தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ஆனந்தப் பையுள்

ஆனந்தப் பையுள்
228
கலம் செய் கோவே! கலம் செய் கோவே!
இருள் திணிந்தன்ன குரூஉத் திரள் பரூஉப் புகை
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை,
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே!
5
அளியை நீயே; யாங்கு ஆகுவைகொல்?
நிலவரை சூட்டிய நீள் நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை,
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன
சேண் விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்
10
கொடி நுடங்கு யானை நெடுமா வளவன்
தேவர் உலகம் எய்தினன்ஆதலின்,
அன்னோற் கவிக்கும் கண் அகன் தாழி
வனைதல் வேட்டனைஆயின், எனையதூஉம்
இரு நிலம் திகிரியா, பெரு மலை
15
மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே?
திணை அது; துறை ஆனந்தப்பையுள்.
அவனை ஐயூர் முடவனார் பாடியது.

229
ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில்,
முடப் பனையத்து வேர் முதலாக்
கடைக் குளத்துக் கயம் காய,
5
பங்குனி உயர் அழுவத்து,
தலை நாள்மீன் நிலை திரிய,
நிலை நாள்மீன் அதன் எதிர் ஏர்தர,
தொல் நாள்மீன் துறை படிய,
பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது,
10
அளக்கர்த் திணை விளக்காகக்
கனை எரி பரப்ப, கால் எதிர்பு பொங்கி,
ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே;
அது கண்டு, யாமும் பிறரும் பல் வேறு இரவலர்,
'பறை இசை அருவி நல் நாட்டுப் பொருநன்
15
நோய் இலனாயின் நன்றுமன் தில்' என
அழிந்த நெஞ்சம் மடிஉளம் பரப்ப,
அஞ்சினம்; எழு நாள் வந்தன்று, இன்றே;
மைந்துடை யானை கை வைத்து உறங்கவும்,
திண் பிணி முரசம் கண் கிழிந்து உருளவும்,
20
காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும்,
கால் இயல் கலி மாக் கதி இல வைகவும்,
மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின்,
ஒண் தொடி மகளிர்க்கு உறு துணை ஆகி,
தன் துணை ஆயம் மறந்தனன்கொல்லோ
25
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு
அளந்து கொடை அறியா ஈகை,
மணி வரை அன்ன மாஅயோனே?
திணையும் துறையும் அவை.
கோச் சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்ன நாளில் துஞ்சும் என அஞ்சி, அவன் துஞ்சிய இடத்து, கூடலூர் கிழார் பாடியது.

246
பல் சான்றீரே! பல் சான்றீரே!
'செல்க' எனச் சொல்லாது, 'ஒழிக' என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே!
அணில் வரிக் கொடுங் காய் வாள் போழ்ந்திட்ட
5
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது,
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப் பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆக,
பரல் பெய் பள்ளிப் பாய் இன்று வதியும்
10
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங் காட்டுப் பண்ணிய கருங் கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்
பெருந் தோள் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்ந்த தாமரை
15
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!
திணை அது; துறை ஆனந்தப்பையுள்.
பூத பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப் பாய்வாள் சொல்லியது.

247
யானை தந்த முளி மர விறகின்
கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து,
மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பி,
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்,
5
நீர் வார் கூந்தல் இரும் புறம் தாழ,
பேர் அஞர்க் கண்ணள், பெருங் காடு நோக்கி,
தெருமரும் அம்ம தானே தன் கொழுநன்
முழவு கண் துயிலாக் கடியுடை வியல் நகர்ச்
சிறு நனி தமியள் ஆயினும்,
10
இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே!
திணையும் துறையும் அவை.
அவள் தீப் பாய்வாளைக் கண்டு மதுரைப் பேராலவாயார் சொல்லியது.

280
என்னை மார்பில் புண்ணும் வெய்ய;
நடு நாள் வந்து தும்பியும் துவைக்கும்;
நெடு நகர் வரைப்பின் விளக்கும் நில்லா;
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்;
5
அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்;
நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
செம் முது பெண்டின் சொல்லும் நிரம்பா;
துடிய! பாண! பாடு வல் விறலி!
என் ஆகுவிர்கொல்? அளியிர்; நுமக்கும்
10
இவண் உறை வாழ்க்கையோ, அரிதே! யானும்
மண்ணுறு மழித் தலைத் தெண் நீர் வார,
தொன்று தாம் உடுத்த அம் பகைத் தெரியல்
சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும்
கழி கல மகளிர் போல,
15
வழி நினைந்திருத்தல், அதனினும் அரிதே!
திணை பொதுவியல்; துறை ஆனந்தப்பையுள்.
மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:04:41(இந்திய நேரம்)