Primary tabs
அருமையான
பிரசங்கங்களில் எனக்கு அருமைப்பாடாய்த் தோன்றிய
சில குறிப்புக்களைக் குறித்துவைக்கவேண்டுமென்று ஒரு விருப்பம் யாது
காரணம்பற்றியோ எனக்கு உண்டாகியது. பிரசங்கம் நிகழும்போதே காகிதத்
துண்டுகள் வைத்துக்கொண்டு அவர் சொல்லும் அரிய பெரிய குறிப்புக்களை
என் சிறிய மனங்கொண்டவளவு குறித்து வந்தேன். அவர்கள் அவ்வப்போது
புராணத்திலிருந்து எடுத்து எங்களுக்கு இடித்திடித்துச் சொன்ன புத்திமதிகள்
என்னுள்ளே இன்னும் தொனித்துக்கொண்டிருக்கின்றன. எனவே, இங்குக்
கூறியவற்றால் சேக்கிழார் சுவாமிகளிடத்தே எனக்கு உளதாகிய ஆசையும்
நேசமும் வளர்ந்த வகைகளைக் கூறினேனன்றி வேறல்லை. "உன்பழவடியார்
கூட்டம், அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டா யம்மானே" என்றபடி
எழுந்த இவ்வாசையினையே பற்றுக்கோடாகக் கொண்டு அதிலே பத்தியும்
வளர்வதாயிற்று. ஆனால் எனது சிற்றறிவாகிய கொள்கலனானது அந்த அரிய
பெரியபுராணமாகிய பேரமுதப் பெருங்கடலிலே தன் சிறிய அளவிலே
அமைந்த மட்டும் கொள்வதன்றிவேறென் செய்யவல்லது? பெரியபுராணத்தின்
பெருமைகளை ஒன்றும் அறிந்தேனில்லை என்று சொல்ல மட்டும் எனது
மனம் துணிகின்றதே யன்றி எதையாவது அறிந்தேன் என்ற துணிபு
உண்டாகின்றதில்லை. ஏன்? "அறிதோ றறியாமை கண்டற்று" என்றபடி
படிக்குந்தோறுங் கேட்குந்தோறும் புதிது புதிதாய்த் தோன்றும் கருத்துக்களின்
பெருமையாலே இவை முன் நாம் அறியவில்லையே யென்ற தோற்றமே
உண்டாகின்றதாகலின். அப்போதும் இவ்வாறு ஓர் உரைஎழுத
வேண்டுமென்னும் எண்ணம் எனக்குத் தோன்றவேயில்லை. ஆனால் அந்தக்
குறிப்புக்களை மட்டும் சேமித்து வைத்திருந்தேன். அதன்பின் மற்றோர்
பன்னிரண்டாண்டுகள் கழிந்தன. ஆனால் எனது ஆருயிரனைய திரு.
செட்டியாரவர்கள் பேருதவியினால் பின்னரும் அதிவிருப்பத்துடன்
புராணத்தைப் படித்துவந்தேன். அதைப் பிறர் கேட்க நான் சொல்வதைவிடப்
பெரியார் வாயிலாகக் கேட்பதிலேயே அதிக விருப்பமிருந்தது.
திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்
முதலிய பெரியார்களும், பண்டிதமணி திரு. மு. கதிரேசன் செட்டியாரவர்கள்,
வித்வான் திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் முதலிய நுணுகிய
ஆராய்ச்சியாளர்களும் இதைப் பேசும்போதெல்லாம் நான் மிக விரும்பிக்
கேட்டுப் பயன்பெற்று வந்தேன் என்பதை அப்பெரியார்கள் அறிவார்களோ
அறியார்களோ அதை நான் அறியேன். 1930-ம் வருஷத்தில் சென்னைச்
சர்வகலா சங்கத்தார் ஆதரவில் சில பிரசங்கங்கள் செய்யுமாறு என்னை
அழைத்தனர். அதற்கிணங்கி அவர்களாதரவில் நான் 1930 ஜனவரி 31,
பிப்ரவரி 1-3 நாட்களில் சென்னைப் பச்சையப்ப முதலியார் கல்லூரி
மண்டபத்தில் "சேக்கிழார்" என்ற தலைப்பில் செய்த 3 நாட் பிரசங்கங்களும்
இப்புராணத்தையும் அதன் ஆசிரியரையும் பற்றியனவே. அந்தப்
பிரசங்கங்களை அவர்களது உத்தரவு பெற்றுப் புத்தகமாக வெளியிட்ட
பின்னரே புராணத்துக்கு ஒரு விளக்க உரைகாணவேண்டும் என்னும்
எண்ணம் தோன்றிற்று. இலௌகிகத்திலுங்கூட எந்தத் துறையில் மக்கள்
நல்வாழ்க்கை வாழவேண்டுமாயினும் அதற்குப் பெரியபுராணமே நன்கு துணை
செய்வதாகும் என்ற எண்ணம் எனக்குள் வேரூன்றி வளர்ந்து வருகின்றது.
இதனைப் பல துறைகளிலும் எனது ‘சேக்கிழார்' என்ற நூலிற் காட்டியுள்ளேன்.
சில ஆண்டுகளின் முன் சிதம்பரத்தில் ஆனியுத்திரத் திருவிழாவின் போது ஸ்ரீ
ஆறுமுகநாவலரவர்கள் சைவப்பிரகாச வித்யாசாலையில் சேக்கிழாரைப் பற்றிப்
பேசியபோது உடனிருந்து கேட்டுக்கொண்டிருந்த யாழ்ப்பாணம் தெல்லிப்புழை
‘புரோக்தர்', திரு. கனகராயர் அவர்கள் நமது நாட்டுக்குச் சுயராச்சியம்
வேண்டுமானால் பெரியபுராணத்தை நன்கு படிக்கவேண்டுமென்று சொல்லி
என்னுடன் அளவளாவிக் கொண்டிருந்து, அது முதல் என் நண்பராயினர்.