தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



- 283 -

நிலையாமையைக் கருதி துறவு மேற்கொள்ளக் கருதினானென்க.

மேகம் முதலிய மூன்றும் முறையே போகம் முதலிய மூன்றிற்கும் உவமையாகும்.  இவை விரையக் கெடுத லியல்பு.‘போகமும் பொருளுமெல்லாம் மேகமும் திரையும் போலும்‘என்னுஞ் செய்யுளும், ‘இளமையு மெழிலும் வானத் திடுவிலினீண்டமாயும்‘ (மேரு, 728, 109) என்னுஞ் செய்யுளும் ஈண்டு ஒப்புநோக்கற்பாலன.  நினைவான் - நினைப்பவன் எனலுமாம்.

269. 
நாடுநக ரங்களும் நலங்கொள்மட வாரும்
 
ஆடுகொடி யானையதிர் தேர்புரவி காலாள்
 
சூடுமுடி மாலைகுழை தோள்வளையொ டாரம்
 
ஆடைமுத லாயினவொ டகல்கவென விட்டான்.

(இ-ள்.) (கலிங்கபதி), நாடு நகரங்களும் - --, நலம்கொள் மடவாரும் - அழகுடைய தேவியரும்,  ஆடுகொடி - அசைகின்ற கொடியும், யானை அதிர் தேர் புரவி காலாள்-யானை முதலிய நால்வகைப் படைகளும், சூடும்முடி -தலையில் சூடுகின்ற கிரீடம், மாலை - பூமாலை, குழை - குண்டலம், தோள்வளை - தோளணி, ஆரம் - முத்தாரம் ஆகிய  இவையும், ஆடை முதலாயின வொடு - ஆடை முதலியவற்றோடு, அகல்க என விட்டான் - நீங்குக என்று முறைப்படி துறந்தான்.

கலிங்கபதி, சிறந்த துறவு மேற்கொண்டானென்க.

அதிர்தேர் - பூமி அதிரச் செல்லும்தேர்.  தோள்வளை - வாகுவலயம் எனப்படும்.  ‘முதலாயினவொடு‘ என்றதனால்,  கோவணம் தலைமுடி மனக் குற்றங்கள் முதலியனவும் கொள்ளப்படும்.  ‘மணிமுடி ஆடைகுஞ்சி மனத்திடை மாசு நீக்கி‘  என்னும் (மேரு, 421. ஞ) செய்யுளை ஈண்டு ஒப்புநோக்கியறிக,  ஆடை உடுத்தல், சடைவளர்த்தல் முதலியவை, பேன் முதலிய க்ஷுத்ரஜீவன் உற்பத்திக்குக் காரணமாகிப் பாபஹேதுவாதலின் முற்றுந் துறந்த முனிவரர்களுக்கு அவைகளும் நீக்கற்பானவாதலின், ‘ஆடைமுதலாயினவொடு‘ என்றார்.  ‘இயல்பாகும் நோன்பிற் கொன்றின்மை யுடைமை, மயலாகும் மற்றும் பெயர்த்து‘




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:30:31(இந்திய நேரம்)