தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kanchi Puranam


vi

பாடியத்தைத் தமிழில் இயற்றியுள்ளார்கள். இவர்கள் செய்தது காஞ்சிப் புராண முதற்காண்டம் . இரண்டாங்காண்டம் இவர்கள் மாணவர் பன்னிருவருள் சிறந்த மகாவித்துவான் கவி ராட்சசர் என்று புகழப்பட்ட கச்சியப்ப முனிவரர் செய்தது. ஆக இரண்டு காண்டம் மூலமட்டும் புங்கத்தூர் உயர்திரு கந்தசாமி முதலியார் அவர்கள் இற்றைக்கு 85 வருடத்திற்குமுன் வெகுதானிய புரட்டாசி மாதத்தில் சென்னை ஆதிகலாநிதி அச்சகத்திற் பதித்துள்ளனர். பின்னர்க் கி.பி. 1910 சாதாரண வருடம் வைகாசி மாதத்தில், மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவரும் சைவசித்தாந்த சாத்திரப் பிரசாரகருமாகிய உயர்திரு வண்ணக்களஞ்சியம் நாகலிங்க முதலியாரவர்கள் சென்னைக் கலாரத்னாகர அச்சகத்தில் பதிப்பித்துள்ளார் .

பின் முதற்காண்டம் மாத்திரம் சோடசாவதானம் உயர்திரு சுப்பராய செட்டியாரவர்களாலும் காஞ்சிபுரம் சித்தாந்தபோதரத்னாகரம் ஆலாலசுந்தரம் பிள்ளையவர்களாலும் பதவுரை எழுதி அச்சிடப்பெற்றது. பின்னர், இம் முதற்காண்டத்திற்குச் காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளி வித்துவான் சைவசித்தாந்த சாத்திரப் போதகாசிரியர் புலிசை உயர்திரு அருணை வடிவேல் முதலியார் அவர்கள் குறிப்புரை எழுதித்தரக் காஞ்சிபுரம் நம் மெய்கண்டார் கழகத்தினரால் 1937 மெய்கண்டான் ஆண்டு 714 ஈசுர வருடம் ஐப்பசி மாதத்தில் காஞ்சிபுரம் குமரன் அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டது. இதுகாறும் இரண்டாங் காண்டத்திற்கு யாரும் ஓர் விளக்கமும் எழுதாமையால் காஞ்சிபுரம் திருவள்ளுவர் செந்தமிழ்ப் பாடசாலை ஆசிரியர் உயர்திரு. பொன். சண்முகனார் அவர்களைக் கொண்டு குறிப்புரை எழுதி 1953வது வருஷத்தில் காஞ்சிபுரம் ஸ்ரீநிலையம் பிரசில் மேற்படி பாடசாலையின் 20வது வெளியீடாக அச்சிட்டு வெளியிட்டேன்.

முதற்காண்டங் காப்பி யொன்றுங் கிடைக்காமையால் மேற்படி பாடசாலை ஆசிரியரைக் கொண்டு பொழிப்புரை யெழுதி மேற்படி பாடசாலையின் 22வது வெளியீடாகப் பல அன்பர்கள் உதவியால் காஞ்சிபுரம் உயர்திரு S. காளப்ப முதலியார் அவர்களது முத்தமிழ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடுகின்றேன் . நம் சைவ உலகும் தமிழுலகும் ஏற்றுப் போற்றும் வகையால் ‘சேக்கிழார் பெருமானாரும் சிவஞான முனிவரரும்’ என்னும் நூல் வெளிவரத் துணை செய்ய வேண்டுகின்றேன்.

ஸ்ரீ சிவஞான சுவாமிகள் திருவடி வாழ்க மெய்கண்டநாதன் விரைகழல் வெல்க சைவமும் தமிழும் தழைத்தினி தோங்குக.

பொன்-குமாரசுவாமி அடிகள்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 13:03:25(இந்திய நேரம்)