தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆசிரியர் வரலாறு


  • ஆசிரியர் வரலாறு
    "அரிச்சந்திர புராணம்" என்னும் இந் நூலை இயற்றியவர் நல்லூர் வீரகவிராயர் என்பவர். இவர் பாண்டி மண்டலத்தில் இராமநாதபுர மாவட்டத்திலுள்ள நெல்லூரிற் பிறந்து வாழ்ந்தவர் எனத் தெரிகிறது. முற்காலத்தில் இவ்வூர் 'குலோத்துங்க சோழ நல்லூர்' எனப் பெயர் பெற்றிருந்ததுபோலும். இவருடைய குலம் பொற்கொல்லர் குலம். அந்நாளில் அந்நாட்டுப் பொற்கொல்லர் யாவரும் காளி வழிபாட்டிற் சிறந்து, தங்கள் குலதெய்வமெனக் காளிதேவியைக் கொண்டாடி வந்தனர். அக்குலத்திற் பிறந்த காரணத்தால் இவரும் காளியை வணங்கி அத்தெய்வத்தின் திருவருள் கைவரப் பெற்றார். அதனாற் செந்தமிழ் மொழிப் புலமையிற் சிறந்து கவி பாடும் ஆற்றலும் இவர்பால் அமைந்தது 'வீரன்' என்பது இவரது பிள்ளைத் திருப்பெயர். கவி பாடிப் புகழ்பெற்ற பின்பு 'கவிராயர்' என்ற பட்டம் பெற்றனர். வீரகவிராயர் என்றே அழைக்கப்பட்டார். 'ஆசுகவி' என்பதும் ஒரு பட்டப் பெயர்போலும்.

    "ஆசு கவியா லகில வுலகெங்கும்
    வீசு புகழ்க காள மேகமே"
    என்று காளமேகப் புலவருக்கு மட்டும் 'ஆசுகவி' எனப் பட்டம் இருப்பதை நாம் அறிகின்றோம். மற்றைப் புலவர்கட்கு இப் பட்டம் இருந்ததாகத் தோன்றவில்லை. வீரகவிராயருக்கும் இப் பட்டம் இருப்பதாகத் தெரிகிறது.
     
    "கதிதருசீர் நல்லூர்வாழ் வீரன் ஆசுகவிராசன்
    கவியரங்கம் ஏற்றி னானே"

    என்ற சிறப்புப்பாயிர வடிகள் அதனைத் தெளிவாக விளக்குகின்றன.

    ஆசுகவி பாடுவது மிகவும் அரிய செயலாம். இன்ன எழுத்து. இன்ன இடத்தில் வரவேண்டும்; இன்ன சொல் இன்ன இடத்தில் வரவேண்டும்; இன்ன பொருள் அமைந்திருக்கவேண்டும்; இன்ன கவி பாடவேண்டும்; இன்ன அணி யமைந்திருக்கவேண்டும்; இத்தனை விநாடியிற் பாடவேண்டும் என்று அறிஞர் கூறியபடி அவையிலிருந்து பாடுவது 'ஆசுகவி' என இலக்கணங் கூறும்.

     
    "பேரெழுத்திற் சொல்லிற் பொருளிற் பெருங்கவியிற்
    சீரலங் காரத்திற் றெரிந்தொருவன் - நேர்கொடுத்த
    வுள்ளுரைக் கப்போ துரைப்பதனை யாசென்றார்
    எள்ளாத நூலோ ரெடுத்து"

    என்பது வெண்பாப் பாட்டியல்.


புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 17:19:46(இந்திய நேரம்)