Primary tabs
உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
முகவுரை
யென்பது நூலுக்கு முன்னே இருக்கும் பகுதியாம். ஆனால்
அதைப் பெரும்பாலும் நூல் முடிந்தபின் கடைசியில் தான் எழுதுவார்கள்.
கடைசியில் எழுதி முன்னே வைப்பார்கள். அது போலவே நானும்
இவ்வுரைக்கு ஒரு முகவுரை எழுத எண்ணியுள்ளேன். எனது உரைப்பதிப்பு
இப்போதுதான் தொடங்குகிறது. இஃது இறைவனருளால் நிறைவேறுமானால்
அதற்கு ஒன்றிரண்டு ஆண்டுகள் செல்லும். அதன் பிறகு தானே முகவுரை
நான் எழுதவேண்டி வரும். ஆனால் இது வெளியிடத் தொடங்கும் இப்போது
ஒரு முகவுரையு மில்லாமல் வெளியிட நான் விரும்பவில்லை. ஆதலின்
பின்னே எழுதும் முகவுரை எப்படியோ இறைவன் அருள்வழி வருவது வருக.
இப்போதைக்கு இதனை அந்த முகவுரைக்கு முன்னுரையாக வைத்துக்
கொள்ளுமாறு அன்பர்களை வேண்டுவன்.
பெரிய
புராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்துக்குக்
குறிப்புக்களுடன் ஒரு பதிப்பு வெளியிடலாம் என்ற எண்ணம் மூன்று நான்கு
ஆண்டுகளாக என்னுள் எழுந்து நின்றது. உரிய படங்களும் தேவாரக்
குறிப்புக்களும் பழைய ஏட்டுப் பிரதிகளிற் கண்ட பாடபேதங்களும் அதில்
வெளிவர வேண்டுமென்றும் விரும்பினேன். ஆனால் இப்போது என் செயல்
எனக்கே நகையினை நிறுத்துகின்றது புராணத்தின் அளவு கடந்த
பெருமைக்கும், எனது அளவு கடந்த சிறுமைக்கும் எத்தனை தூரம் என்று.
ஆயினும் அந்த ஆசை என்னை விடவில்லை. ஆசை அச்சத்தை விழுங்கி
மேலெழுந்தது.
பெரிய
புராணத்திலே எனது இளமை முதல் எனையறியாமல் ஒரு
விருப்பம் உண்டாகி வளர்ந்து வந்தது. 1894-ம் ஆண்டில் எனது
ஆசிரியராகிய பண்டிதர் ஸ்ரீமத் ச. திருச்சிற்றம்பலம் பிள்ளையவர்களை
அடுத்து நான் தமிழ் பயிலத் தொடங்கினேன். அவர் எனக்குத் தாயினு
மினியர். தமிழ் அமுதினை எனது கீழ்த்தரமறிந்து அதற்குத் தக்கபடி
செவ்விதி னூட்டுவர். அவர் இவ்வுலகை நீத்து இறைவன் திருவடி யடைந்த
1906-ம் ஆண்டுவரை அவரது பாதசேவையும் நல்லுபதேசப் பயனும்
பெற்றேன். பெரிய புராணத்திலும் சிற்சில பாட்டுக்கள் மட்டும் எனக்கு
அவர்கள் பாடஞ் சொன்னதுண்டு. பள்ளிச் சிறுவனாம் பக்குவமுடைய
னாதலின் முறையாகவோ முழுதுமோ பாடங் கேட்கப் பெற்றேனில்லை.
நானும் கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. ஆனால் அப்போதே
பெரிய புராணத்திலே பெரிய விருப்பத்தை மட்டும் அவர்கள் என் மனத்திலே
புகுத்தி விட்டார்கள். "பெரிய புராணத்தை மற்ற தமிழ் இலக்கியங்கள்
புராணங்கள் முதலியவற்றோடு ஒன்றாக நினையாதே. அதன் பெருமை மிகப்
பெரிது. உலக நிலையில் அறியத்தக்க சிறிய பொருள்கள் முதல் முத்தி
நிலையிற் காணும் பெரிய பொருள்கள்வரை எல்லாப் பொருள்களும் இதில்
உண்டு. சாப்பிட இலைபோடும் மரபுகூட இதிற் சொல்லியிருப்பது பார்"
(ஈர்வாய் வலம்பெற மரபின் வைத்தார் - அப்பூதி. 39) என்றெல்லாம் அவர்
அவ்வப்போது எனக்கு அங்கங்கே எடுத்துக்காட்டும் சொற்கள் இப்போதும்
என் காதிற்குள் ஒலிக்கின்றன. அவர் செய்த சிற்சில அரிய பெரியபுராணப்
பிரசங்கங்களையும் நான் உடனிருந்து கேட்கும் பேறும் பெற்றேன்.
இராமாயணத்தில் வல்ல பிரசங்கியாராகிய சேலம் வித்வான் திரு.
சரவணப்பிள்ளை என்பவர் அவரது நண்பர். அவர் ஒருநாள் எனது ஆசிரியர்
வீட்டில் கம்பராமாயணம் - குகப்படலம் - பிரசங்கம் செய்தார். அதில்