தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


பிறந்தவனே இக் கௌசிகன் என்ற முனிவன். கௌசிகன் முதலில் ஓர் அரசனாக நாட்டினை யாண்டிருந்தான். இவனுக்கு நூறு ஆண் மக்கள் பிறந்து வளர்ந்தனர். அம் மைந்தர்களுடனும் நாற்பெரும் படையுடனும் வேட்டையாட வந்தான். நான் தவசுபுரியும் கானகத்தில் வேட்டையாடிக் களைத்துச் சோர்ந்து பசியால் வாடி என் பக்கஞ் சேர்ந்தான். உணவு தருமாறு வேண்டினன். நான் காமதேனுவை வரவழைத்து, வந்தவர்கட்கெல்லாம் உணவளிக்குமாறு பணித்தேன். அப் பசுவும் அவ்வாறே செய்தது. விருந்தளித்த பசுவைக் கொடுக்கவேண்டும் என்று என்பாற் கேட்டான். அப் பசு எனக்குரியதன்று; தெய்வப்பசு என்னாற் கொடுக்கவியலாது என்றேன். அவன் அதனைப் பற்றிக்கொண்டுபோக எண்ணிக் கயிற்றால் வளைத்துக் கட்டுமாறு படைகட்குக் கட்டளையிட்டாள். அப் பசு அப் படைகளைக் கொம்பாற் குத்தியும், காலான் மிதித்தும் கொன்று, மேலுலகம் சென்றது. 'இச் செயலுக்குக் காரணம் இம்முனிவனே' என்று என்மேற் போருக்கு எழுந்தனர் அவன் மைந்தர். நான் விழித்தேன்; என் கோபக்கனலால் சாம்பலாயினர் அவர்கள். கௌசிகனும் கணை தொடுத்தான். யோக தண்டத்தை நிறுத்தி நான் தவத்திலிருந்தேன். அத் தண்டம் அவன் பாணங்களை விழுங்கியது. அப்போதுதான் அறிந்தான் தவத்தின் பெருமையை; அரசாட்சியை வெறுத்துத் தவம் புரிந்து முனிவனானான். ஆயினும், அவ்வரசர்குலத்திற் பிறந்ததனாற் கோபம் நீங்கவில்லை. என்னைக் குலகுருவாகக் கொண்ட திரிசங்கு 'இவ்வுடலுடன் சுவர்க்கம் புகுதற்கு வழி வகுக்கவேண்டும்' என்று வேண்டினன். 'உடலுடன் சுவர்க்கம் புகவொண்ணாது' என்றேன். அவன் 'வேறு முனிவர்கள்பால் வேண்டிச் சுவர்க்கம் புகுவேன்' என்று கூறினன். நான் 'நீ புலையனாகக் கடவாய்' எனச் சபித்தேன். புலையனாகிய பின் கோசிகன்பாற் சென்று சுவர்க்கம் புகுவிக்க வேண்டினன். அவன் வேள்விபுரிந்து விண்ணுலகு செல்ல விடுத்தான். விமானத்துடன் சென்ற திரிசங்குவை வானவர் கீழே தள்ளினர். உடனே விமானத்தை ஆங்கே நிறுத்திச் சுவர்க்கம் படைத்தளித்தான். இவ்வாறு என்னுடன் பகைகொண்டுதான் இவ்வரசனை வருத்தினான்" என்று கோசிகன் வரலாறு கூறி முடித்தான். காசியரசனும் கேட்டுக் களித்தான். அரிச்சந்திரன் அரசுபுரிந்து நெடுங்காலம் வாழ்ந்திருந்தான்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:40:13(இந்திய நேரம்)