Primary tabs
இங்கு, ‘ஐப்பசி’ என்பதற்கு, ஐப்பசி அஷ்டமியென்று பொருள்கொண்டது, ‘ஐப்பசி மதியமுன்ன ரட்டமிப் பக்கம்’ என்னும் (யசோ.130-ஆம்) கவியை நோக்கி சிறப்பென்றது-திருவிழாவை; ‘சிறப்பொடு பூசனை செல்லாது‘ என்பது அறிக. ‘ஒன்றலா‘ என்பது பலவகை என்றபடி. ‘சிறப்பது‘ என்பதில் ‘அது,‘ பகுதிப்பொருள் விகுதி. (11)
இதுவுமது
(இ-ள்.) காவல்மன்ன-(எங்களைக்) காத்தலில் வல்லவனான அரசே, தேவி சிந்தை சிதைந்தனள் சீறும் ஏல்-சண்டமாரி மணம் வேறுபட்டு வெகுளுவாளாயின், நோவு செய்திடும் நோய் - (நம் உடலுக்குத்) துன்பந்தரும் நோய்கள், பல ஆக்கிடும்-பலவற்றையும் உண்டுபண்ணுவாள்;ஆவி கொள்ளும- உயிரையுங் கொள்ளைகொள்ளுவாள்; அலாதனவுஞ் செயும்-இவையல்லாத மற்ற எல்லாத்தீங்குகளையும் செய்வாள்;(ஆதலின்), கடிது எழுக-(அத்தேவியின் சிறப்புச் செய்தற்கு) விரைந்து புறப்படுவீராக, என்றனா-என்று கூறினர். (எ-று.)
நமக்குத் தீங்கு நேராவகை காத்தல் வேண்டி அத்தேவிக்குச் சிறப்புச்செய்ய விரைந்தெழுக என்றரென்க.
நோவுசெய்திடும், நோய் பலவாக்கிடும் என்று தனித் தனிவாக்கியமாகப் பொருளுரைப்பினு மமையும். அலாதன-பகை, போர், மழையின்மை முதலியன வாகும். சிதைந்தனள், முற்றெச்சம், ஏல் என்பது எனில் என்பதன் மரூஉ. எழுகென்றனர், அகரம் தொகுத்தல் விகாரம். (12)