Primary tabs
மாகிய அந்நரகில், இனிய உளவாமோ - (அணுவளவாகிலும்) இன்பந் தருபவை இருக்குமோ? இல்லையென்றபடி.
நாரகனுக்கு உணவாக விஷத்தை ஊட்டினர் என்க.
நாரகர்க்கு விஷம் உணவாதலை, ‘கணமு மிடையின்றியெழும் பசியால், உணவென்றென வந்துலகத்துள நஞ்சு, இணையில்லென‘ என்னும் (மேரு, 944ம்) கவியால் அறியலாகும். நரகப் பிறப்பில் உள்ள உயிர்களெல்லாம், ‘அலிகளே‘ (தத்வார்த்த, 2 : 50) ஆதலின், ‘அது‘ என்று அஃறிணையாகக் கூறினார். இனி இவர்களையே (வடமொழியில் ஜீவன் என்பது ஆண்பாலாதலின்) நரகன் என ஆண்பாலாக வழங்குவதும் மரபு. ஆசிரியர் இரக்கத்தால் ‘ஐயோ’ என்றார்.
(இ-ள்) மிகை திறலோய் - மிக்க வலிமையுடையமன்னவ ! முன்னும் நுமர் தம் தசை - முன்னர் நும்உறவினரின் ஊனை, முனிந்திலை நுகர்ந்தாய்க்கு - வெறுப்பின்றி புசித்த உனக்கு (இப்பொழுது), உன் அவயவங்கள்தினல் - நின் அவயவங்களைத் தின்பது, இன்னும் இனிதேஎன்று - அதைவிட இனிதாகுமென்று இகழ்ந்து, தன் அவயவம் பல உழலத் தடிந்து - அந்நாரகனின் பல உறுப்புக்களை அவன் துடி துடிக்க அரிந்து, வைத்து - அவன் வாயில் நுழைத்து, தின்ன என - தின்பாயாக என்று துன்புறுத்த, நொந்து - மனம் நொந்து, அவைதின்னும் - அவ்வுறுப்புக்களைத் தின்னும். நேர்ந்து என்றும் பாடம்.
தமர்புலாலையுண்ட தீவினையால் அந்நாரகன் தன் அவயவத்தைத் தானே தின்றனனென்க.
நுமர்தசை என்றது, எருமையாயும் ஆடாயும் பிறந்திருந்த மாமி, கணவன் இவர்களின் ஊனை: (யசோ.215.)