி முன்றில்,
செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்,
15
நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி,
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும!
கை வள் ஈகைக் கடு மான் கொற்ற!
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப,
பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப்
20
பாடுப என்ப பரிசிலர், நாளும்
ஈயா மன்னர் நாண,
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே.
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம்.
பிட்டங் கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடியது.

169
நும் படை செல்லும்காலை, அவர் படை
எடுத்து எறி தானை முன்னரை எனாஅ,
அவர் படை வரூஉம்காலை, நும் படைக்
கூழை தாங்கிய, அகல் யாற்றுக்
5
குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ,
அரிதால், பெரும! நின் செவ்வி என்றும்;
பெரிதால் அத்தை, என் கடும்பினது இடும்பை;
இன்னே விடுமதி பரிசில்! வென் வேல்
இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார்,
10
இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின்
பெரு மரக் கம்பம் போல,
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே!
திணை அது; துறை பரிசில் கடா நிலை.
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

170
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி,
பரலுடை முன்றில், அம் குடிச் சீறூர்,
எல் அடிப்படுத்த கல்லாக் காட்சி
வில் உழுது உண்மார் நாப்பண், ஒல்லென,
5
இழி பிறப்பாளன் கருங் கை சிவப்ப,
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடுந் துடி
புலி துஞ்சு நெடு வரைக் குடிஞையோடு இரட்டும்
மலை கெழு நாடன், கூர்வேல் பிட்டன்,
குறுகல் ஓம்புமின், தெவ்விர்! அவனே
10
சிறு கண் யானை வெண் கோடு பயந்த
ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈத்து,
நார் பிழிக் கொண்ட வெங் கள் தேறல்
பண் அமை நல் யாழ்ப் பாண் கடும்பு அருத்தி,
நசைவர்க்கு மென்மை அல்லது, பகைவர்க்கு
15
இரும்பு பயன் படுக்கும் கருங் கைக் கொல்லன்
விசைத்து எறி கூடமொடு பொரூஉம்
உலைக் கல் அன்ன, வல்லாளன்னே.
திணை வாகை; துறை வல்லாண் முல்லை; தானைமறமும் ஆம்.
அவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

171
இன்று செலினும் தருமே; சிறு வரை
நின்று செலினும் தருமே; பின்னும்,
'முன்னே தந்தனென்' என்னாது, துன்னி
வைகலும் செலினும், பொய்யலன் ஆகி,
5
யாம் வேண்டியாங்கு எம் வறுங் கலம் நிறைப்போன்;
தான் வேண்டியாங்குத் தன் இறை உவப்ப
அருந் தொழில் முடியரோ, திருந்து வேல் கொற்றன்;
இனம் மலி கதச் சேக் களனொடு வேண்டினும்,
களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும்,
10
அருங் கலம் களிற்றொடு வேண்டினும், பெருந்தகை
பிறர்க்கும் அன்ன அறத் தகையன்னே.
அன்னன் ஆகலின், எந்தை உள் அடி
முள்ளும் நோவ உறாற்கதில்ல!
ஈவோர் அரிய இவ் உலகத்து,
15
வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே!
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியது.

172
ஏற்றுக உலையே; ஆக்குக சோறே;
கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள் இழைப்
பாடு வல் விறலியர் கோதையும் புனைக;
அன்னவை பிறவும் செய்க; என்னதூஉம்
5
பரியல் வேண்டா; வரு பதம் நாடி,
ஐவனம் காவலர் பெய் தீ நந்தின்,
ஒளி திகழ் திருந்து மணி நளிஇருள் அகற்றும்
வன் புல நாடன், வய மான் பிட்டன்:
ஆர் அமர் கடக்கும் வேலும், அவன் இறை
10
மா வள் ஈகைக் கோதையும்,
மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே!
திணையும் துறையும் அவை.
அவனை வடம வண்ணக்கன் தாமோதரனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 23:22:39(இந்திய நேரம்)