Primary tabs
அவ்வுண்மையைத் தொகுத்து ஒரு பொருளில் ஒரு சொல்லால் கூறவியலாததே நான்காம் பங்கமாகும்.
சிறந்த மாம்பழத்தின் உருகி இனிப்பாய் இருக்குமென்று சொல்லிவிடலாம்.அவ்வினிப்பு எப்படியிருக்கும் என்று வினவினால் அதை வேறு சொல்லால் விளக்கிக் கூற வியலாது. அத் தன்மைபோல ஒருபொருளின் தன்மைகளை உண்டு, இல்லை என்று கூறி விடலாம் அவ்வுண்டு மில்லையும் என்ற இரு தன்மைகளையும் சேர்த்து ஒரு சொல்லாகக் கூறவியலாததே சொல்லொணாமை யென்றுணர்க. அவ்வினிப்பைச் சொல்லால் கூறவியலாதேயன்றி அவ்வினிப்பு இவ்விடத்து இல்லாததன்று அங்ஙனமே, உண்டு இல்லை என்பதன் தன்மைகள் ஒருங்கே ஒரு சொல்லால் கூற வியலாதனவே யன்றி அவ் வுண்டு இல்லை என்ற இருதன்மைகளும் அவ்விடத்து இல்லாதன அல்ல; அங்ஙனமாயின் பொருள் சூனியமாகிக் கெடும். உலகிலுள்ள பொருள்களைத்தும் இயற்கையாலோ செயற்கையாலோ ஒவ்வொருவகையிலும் ஒரு தன்மையை உட்கொண்டிருத்தல் கண்கூடு. ஆதலின் சொல்லொணாமை என்ற நான்காம் பங்கத்தோடு உண்டு, இல்லை, உண்டுமில்லையும் என்ற மூன்றையும் கூட்டி முறையே 5. உண்மையும் சொல்லொணாமையும், 6. இன்மையும் சொல்லொணாமையும் 7. உண்மையு மின்மையும் சொல்லொணாமையும் என்று கூறுவது மற்றைய மூன்று பங்கமாகும். இவ் வேழுவகைக்கு மேற்பட்டு எவ்வகையில் ஆராய்ந்த போதினும் வேறு பங்கங்கள் (பிரிவுகள்) பிறவா வென்றுணர்க. இங்ஙனம் ஏழுவிதமாகக் கூறும் வழக்கினை, ‘உண்மை நல்லின்மை யுண்மை யின்மையு முரைக்கொணாமை, உண்மை நல்லின்மை யுண்மை யின்மையோ டுரைக்கொணாமை, நண்ணிய மூன்றுமாக நயபங்கமேழு‘ என்றும், ஸ்யாத் அஸ்தி, ஸ்யாத்நாஸ்தி, ஸ்யாதஸ்திநாஸ்தி, ஸ்யாதவக்தவ்யம், ஸ்யாதஸ்தியவக்தவ்யம், ஸ்யாத்நாஸ்தியவக் தவ்யம், ஸ்யாதஸ்திநாஸ்தியவக்தவ்யம் எனவும் கூறுவதனா லறியலாகும். ஸ்யாத் என்பது ஒரு ப்ரகாரத்தால் என்னும் பொருளது.