Primary tabs
மன்னன் சீறி அவ்விருவரையும் கொல்லக் கருதிய போழ்து ஓர் நல்லுணர்வு தோன்றி அவ்வெண்ணத்தை மாற்றிற் றென்க. வாளும் உணர்ந்தது என்றது வாளை எடுத்தான் என்று குறிக்கும். இவ்வாறு கருவியின்மேல் ஏற்றிக் கூறியது உபசாரவழக்கு. (45)
(இ-ள்.) மாதரார்-பெண்கள், எனையர்ஏனும் - எத்துணைக் கொடுமை புரிந்தவராயினும், வதையினுக்கு -கொலைத்தண்டனைக்கு, உரியர் அல்லர்-தகுதியுற்றவராகா, பேதை இவனும் - அறிவில்லாதவனாகிய இப் பாகனும்,பெண்ணின் அனையனே-(பிறப்பால் ஆணாயினும் தன்மையினால்) பெண்களைப் போன்றவனே; (அதுவுமன்றி), பிறிதும் ஒன்று உண்டு-மற்றொரு காரணமும் உண்டு (அதாவது), ஏதிலார் மன்னர் - பகைவரான அரசர்களின், சென்னி இடுதலுக்கு-தலைகளை வெட்டுதற்கு, உரிய - தகுதி வாய்ந்த, வாளின்-இவ் வெற்றிவாளால், தீது செய்-கொடுமைகளைச் செய்கின்ற, சிறு புன் சாதி-மிக அற்பமான சாதியினரை, சிதைத்தலும்-கொல்லுதலும், திறம் அன்று -வீரம் ஆகாது, என்றான்-என்று அரசன் எண்ணினான். (எ-று)
மாதர் கொலைக்கு உரிய ராகார்; இப்பேதையும் அனையனே ஆகலின், இவர்களைக் கோறல் வீரம் அன்றென்று அரசன் கருதினா னென்க.
மாதர் - காதல்; மாதரார் - காதலை யுடையவர். ஈண்டுப்பெண்கள் என்னும் பொதுப்பொருளில் வந்துளது. (46)