Primary tabs
செறுவு - பகைமையாலுண்டாகுந் தணியாக் கோபம் ‘ஆதி‘ என்றதனால் கொள்ளப்படும் மற்ற நான்கு குணமாவன - ஆயுவின்மை, நாமமின்மை, கோத்திரமின்மை, அழியாவியல்பு என்பன. எண்குணம் முதலியவற்றை “யசோ. 52 இல் அறிக. ‘ஆகி‘ என்றது இரண்டடித்தும் கூட்டப்பட்டது. (8)
(இ-ள்.) கருமனும் - சண்டகருமனும் (முனிவரரை நோக்கி), இறைவ - இறைவனே! களவு செய்தோர்கள் தம்மை - திருடிய குற்றவாளிகளை, எம் அரசு அருளினால் - எங்கள் வேந்தன் கட்டளையினால், இருபிளவாகச் செய்வன் -இரண்டு துண்டாக வெட்டுவேன் (யான் ஒருநாள்), பெரியதோர் சேரன்தன்னை - களவு செய்ததொரு பெருங்குற்றவாளியை, பின்னம்ஆய் சேதித்திட்டும் - பல துண்டுகளாக வெட்டியும், ஒரு வழியாலும் - (அவன் உடலில்) ஓர் இடத்திலும், சீவன் உண்டு என -உயிர் ஒன்று உண்டு என்று, கண்டது இல்லை - யான் கண்டதேயில்லை. (எ-று.)
இறைவ, ஒரு திருடனைச் சித்திரவதை செய்தும் அவனுடலில் உயிர் இருக்கக் கண்டேனில்லை யென்றா னென்க.
இதுவும் அடுத்த கவியும் ஒரு தொடர். தளவரன் முனிவரிடம் யான் உயிரைக் காணவேண்டி மூன்றுவிதச் சோதனை செய்தும் காணவில்லை என்று கூறுவான் தொடங்கி, ஈண்டு உடம்பைத் துண்டு துண்டாகத் துணித்தவிடத்தும் உயிரைக் காணவில்லை என்று கூறினான்: மற்றதைமேலே கூறுவான், ‘களவு செய்தோரை இரு பிளவாகச் செய்வன் ‘ என்றதனால், கொலை செய்தல் நஞ்சிடுதல் ஆகிய பெருங்குற்றஞ் செய்தோரைக் கொல்லுதல் சொல்லாமலே போதரும். (9)