தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).



4

புறநானூறு
 

இப் புறநானூறு போலவே, வேறே ஏழு தொகை நூல்கள் இப்புறப்
பாட்டுக் காலத்தனவாய் உள்ளன. அவற்றோடு கூட்டி எண்வகைத்
தொகைநூல்கள் என இயம்புவது மரபு. அவை, நற்றிணை, குறுந்தொகை,
ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு
எனப்படும். இவை யனைத்தும் பல புலவர்கள் பல காலத்திற் பாடிய
பாட்டுக்களின் தொகையாகும். புறநானூற்றுச் செய்யுட்களைப் போலவே, இவை
தொன்மையும் இலக்கண வொழுக்கமும் இலக்கியச் செறிவும் உடையன. இவ்
வெட்டனுள், புறமும், பதிற்றுப்பத்தும் ஒழிய ஏனைய யாவும் அகப்பொருள்
நெறிக்குரியன. பரிபாடல் என்பது இசை நூலே; ஆயினும் இது புறப்பொருளும்
அகப்பொருளும் தழுவி இயலுவது. செல்வாக்குள்ள சூழலில் தக்கதோரிடம்
பெறுவதே தமது அறிவின் எல்லையாகக் கருதித் தம்மையே வியந்து,
அப்பொருள் அமைதி காணாது. அதனை இகழ்ந்துரைக்கும் சிறுமை, தமிழருட்
சிலர்பால் இக்காலத்தே சிறிது காணப்படுகிறது. அவரது அறியாமைக்கு இரங்கும்
தமிழுலகம், அவரது சிறுமையைப் பொருளாகக் கொண்டு அக முதலிய
பொருணூல்களைத் தள்ளி யொதுக்கும் கீழ்மையை அடையாதென்பது ஒருதலை.

நிற்க. இந்நாளில், மண்ணுலக நல்வாழ்க்கைக்கமைந்த அரசியல் வகைகள்,
நாடுதோறும் வேறுவேறு வகையவாயினும்,பொதுவாக அரசியல் வாழ்வில்
என்பதை,மக்கட்கு நால்வகை உரிமைகள் இன்றியமையாது வேண்டப்படுகின்றன
இரண்டாவது உலகப் போரை வென்றியுற முடித்து அரசியலறிஞர்
வற்புறுத்தியுள்ளனர். அதனை யுணர்ந்த அரசியலுலகம் அத்லாந்திக் கார்ட்டர்
எனப்படும் உரிமை யாவணம் வகுத்தது; அது நீர்மேலெழுத்தாய் நிலைபேறின்றி
விளங்காதாக,பண்டைநாளில் நம்தமிழகத்தே அவ்வுரிமை விளங்கியிருந்ததென்று
காட்டும் பேரிலக்கியம் இப் புறநானூறு என இதனைக் கற்றுணர்ந்தோர்
நன்கறிவர். பேச்சுரிமை, வழி பாட்டுரிமை, அச்சமின்மை, வறுமையின்மை என்ற
நான்கும் அத்லாந்திக் சார்ட்டரால் உரிமைகளாக வற்புறுத்தப்படுகின்றன. இந்த
நான்கையும் பண்டைத் தமிழர் தம்முடைய பிறப்புரிமையாகக்கொண்டு வாழ்ந்த
திறத்தை இப் புறநானூறும் ஏனைத் தொகை நூல்களும் நன்குணர்த்துகின்றன.
இவ்வுரிமை வாழ்வில் ஊறிவந்ததனால்தான், நமது தமிழகம் இன்றுகாறும் வேற்று
நாட்டவரது படை யெடுப்பால் சீரழிந்து, நடை, உடை, மொழி, கலை, பண்பாடு
முதலிய வாழ்க்கைக் கூறுகளில் நிலைதிரிந்து சீர்மை யிழந்து தொன்மை நலம்
மாறிவிடும் சிறுமைநிலை மிக எய்தாது, அரசியல், வாணிபம், பொருளாதாரம்,
கலை முதலிய துறைகளில் தனித்துநின்று உரிமைச் செயலாற்றும் ஒட்பம் குன்றா
வியல்புடன் திகழ்கிறது என்னலாம். இந்நிலை வலிமிகப் பெற்றுப் பண்டைய
நலம் முற்றும் பெற்றுச் சிறத்தற்கு வேண்டும் நல்லறிவுக்கு இத் தொகை நூல்கள்
சீரிய கருவூலங்களாகும்; அவற்றுள் புறநானூறு மிகச் சிறந்த தென்பது
மிகையாகாது.

இந் நாளைய அரசியல் இயக்கத்தின் விளைவாகத் தமிழகம் தமிழர்க்கே
யுரிய தனியுரிமை நாடாகும் தகுதிபெற இருக்கிறது. அத்தகுதியைப் பெறாவாறு
தடுக்கும் தடைகளைத் தகர்த்தெறிதற்கும் பண்டைத் தொகை நூலறிவு
பெருந்துணையாகும்.

புறநானூற்றுத் தமிழகம் மேற்கே கேரளநாட்டையும், வடமேற்கே கன்னட
நாட்டையும், வடக்கே ஆந்திர நாட்டையும் தன்னகத்தேகொண்டிருந்தது.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 03:30:33(இந்திய நேரம்)