தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kanchi Puranam-சிவஞான சுவாமிகள் வரலாறு


xLiii

செயலைக் கண்டு கண்டு மகிழ்ந்த தாயாராகிய மயிலம்மையார் எதிர் சென்று துறவோரை வணங்கி இன்சொற்கூறி வரவேற்றனர். தந்தையாராகிய ஆனந்தக்கூத்தர் அப்பொழுது வெளியே சென்றிருந்தனர்.

அந்நிலையில் மகனார் தம் தாயாரிடம் முனிவரர்க்கு விருந்தமுது படைக்க வேண்டினார். மகிழ்ந்த அன்னையார் அடியார்களுக்கு அமுதூட்டிக் களிப்பித்தனர். கற்புடைய மடவார் கடப்பாட்டில் ஊட்டுகையில் தாயின் சேயின் மனநிலையும் வாய்மொழியும் திருத்தொண்டும் வாழ வாழ்த்தினர் ஆதீன முனிவரர்.

மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்துக் கண்மணிபூண்டு காவி உடுத்துத் தாழ்சடை பூண்டு விளங்கிய தவக்கோலத்தும் திருவுள்ளச் சீலத்தும் தம்வயமிழந்து அவற்றின் வழிநின்ற முக்களாலிங்கர் அம்மையார் உபசரித்த காட்சியும் கூட மழலைச்சொல்லில் அருட்பாவாக வடிவெடுத்துத் துறவோர் திருச்செவி என்னும் மதகின் வழித் தேனூறலாகச் சென்று பெருக்கெடுத்தது. அது வருமாறு:

“அருந்ததிஎன் அம்மை அடியவர்கட் கென்றும்
திருந்த அமுதளிக்கும் செல்வி -- பொருந்தவே
ஆனந்தக் கூத்தர் அகமகிழத் தொண்டுசெயும்
மானந் தவாத மயில்”

என்பதாம்.

நெட்டுருச் செய்த பாடலை ஒப்புக்கொண்டு முன்னறி தெய்வமாகிய அன்னையை முதற்கண் போற்றினர். திண்ணிய கற்புடைமையை ‘அருந்ததி’ எனவும், குடநீரட்டுண்ணும் இடுக்கட் பொழுதும் கடனீர் அற உண்ணும் விருந்தினர் வரினும் இடனில் பருவம் என்றொப் புரவிற் கொல்காமையை ‘என்றும்’ எனவும், கடப்பாட்டில் ஊட்டும் வன்மையைத் ‘திருந்த’ எனவும், மடைத்திறத்தை ‘அமுது’ எனவும் இப்பேற்றினை இயல்பாக உடைமையைச் ‘செல்வி’ எனவும் தந்தை தாயார் பெயர் சிதைவு பெறாத சீர் அமைய ‘ஆனந்தக்கூத்தர்’ எனவும், ‘மயில்’ எனவும் தொண்டு செய்வோர் அகமும் செயப்படுவோர் அகமும் மகிழப் பொதுவாக அமைய ‘அகம் மகிழ’ எனவும் சிவபுண்ணிய மாக்குவார் ‘தொண்டு’ எனவும் தந்நிலையிற்றாழாமையும் தாழ்வு வந்துழி உயிர்வாழாமையுமாகிய பெருமையை ‘மானம்’ கெடவந்துழியும் நீக்கி நிறுத்துவார் ‘தவாத’ எனவும் நல்ல என உறுப்புநூலவர் உரைக்கும் நலமும், சாயலும் பெயரும் அடங்க ‘மயில்’ எனவும் கூறினர். இருவர்தம் செயலையும் முற்றக்கண்ட துறவோர் வாழ்த்தி விடைபெற்றுச் சென்று ஆங்கோர் திருமடத்தில் தங்கினர். வந்த தந்தையார் யாவும் அறிந்து மகிழ்ந்து புதல்வரொடும் சென்று துறவோரை வணங்கினர்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 13:09:49(இந்திய நேரம்)