தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium


உரையாசிரியச் சக்கரவர்த்தி

ஸ்ரீமத் உ.வே.வை, மு, கோபாலகிருஷ்ணமாசார்யரவர்கள் எழுதியது

யசோதா காவிய மென்பது, ஜைன மதத்தவ ரியற்றியதாகி யசோதர னென்பானுடைய சரிதையைத் தெரிவிக்கும் ஒரு நூலாகும். காவிய மென்ற சொல் கவியின் செயலென்ற பொருளை யுடையதாயினும், காரணவிடுகுறியாகிச் சில வகையான இலக்கணமமைந்த நூலைக் காட்டும். இந்தக்காவியம் என்ற சொல்லே, காப்பியம் என்றும் தமிழில் வழங்கப் பெறுகின்றது,

இதனைத் தண்டியாசிரியர் பெருங்காப்பிய மென்றும் காப்பியம் என்றும் இருவகையாகப் பகுத்து, ‘பெருங்காப்பிய நிலை பேசுங்காலை’ என்று தொடங்கிச் சில சூத்ரங்களால் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப்பயனை யடையதற்கு ஏற்பக் கூறுவது பெருங்காப்பிய மென்றும், அறமுத னான்கினும் குறைபாடுடையது காப்பியமென்றும் கூறினர். இங்குக் கூறியவாற்றால், காவியத்துள் இருவகை யுண்டு என்பது பெறப்படும்.

இனி ஒரு சாரார் சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐந்தினையும் ஐம்பெருங்காப்பிய மென்று கூறி, சூடாமணி யசோதரகாவியம் உதயண காவியம் நாககுமார காவியம் நீலகேசி என்னும் ஐந்தையும் ஐஞ்சிறுகாப்பியம் என்று கூறுவர். சீவக சிந்தாமணி முதலிய ஐந்து நூல்களும் ஐங்காப்பியம் என்பது நன்னூலின் மயிலைநாதருரையிற் கண்டது. இவ்வாறு சூடாமணி முதலியன ஐந்தும் ஐஞ்சிறு காப்பியமென்னும் வழக்குப் பழைய நூலிற் காணக் கிடைத்தலது; மற்றும், ‘அவ்வாறு வழங்குவது ஏற்புடையதா?’ என்பதும் ஆராய்தற்கு உரியது. யசோதா காவியத்தை நானூறு செய்யுட்கும் குறைவாக வுள்ளது என்ற காரணம் பற்றிச்சிறுகாப்பிய மென்று வழங்கலாமென்று சிலர்க்குத் தோன்றக்கூடுமானாலும் சூளாமணி சிந்தாமணியைப் பல வகையாலும் ஒத்திருக்க அதனைச் சிறுகாப்பியம் என்றல் ஏற்குமா? உதயண காவியமோ, பாராட்டுமாறு சிறப்புற அமைந்ததில்லை; நாககுமார காவியமென்பது பெயரளவால் அறியப்பட்டிருப்பதன்றி, அதனைக் கண்டவர் எவருமில ரென்று கருதுகின்றேன். நீலகேசி யென்பது ஆருகத மதத்தவரான நீலகேசியார் மற்றை மதத்தவரின் கொள்கைகளைக் கண்டனஞ்செய்து தம்மதத்தைப் பிரவசனம் செய்ததைத் தெரிவிப்பதன்றிக் காவிய மென்றற்கு ஏற்புடைய தன்று.

இப்போது கூறிய வாற்றால் ஐஞ்சிறுகாப்பியம் என்ற வழக்குஏற்புடையத் தன்றென்பது பெறப்படும். எங்ஙனாயினும், யசோதரகாவியத்தை ஒரு காவிய மென்றற்குத்தட்டொன்றில்லை. இந்தக் காவியம் ஜைன மத நுட்பங்களைத் தன்னுட் கொண்டிருத்தலால், அந்த ஜைன மதத்தின் தத்துவத்தை யுணர்ந்தார்க்கு அன்றி மற்றையோர்க்கு இதன் உண்மைப் பொருள் விளங்காது. ஆகவே, ஜைனமத நுணுக்க மறிந்தோரே இதற்கு உரை வகுக்க வுரியர்.

இப்போது, ஜைன மதத்தில் வல்ல நல்லாசிரியரையடுத்துத் தமிழ்மொழியிலும் வடமொழியிலு முள்ள ஜைன சமய நூல்களைக் கற்றறிந்த திருவாளர் வீடு்ர் பூர்ணசந்திர நயினார் இந்த யசோதா காவியத்திற்கு உரை யெழுதியுள்ளார். அன்னார் பிறப்பிலேயே ஜைன ராகப் பிறந்து அந்த மதத்தில் ஊற்ற முள்ளவராய்த் தாம் உழைத்துக் கற்றறிந்த கொள்கைகளை ஏற்ற பெற்றி யமைத்து உரை வகுத்துள்ளதனால், இவ்வுரை இதற்கு முன்னர்த் தோன்றிய உரையினும் சிறப்புறு மென்றும் தமிழர்க்கு ஒரு நல்விருந்தா மென்றும் உறுதியாய்ச் சொல்ல வல்லேன்.

வை. மு. கோபாலகிருஷ்ணமாசார்யன்


புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 11:25:35(இந்திய நேரம்)