தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

மகாமகோபாத்யாய, தாட்சிணாத்ய கலாநிதி
பிரம்மஸ்ரீ டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் அவர்கள்

சொற்பொருட் சுவை மலிந்த நூலாகிய பெரிய புராணத்தைப் பலர்
பல வருஷங்களாக ஆராய்ந்து குறிப்புரையும் விரிவுரையும் எழுதிப்
பகுதிகளாகவும், முழுப் புத்தகமாகவும் வெளியிட் டிருக்கின்றனர்.
கோயம்புத்தூர் வழக்கறிஞராகவுள்ள ம - ள - ள - ஸ்ரீ ஸி. கே.
சுப்பிரமணிய முதலியாரவர்கள்;
விரிவான உரையுடன் வெளியிட்டு வரும்
பெரியபுராணச் சஞ்சிகைகள் சிலவற்றைப் படித்துப் பார்த்தேன். இவ்வுரை
முதலியார் அவர்களுடைய ஆராய்ச்சித் திறனையும், கல்வியாற்றலையும்
நன்றாக விளக்குகின்றது.

தல சம்பந்தமான செய்திகளும், வேறு நூற் கருத்துக்களும்,
மேற்கோள்களும், சாஸனப் பகுதிகளும், படங்களும் இவ்வுரையில் உரிய
இடங்களில் மிக நன்றாக அமைந்துள்ளன. இவ்வளவு உழைத்து எழுதப்பட்ட
உரை இந்நூலுக்கு இதுகாறும் இல்லை. இவ்வுரையைப் படிப்பவர்களுக்குப் பல
அருமையான செய்திகள் விளங்கும்.

முதலியாரவர்களுடைய நன்முயற்சி அவர்களுக்குப் புகழ்
புண்ணியங்களை யளிக்குமென்பதில் ஐயமில்லை.


திருவாளர் - பண்டிதமணி - மு. கதிரேசன் செட்டியார் அவர்கள்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர், அண்ணாமலைநகர்

தாங்கள் அரிதின் ஆராய்ந்து இயற்றிய பெரியபுராண உரைப்பகுதிகளை
ஆங்காங்குப் படித்து பார்த்தேன். என் உள்ளத்தை மிகவும் இன்புறுத்தின.
இதுவரை வெளிப்பட்ட உரைகளுள் இது சிறந்ததாகும் என்பதற்குப் பல
சான்றுகளுள்ளன. முதலிற் பொழிப்பாகத்திரட்டியும், பின்னர்ச்
சொற்பொருணயங்களைத் தனித்தனியே எடுத்து விளக்கியும், சைவசித்தாந்தக்
கருத்துக்களை உரிய இடங்களில் இயைத்துக்காட்டியும் செல்லும் உரைநடை
ஒழுங்கு பயில்வார்க்குப் பெரிதும் உபகாரமாகும். சைவ சமய சரிதத் தலைநூல்
பெரியபுராணமாகும். அதற்கு உரைகாணும் தகுதி பலவகையிலும் தங்களுக்கு
உள்ளதென்பதை இத்தமிழ்நாடு நன்கு அறியும். மேற்படி சஞ்சிகையின் பதிப்பு
அழகு கண்ணைக் கவர்கின்றது. இங்ஙனம் உள்ளுறைப் பொருளும் பிற
அமைப்பும் ஒருங்கு சிறந்து விளங்கும் தங்கள் உரை வெளியீடு தமிழ்
நிலத்தார்க்கு இவ்வமயம் இன்றியமையாததாகும்.


திருவாளர் - டி. பி. கிருஷ்ணசாமி முதலியார் அவர்கள், எம்.ஏ., பி.எல்.,
சில்லாக்கல்வி, அதிபர், தென்னாற்காடு

"..........It is a most meritorlous work"


திருவாளர் - பண்டிதர். ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள்
தமிழ்ப் பேராசிரியர், பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்.

தாங்கள் அரிதின் ஆராய்ந்தறிந்து திரட்டி வெளியிடும்
அரும்பொருள்களைச் சுவைத்துப் பயனுறுதற்கு இன்னும் பருவம் வரப்
பெறாதேனாயுள்ளேன் என்பதனை நாணத்துடன் தெரிவிக்கவேண்டியிருக்கிறது.
எனினும் சின்னாளில் அவற்றைப் பெரிதும் துய்த்து மகிழுவேன் என
நம்பியுள்ளேன். இங்ஙனம் பொருள் நுட்பங்களை இன்னுஞ்
சுவைத்திலேனாயினும் வெளியீட்டிற் காணப்படும் பல வகைச்
சிறப்புக்களையும் அவற்றிற்கான தங்கள் அருமுயற்சிகளையும் அறிந்து
மகிழ்ந்துகொண்டிருக்கின்றேன். வெளியீட்டில் வந்து கொண்டிருக்கும்
படங்கள் சரித்திரங்களின் உண்மைத் தன்மையை விளக்கி யாவர்க்கும் புதிய
உணர்ச்சியை எழுப்புவனவாமென்று துணிகின்றேன்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 10:24:11(இந்திய நேரம்)