தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

திருவாளர் - ச. சச்சிதாநந்தம் பிள்ளை அவர்கள், பி.ஏ., எல்.டி.,
சென்னை நகராண்மைக் கழகம், கல்வி இலாகாத் தலைவர்

உலகெலாமுணர்ந் தோதற்கரிய ஒருத்தனது திருத்தொண்டரியல்பை
உள்ளவாறு உணர்ந்து இனி தெடுத்தோதல் தெய்வச் சேக்கிழார்க் கல்லது
தேவர்க்கும் அரிது என்ப. அங்ஙனம் அவர் விரித்தோதிய திருத்தொண்டர்
புராணத்திற் செம்பாகமாய்ப் பலர்க்கும் புலப்படும் பொருள்கள் தாமே
அளவிலாத பெருமையும், மக்களை ஒளி நெறியிற் செலுத்தும் ஆற்றலும்
உடையன. மற்றும் அத்தனிப் பெருநூலிற் செறிந்துகிடக்கும் விழுமிய
சொற்பொருள்களின் திட்பநுட்பங்கள் பல. ஆன்றோர் எடுத்துக் காட்டி
உபகரித்தாலன்றி, அவை பெரும் பாலார் அறிவிற்கு எட்டக் கூடியனவல்ல.
ஆதலின் எளிமையும் அருமையும் ஒருங்கு படைத்த இப்பெரிய புராணத்திற்கு
அறிஞர்ககுள் உரை அவசியமாகும்.

இவ்வாறு இந்நூற்கு இதுவரையிற் பலவகை உரைகண்டுதவினோர் சுமார்
எண்மராவர். அவருரைகளுள் ஒரு சிலவே அகலவுரையா யமைந்தவை;
பிறவெல்லாம் குறிப்புரைகளாகும். இதுபோழ்து, சைவத் திருவாளர் சி. கே.
சுப்பிரமணிய முதலியார் அவர்கள் வெளியிட்டுவரும் பரந்த உரையானது,
முன்னே வெளிவந்துள்ள உரைகளின் நலங்களனைத்தையும் தன்பாற்
கொண்டிலங்குகின்றது. அதனோடு, அவற்றிற் காணப்பெறாத வேறு பல
நயங்களையும், சரித்திரக் குறிப்புக்கள், புராண வரலாற்றுத் தொடர்புள்ள
படங்கள், தலவிசேடங்கள், தேவாராதி அருட்பாக்களின் நுணுக்கங்கள்,
சைவ சம்பிரதாய மேன்மைகள் முதலிய அரிய பொருள்களையும் வழங்கும்
அருள்சேர் அறிவுக் களஞ்சியமாய் உள்ளது. அன்றியும், இவ்வுரையாசிரியர்,
பெரிய புராணங் காட்டும் பெருங் குறிக்கோளையும், அதனை அடைதற்
கமைந்த அறத்தாற்றின் உயர்வையும் ஒரு புறமும், தற்கால வாழ்விற் காணும்
சிறு குறிக்கோளையும் அதை நோக்கிச் செல்லும் மறத்தாற்றின் இழிவையும்
மற்றொரு புறமுமாக ஆங்காங்கு எடுத்துக் காட்டிச் செல்கின்றார். இதனால்,
"புலனொடு தியங்கும் பொய்யுளங் கடந்த" வன் முதல்வன் என்பதும், மக்கள்
"ஊன் நோக்கும் இன்பம் வேண்டி உழலாதே, வான் நோக்கும் வழி" நிற்றலே
மாண்பாம் என்பதும் மனத்தில் நன்றாய்ப் பதிகின்றன.

செந்தமிழறிவிலும், சிவபத்தியிலும் சிறந்து விளங்கும் திருவாளர்
முதலியாரவர்கள் பெரிய புராணத்தைப் பல ஆண்டுகளாகச் சமயக் கண்ணுஞ்
சாத்திரக்கண்ணுங் கொண்டு பேரன்புடனும் பயபத்தியுடனும் தாமே பன்முறை
ஆராய்ந்து வந்துள்ளார்கள். அதனோடு சைவத் திருவாளர் - க. சதாசிவ
செட்டியாரவர்கள் போன்ற திருமுறையாராய்ச்சி வல்ல பெருமக்களோடு
அளவளாவிப் பெற்ற அரிய நுட்பங்களைக் கேட்டுச் சேமித்து
வைத்துள்ளார்கள். இவற்றின் பயனாகக் கிடைத்த நுண்பொருள்களை
யெல்லாம் "நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்னும் சைவ
நன்னெறி கடைப்பிடித்து நம்மனோர்க்கு இப்பதிப்பின் வாயிலாக வழங்கி
வருகின்றார்கள்.

தமிழ்ப் பெருநூலாகிய இதன் வெளியீட்டிற்குச் சென்னைப் பல்கலைக்
கழகத்தார் ஆதரவளித்திருப்பது அவர்கட்கு அழகு செய்வ தொன்றாம்.
பெறுதற்கரிய பெருநிதியாய் விளங்கும் இப்பெரியபுராணப் பதிப்பைப்
பொதுவாகத் தமிழன்பர் அனைவரும், சிறப்பாகச் சைவ ரெல்லோரும்
விரும்பிப் பெற்றுப் பயனடைதல் அவர்கட்குரிய கடமையாகும்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 10:27:26(இந்திய நேரம்)