Primary tabs
சென்னைப்
பல்கலைக் கழக உறுப்பினரும், வழக்கறிஞரும் ஆகிய திரு.
சி. கே. சுப்பிரமணிய முதலியார், பி.ஏ. அவர்களால் மூலபாடத்தை எடுத்து
முதலிறுதிகளை அனுவதித்துக்கொண்டு பொழிப்புத் திரட்டியும், பின்னர்ப்
பதசாரத்தை விளக்கியும், எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் கூறியும்,
தேவார திருவாசகங்களிலும் பதினான்கு சைவ சித்தாந்த சாத்திரங்களிலும்
திருக்குறள் கம்ப ராமாயண முதலிய நூல்களிலும் மேற்கொள் எடுத்துக்
காட்டிப் பொருள் நிச்சயஞ் செய்தும் எழுதப்பட்டிருக்கும் இவ்வரிய பெரிய
ஆராய்ச்சியுரை கற்போர்க்குப் பெரிதும் பயன் தருமென்று கூறுவது சிறிதும்
மிகையாகாது.
மேற்றிசைக்
கல்விமான்கள் வரம்பு கடந்து பழைய வைதிக சைவக்
கொள்கைக்கு மாறாக இந்நாளில் எழுதிவரும் வியாசங்களைப் படித்து மன
நிலை தடுமாறி வரும் இக்கால மக்களுக்கு இவ்வுரை பெரிதும்
பயன்படுமென்று நினைக்கின்றோம்.
"செந்தமிழ்ச்செல்வி"
(யுவ வருடம் வைகாசி மாதம்)
சென்னைப்
பல்கலைக்கழக உறுப்பினரும், கோவைத் தமிழ்ச்சங்கத்
துணைத்தலைவரும், வழக்கறிஞருமாகிய சைவத் திருவாளர் - சி. கே.
சுப்பிரமணிய முதலியார், பி.ஏ. அவர்கள் தாம் நெடுங்கால முயன்று அரிதிற்
சேர்த்த ஆராய்ச்சிக் குறிப்புக்களுடனும், தலக் குறிப்புக்களுடனும், வரலாற்றுக்
குறிப்புக்களுடனும், பல படங்களுடனும் கண்ணைக் கவரும் வகையில் ஒரு
விரிவாராய்ச்சியுரை எழுதிச் சஞ்சிகை சஞ்சிகையாக வெளியிட முன்வந்ததைக்
கண்டு கழிபேருவகை யெய்துகிறோம். முதற்சஞ்சிகை எதிர்பார்த்த அளவிற்கு
மேலாகப் பல அரிய பெரிய உண்மைக் குறிப்புக்களையுட்
கொண்டிருத்தலினாலே இவ்வுரை மற்றிதுகாறும் வெளிவந்துள்ள உரைகள்
பலவற்றினும் மேம்பட்டதாய் விளங்கும் எனத் துணிந்து கூறலாம் ..............................
சிறந்த இவ்வுரை வெளிவருவதற்குப் பலவாற்றானும்
துணைபுரியும் கோவைத் தமிழ்ச் சங்கத்தார் திருப்பணி பெரிதும் பாராட்டற்
குறித்தாம்.
"இந்துசாதனம்"
(இலங்கை - யுவ வருடம் புரட்டாசி மாதம் 16 தேதி)
பெரியபுராணமென்னுந்
திருத்தொண்டர் புராணம் :- சென்னைச்
சர்வகலா சங்க அங்கத் தினரும், அதன் கலைக்குழு உறுப்பினரும், கோவைத்
தமிழ்ச்சங்க உதவித் தலைவருமாய சைவத்திரு. சி. கே. சுப்பிரமணிய
முதலியார், பி.ஏ. அவர்கள் சைவ சமயத்திற் கொண்டுள்ள அபிமானங்
காரணமாக, மேற்படி புராணத்தை ஆங்காங்கு வேண்டிய ஆராய்ச்சிக்
குறிப்புக்களுடனும், தலக் குறிப்புக்களுடனும், இன்னும் பல அரிய
விஷயங்களுடனும் வெளியிட்டுள்ளார். ஆரிருள் வாய்ப்பட்டு அவஸ்தைப்படும்
சைவசமயிகட்கு ஒரு விளக்கொளி கிடைத்தன்னவாய் முதலியாரவர்கள்
செய்துவரும் திருத்தொண்டு பெரிதும் பாராட்டப்படத்தக்க தொன்றாம். சைவ
சித்தாந்த உண்மைகளையும், கருத்துக்களையும் எடுத்துக்காட்டிச் செல்லும்
ஒழுங்கு படிக்கப்படிக்கத் தெவிட்டா இன்பந் தருகின்றது. சைவ சமயச்
சரிதைகளை எம்மனோர்க்கு எடுத்துக்காட்டுவது பெரியபுராண மொன்றே.
இத்தகைய புராணத்தைத் தக்கமுறையில் படிப்போர் மனதிற் பதியும் வண்ணம்
உரையெழுதிய இவ்வாசிரியர்க்குச் சைவ மக்களாகிய நாமெல்லாம் பெரிதுங்
கடப்பாடுடையேமாவேம். பொற்பூவுக்கு நாற்றமுடைத்தன்னவாய் நல்ல
காகிதத்தில் அழகாகக் கண்ணைக் கவரும் பான்மையதாய்
அச்சிடப்பெற்றிருக்கிறது.