தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

இன்ப நலம் பல செறிந்த இவ்வுரை நூல் இறவா இன்பந்தரும்.
சிவபத்தர்களே யன்றி இன்சுவை ததும்பும் தமிழிலார்வமுடையார் பலரும்
கற்று இன்புறுந்தகுதியது. இவ்வுரை நூலைக் கண்டு நாம் பெரிதும்
இன்புற்றாம். சிவனருள் சிறக்க; சிவபத்தி வளர்க; இந்நூல் செழிக்க; உலகம்
இன்பம் பெறுக.


"சித்தாந்தம்"

பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணம்

திரு. சி. கே. சுப்பிரமணிய முதலியார், பி.ஏ. அவர்கள் உரை -
முதற் சஞ்சிகை

இச்சஞ்சிகையைத் திரு. முதலியாரவர்கள் நமது பார்வைக்கு அனுப்பி
வைத்தமைக்காக அவர்கட்கு நன்றி கூறுகிறோம். திரு. முதலியாரவர்கள்
பெரிய புராணத்தைத் தமது ஆயுள் முழுமையும் பயின்று ஆராயும் சிறந்த
நூலாகக் கொண்டுள்ளாரென்பது சைவ உலகம் அறிந்ததொன்று. சில
ஆண்டுகட்கு முன் இப்பெரியார் சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆதரவில்
பெரிய புராணத்தையும் சேக்கிழாரையும் பற்றிய சொற்பொழிவுகள் சிலவற்றை
நிகழ்த்தியதும் அன்பர் பலர் நினைவிலிருக்கும். இவ்வுரை வெளியீட்டில்
தமக்குத் தேவார முதலிய திருமுறைகளிலுள்ள சிறந்த பயிற்சி, நுண்ணிய
ஆராய்ச்சி முதலியவைகட்கேற்ப இவ்வுரையாசிரியர் பற்பல நுட்பமான
பொருள்களை மிகத் திறம்படத் திருமுறை மேற்கோள்களோடு
விளக்கியுள்ளது பெரிதும் பாராட்டத்தக்கது. கல்வெட்டு முதலிய சரித்திரச்
சான்றுகளும், தில்லை, திருக்கைலாயம் முதலிய தலங்களின் படங்களும்
இந்நூற்றாண்டுக் கேற்ற முறையில் இவ்வெளியீட்டில் சேர்க்கப் பெற்றுள்ளன.
திருமுறை யாராய்ச்சியில் தலைசிறந்து விளங்கிய காலஞ்சென்ற கயப்பாக்கம்
- சதாசிவ செட்டியார், பி. ஏ. அவர்களது குறிப்புரைகளும் இடையிடையே
தரப்பெற்றுள்ளன.

பெரிய புராணத்தை ஒரு சமய நூலாகமட்டும் கொள்ளாது ஒரு சிறந்த
தமிழ்க் காவிய நுலாகக் கொண்டு காவியச் சுவை நிரம்பிய பகுதிகளை
இவ்வுரையாசிரியர் செம்மையாக விளக்கியுள்ளது மிகவும் விரும்பத்தக்க
முறையேயாம். இந்நூலிற் பொதிந்து கிடக்கும் சாத்திரக் கருத்துக்கள் பல,
உந்தி களிறு உயர் போதம் சித்தி முதலிய சிறந்த சாத்திர மேற்கோள்களோடு
விளக்கப்பெற்றுள்ளன.

தமிழிலும் சைவத்திலும் பற்றுடைய ஒவ்வொருவரும் இவ்வுரை
வெளியீட்டை வாங்கிப் பயன் பெறுக. இப்பெரும் பணி முட்டின்றி
முடிதற்குரிய எல்லா நலங்களையும் திரு. முதலியாரவர்கட்கு முழுமுதற்
கடவுள் அளிப்பாராக.


"ஞானசித்தி"

இலங்கை - யுவ வருடம் புரட்டாசி மாதம் 15 தேதி - 1935 ஆம்
வருடம் அக்டோபர் மாதம் 1 தேதி

பெரியபுராண மூலமும் உரையும் - முதற் சஞ்சிகை :- கோவைத்
தமிழ்ச் சங்கத்தாரிடமிருந்து உரையுடன் கூடிய பெரிய புராண முதற்
சஞ்சிகையொன்று மதிப்புரைக்காக நமது பார்வைக்கு வந்திருக்கிறது. அதனை
நாம் ஆங்காங்குப் பன்முறை படித்துப் பார்த்தோம். அது நமக்கு மிகவும்
மகிழ்ச்சியை விளைவித்தது.

சைவ சமயத்திற்குப் பெரிய புராணம், கந்தபுராணம், திருவிளையாடற்
புராணம் என்னும் மூன்றும் மூன்று கண்களென்று கூறுப. அத்தகைய
மூன்றனுள் ஒன்றாகிய பெரிய புராணத்திற்கு உரை காணும் தகுதி
எல்லாருக்கும் இயைவதன்று.

சைவ சமய நூல்களுள் தலைசிறந்து விளங்கும் பெரிய புராணமென்னும்
அருட் காவியத்திற்குப் பல்வகை நயமும் ஒருங்கமைந்த உரையொன்று
வைதிக சைவ நன் மக்களுக்கு வேண்டற்பாலதேயாம்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 10:15:10(இந்திய நேரம்)