தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Periya Puranam

"வந்தெதிரே தொழுதானை", "கங்கை யிருகரை யுடையான்" என்ற
பாட்டுக்களுக்கு அனேகம் உரைகள் எடுத்துப் பொருந்தச் சொல்லி அழகாக
உபந்நியசித்தார். அது என் மனதைக் கவர்ந்தது. அதுபற்றி நான் எனது
ஆசிரியரிடம் கூறினேன். அதற்கு அவர் "இதைவிட மிக அதிகமாகப்
பெரியபுராணப் பாடல்களிலே எங்கும் சிறந்த அழகான பொருள்கள் பல
கிடைக்கும். நான் சொல்கிறேன் பார்" என்று ஒருநாள் நண்பர் ஒருவர்
வீட்டில் இயற்பகை நாயனார் புராணம் பிரசங்கம் செய்யும்போது 15-ம்
பாட்டில் "பழிவிட நீபோ" என்ற இடத்தில் அனேகம் பொருள்களைப்
பொருந்த எடுத்துச் சொல்லி அருமையாகப் பிரசங்கித்தார். அதில்
நாயனாருக்கும், அவர் குடிக்கும், மனைவியாருக்கும், மனைவியார் குடிக்கும்,
சுற்றத்தார்க்கும், அவர் குடிமரபினுக்கும், அந்நாட்டுக்கும், அவர் செய்து வந்த
அறத்திற்குமாகப் பல்வகையானும் வந்து ஏறக்கூடிய பழிகளை யெல்லாம்
எடுத்துப் பொருத்திக்காட்டி ஒவ்வொன்றாய்ப்பேசினார். அதுமுதல் பின்னும்
எனக்கு இப்புராணத்தில் மேலும் மேலும் ஆசை அதிகரித்து வந்தது. இவ்வாறு
அவர் ஏதோ நான் பாடங் கேட்டுக்கொண்ட காலத்திலேயே காட்டிப்போந்த
இடங்கள் பலவுண்டு. அவர் திருவாரூர்ச் சிறப்பு, இளையான்குடிமாற நாயனார்
புராணம், மெய்ப்பொருள் நாயனார் புராணம் முதலிய சில சரிதங்களை
முறையாகப் பேசிச் சொற்பொழிவாற்றின காலத்துக் கூடஇருந்து கேட்கப்பெற்ற
புண்ணியத்தால் இப்புராணத்திலே எனது ஆசை மேலும் வளர்வதாயிற்று.
அவ்வாறு கேட்ட அருமைப்பாடுகளை முறைப்பட எழுதிச் சேமித்து
வைத்தேனில்லையே யென்று பலகாலும் வருத்தியதுமுண்டு. சற்றேறக்குறைய
1894-ம் ஆண்டு முதல் அதாவது இற்றைக்கு நாற்பத்திரண்டு ஆண்டுகளாக
இப்புராணத்தை இடையிடையேயும், அதிலும் சென்ற இருபதாண்டுகளாய்
முறையாய் ஆண்டிற்கொருமுறையும் வாசிக்கும் நல்லூழ்பெற்றேன். 1894-ம்
ஆண்டு முதல் 1906 வரை ஒரு பன்னிரண்டாண்டுகள் எனது ஆசிரியரின் கீழ்
நின்று இப்புராணத்தினுள் மேற்கண்டவாறு அங்குப் போதனை
பெற்றகாலமென்பேன்.

எனது ஆசிரியர் இறைவனது திருவடி நீழலை யடைந்த பின்னர் எனக்கு
இப்புராணத்தைப் போதிக்கவல்ல பெரியார் அனேகமாகக் கிடைக்காமலே ஒரு
பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்தன. அக்காலத்தும் இதனைப் பயில்வதை நான்
விடவில்லை. எனக்கும் ஏதோ தெரியுமென்று நினைத்துப் பல நண்பர்கள் பல
சபைகளுக்கு என்னைக் கூப்பிடும்போதெல்லாம் இப்புராணத்துப்
பொருள்களையே சென்ற சென்ற இடங்களிலெல்லாம் பேசுவேன். பிறரையும்
அவற்றையே பேசும்படியும் வேண்டுவன். இவ்வாறு மேலும் பன்னிரண்டு
வருடங்கள் கழிந்தன. கழியவே எனது அதிர்ஷ்டவசத்தால் எங்கள் நாட்டில்
சைவப் பயிர்வளர்க்கும் ஒரு வெண்முகிலை இறைவன் கொடுத்து அருளினார்.
அந்த முகில் சைவத்திருவாளர் - கயப்பரக்கம் - சதாசிவச் செட்டியார், பி. ஏ.
அவர்களேயாவர். அவர்கள் 1918-ம் வருடத்தில் பேரூர் ஸ்ரீ சாந்தலிங்க
சுவாமிகள் சத்வித்யா சன்மார்க்க சங்கத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவு
விழாவிற்குத் தலைவராய் வந்தார்கள். அவரது பிரசங்க மழையினால், எங்கள்
நாட்டிலே முன்னர் வாடியிருந்த சைவப் பயிர் சிறிது சிறிதாய்த் தழைத்தது.
அவர்களைப் பெரியபுராணத்தைத் தினந்தோறும் முறையாய்ச் சொல்லிப்
பரசிங்கிக்கும்படி பல பெரியார்கள் வேண்டிக்கொண்டனர். அதற்கிணங்கி
அவர்கள் 1919 முதல் (சிற்சில இடையீடுகளிடையே) நாடோறும்
பிரசங்கித்துவந்தார்கள். 1922 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 11 ஆம் நாள்
புராணப் பிரசங்கம் இனிது நிறைவேறிற்று. நிறைவேற்று விழாவன்று
பெரியபுராண ஏட்டையும் மற்ற 11 சைவத் தெய்வத் திருமுறைகளையும்
யானையின்மேல் வைத்து நகர்வலம் செய்வித்துப் பல பெரியார்கள்
பெருவிழாக் கொண்டாடிச் சிறப்புச் செய்தார்கள். அந்த நன்முயற்சியில்
புராணப் பிரசங்கநாட்களிலெல்லாம் எனக்கு ஒரு பெரிய திருப்பணி
கிடைத்தது. அஃதாவது அவர்கள் பிரசங்கத்திற்கு தினமும் நானே கையேடு
வாசிப்பதாம். அப்போது அவர்களது


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 10:54:49(இந்திய நேரம்)