Primary tabs
(இ-ள்.) மன்னவ- (யசோமதி) வேந்தே, மன்னன் - யசோதர வரசன், மயில் ஆய் - ஆண்மயிலாயும், முள்மயிரி எயினம் - முடபோன்ற மயிரையுடையதாகிய பன்றி (முள்ளம்பன்றி) யாயும், மீன் ஆய் - மீனாயும், பின் இருமுறை தகரும்ஆகி அவன் - பின்னர் இரண்டு தடவை ஆடாயும் பிறந்தவன், ஏகி - (அதனின்றும்) போய், மன்னு சிறைவாரணமது ஆகி - பொருந்திய சிறகுகளையுடைய கோழியாகி (அப்பிறவியில்), வதம் மருவி - (தன் சக்திக்குத்தக்கவாறு) விரதங்களை ஏற்று, (அதனால் இப்பொழுது), நின் மகன் அபயன் ஆகி - உன் மகனான அபயருசியாகி, வளர்கின்றான் - --, (எ-று.)
யசோதரன், மயில் முதலிய பிறவிகளை யெய்தி ஈண்டு அபயருசி யாயினா னென்க.
வாரணம் அது, ‘அது‘பகுதிப் பொருள் விகுதி. மயிரி-மயிரையுடையது: மயிரிமுள் எயினம் என்றது முள்ளம் பன்றியை.
(இ-ள்.) சந்திரமுன்மதி - சந்திரமதியும். ஞமலி நாகமொடு இடங்கர் வந்து - நாயும் கரும்பாம்பும் முதலையுமாகப் பிறந்து, (பின்), மறி - பெண் ஆடாயும், மயிடம் உடன் - எருமையாயும் பிறந்ததனோடு, வாரணம் உம் ஆகி-கோழியுமாகி, முந்தை வினை நெகிழ - பழைய தீவினைகள்தளர, முனி மொழியும் வதம் மருவி - அகம்பன முனிவர் மொழிந்த விரதங்களை ஏற்று, வந்து - (அந்நல்வினையால்) வந்து, உன்மகள் அபயமதி ஆகி - உன் மகளாகிய அபயமதியாகப் பிறந்து, வளர்கின்றாள்- --. (எ-று.)