தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விறலியாற்றுப்படை

விறலியாற்றுப்படை
64
நல் யாழ், ஆகுளி, பதலையொடு சுருக்கி,
செல்லாமோதில் சில் வளை விறலி!
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை,
விசும்பு ஆடு எருவை பசுந் தடி தடுப்ப,
5
பகைப் புலம் மரீஇய தகைப் பெருஞ் சிறப்பின்
குடுமிக் கோமாற் கண்டு,
நெடு நீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே?
திணை பாடாண் திணை; துறை விறலியாற்றுப்படை.
பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெடும்பல்லியத்தனார் பாடியது.

103
ஒரு தலைப் பதலை தூங்க, ஒரு தலைத்
தூம்பு அகச் சிறு முழாத் தூங்கத் தூக்கி,
'கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?' எனச்
சுரன்முதல் இருந்த சில் வளை விறலி!
5
செல்வைஆயின், சேணோன் அல்லன்;
முனை சுட எழுந்த மங்குல் மாப் புகை
மலை சூழ் மஞ்சின், மழ களிறு அணியும்
பகைப் புலத்தோனே, பல் வேல் அஞ்சி;
பொழுது இடைப்படாஅப் புலரா மண்டை
10
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப,
அலத்தற் காலை ஆயினும்,
புரத்தல் வல்லன்; வாழ்க, அவன் தாளே!
திணை அது; துறை விறலியாற்றுப்படை.
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.

105
சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி!
தடவு வாய்க் கலித்த மா இதழ்க் குவளை
வண்டு படு புது மலர்த் தண் சிதர் கலாவப்
பெய்யினும், பெய்யாது ஆயினும், அருவி
5
கொள் உழு வியன் புலத்துழை கால் ஆக,
மால்புடை நெடு வரைக் கோடுதோறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள்பால் பாடினை செலினே.
திணை பாடாண் திணை; துறை விறலியாற்றுப்படை.
வேள் பாரியைக் கபிலர் பாடியது.

133
மெல் இயல் விறலி! நீ நல் இசை செவியின்
கேட்பின் அல்லது, காண்பு அறியலையே;
காண்டல் வேண்டினைஆயின் மாண்ட நின்
விரை வளர் கூந்தல் வரை வளி உளர,
5
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி,
மாரி அன்ன வண்மைத்
தேர் வேள் ஆயைக் காணிய சென்மே!
திணை அது; துறை விறலியாற்றுப்படை.
அவனை அவர் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:38:10(இந்திய நேரம்)