தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium


யசோதா காவியத்தின் உரையைப்பற்றிய பாராட்டுரைகள்

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சித்துறைத் தலைவராயிருந்த

ஸ்ரீ.எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் எழுதியது

யசோதர காவியம் முதன்முதல் காஞ்சீபுரம் ஸ்ரீ பாகுபலி நயினாரால், கி.பி. 1869-ல் அச்சிடப்பட்டது; எனினும், தமிழுலகில் அது பரக்க வழங்கிற்று என்று கருத இடமில்லை. ஸ்ரீ சி. வை. தாமோதரம் பிள்ளை 1889-ல் வெளியிட்ட தமது சூளாமணிப் பதிப்புரையில் இக் காவியத்தை ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றெனக் குறிப்பிட்டு எழுதியமையால், இதனைக் குறித்துத் தமிழறிஞர்கள் பலரும் அறிய நேர்ந்தது. வெகுகாலமாக அச்சுப் பிரதிகள் கிடைக்கவில்லை. 1908-ல் தில்லையம்பூர் வேங்கடராம ஐயங்கார்  ஆங்கில முன்னுரை, ஜைன சமய விவரணம், ஜைன சமய பரிபாஷை, யாசோதரன் சரித்திரம், அரும்பத உரை முதலியவற்றோடு கூடிய ஒரு பதிப்பு வெளியிட்டனர். சில ஆண்டுகளுக்குப் பின் இப்பதிப்புப் பிரதியும் கிடைப்பது அரிதாயிற்று. இதன் பின்னர் 1944-ல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் ஒளவை, சு.துரைசாமிப் பிள்ளை உரையுடன் இக் காவியத்தைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளனர். இப்பதிப்புத்தான் இப்பொழுது கிடைக்கக் கூடியதாக உள்ளது.

இப்பொழுது எனது நண்பர் ஸ்ரீ.பூர்ண சந்திர நயினார் அவர்கள் பல பிரதிகளையும் ஒப்புநோக்கி, செம்மையான பாடத்தைத் தேர்ந்தெடுத்து உரையுடன் பல ஆராய்ச்சிக் குறிப்புக்களோடு இப் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளார்கள். இவர்கள் ஜைன சமய சாஸ்திரங்களில் மிக்க பயிற்சியும், ஜைன ஆசிரியர்கள் தமிழில் எழுதியுள்ள நூல்களை அச்சின் வாயிலாக வெளியிட்டு உபகரிக்கவேண்டும் என்ற ஆர்வமும், தமிழுணர்ச்சியும் உள்ளவர்கள். எனவே, இவர்களால் எழுதப்பெற்று இப்பொழுது வெளி வந்துள்ள உரை மிகச் செவ்விதாக அமைந்திருக்கும் என்பது சொல்ல வேண்டா. அருகர் வணக்கமாகிய 53-ம் செய்யுளுரையை நோக்கினால் இதன் உண்மையை அறியலாம். 55-ம் செய்யுளின் உரையில் சப்தபங்கி நியாயத்தை மிக முயன்று விளக்கியிருக்கிறார்கள். அன்றியும், சிந்தாமணி முதலிய பெருங் காவியங்களிலிருந்தும் பிற நூல்களிலிருந்தும் மேற்கோள்கள், ஒப்புமைப்பகுதிகள் முதலியன காட்டித் தமது உரையை இவர்கள்திறம் பட அமைத்திருக்கிறார்கள். இதுவேயன்றி, இக்காவியத்தின் முதல்நூலாகிய யசோதா சரிதத்தினின்றும் அங்கங்கே மேற்கோள் காட்டி, தாம் கூறும் பொருளை வற்புறுத்தியு மிருக்கின்றனர். இங்ஙனமாகப் பற்பல சிறந்த அம்சங்கள் இவ்வுரையிலுள்ளன.

இங்கே கூறிய முதல்நூல் வாதிராஜசூரி என்பவரால் கி,பி, 11-ம் நூற்றாண்டின் முற் பகுதியில் இயற்றப்பெற்றது. தமிழ்க் காவியம் இயற்றியவர் பெயரும் காலமும் தெரியவில்லை. இந்நூலை உரைகாரர்கள் ஒருவரும் எடுத்தாளாமையினாலே, மிகப்பிற்பட்ட நூல் என்றே இதனைக் கொள்ளுதல் வேண்டும்.

இது போன்ற பல நூல்களை வெளியிட்டு இவர்கள் தமிழுலகிற்கு உபகரிக்குமாறு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிக.

 
காந்திநகர், 10-3-51  

எஸ். வையாபுரிப் பிள்ளை


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 11:16:04(இந்திய நேரம்)