தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வஞ்சினக் காஞ்சி

வஞ்சினக் காஞ்சி
71
மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து,
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து,
என்னொடு பொருதும் என்ப; அவரை
ஆர் அமர் அலறத் தாக்கி, தேரொடு
5
அவர்ப் புறங்காணேன் ஆயின் சிறந்த
பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக;
அறன் நிலை திரியா அன்பின் அவையத்து,
திறன் இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ்
10
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின்
பொய்யா யாணர் மையல் கோமான்
மாவனும், மன் எயில் ஆந்தையும், உரை சால்
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,
வெஞ் சின இயக்கனும், உளப்படப் பிறரும்,
15
கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த
இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ,
மன்பதை காக்கும் நீள் குடிச் சிறந்த
தென் புலம் காவலின் ஒரீஇ, பிறர்
வன் புலம் காவலின் மாறி யான் பிறக்கே!
திணை காஞ்சி; துறை வஞ்சினக் காஞ்சி.
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் பாட்டு.

72
'நகுதக்கனரே, நாடு மீக்கூறுநர்;
இளையன் இவன்' என உளையக் கூறி,
'படு மணி இரட்டும் பா அடிப் பணைத் தாள்
நெடு நல் யானையும், தேரும், மாவும்,
5
படை அமை மறவரும், உடையம் யாம்' என்று
உறு துப்பு அஞ்சாது, உடல் சினம் செருக்கி,
சிறு சொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை
அருஞ் சமம் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய
10
என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது,
'கொடியன் எம் இறை' எனக் கண்ணீர் பரப்பி,
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக;
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
15
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக, என் நிலவரை;
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.
திணையும் துறையும் அவை.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் பாட்டு.

73
மெல்ல வந்து, என் நல் அடி பொருந்தி,
'ஈ' என இரக்குவர் ஆயின், சீருடை
முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம்;
இன் உயிர் ஆயினும் கொடுக்குவென், இந் நிலத்து;
5
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என்
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல,
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்
கழை தின் யானைக் கால் அகப்பட்ட
10
வன் திணி நீள் முளை போல, சென்று, அவண்
வருந்தப் பொரேஎன்ஆயின், பொருந்திய
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல் இருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே!
திணையும் துறையும் அவை.
சோழன் நலங்கிள்ளி பாட்டு.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:35:22(இந்திய நேரம்)