Primary tabs
உரை
காணும் எண்ணம் தோன்றியது முதற் பல பழைய
ஏடுகளைத்தேடிப் பெற்றேன். சிதம்பரத்தில் எனது தீட்சா குருமூர்த்திகளாய்
எழுந்தருளிய உலக மூர்த்தி தேசிகர் மடம் ஸ்ரீலஸ்ரீ கணபதி
முத்துக்
கற்பகக் குருக்களையா அவர்கள் தமது திருமடத்தில்
பரம்பரையாயிருந்ததொரு மிகப் பழைய ஏட்டுப்பிரதியை மிக அன்புடன்
உதவி ஆசி கூறியருளினார்கள். திருவாவடுதுறையில் எனது நண்பரொருவர்
இரண்டு பிரதிகள் உதவினர். தருமபுர ஆதினம் ஸ்ரீமத் சுப்பிரமணியத்
தம்பிரான் சுவாமிகள் மிக அன்புடன் ஆசீர்வதித்து ஒரு பழைய பிரதி
உபகரித்தார்கள். எனது நண்பர்கள் சாத்தூர் திரு. டி. எஸ். கந்தசாமி
முதலியார் பி.ஏ., அவர்களும், திரு. டி. கே. சிதம்பரநாத முதலியார், பி.ஏ.,
பி.எல். அவர்களும், திரு. வையாபுரிப் பிள்ளை, பி.ஏ., பி.எல். அவர்களும்
தனித்தனிப் பிரதிகள் உதவினார்கள். இன்னும் வேறிடங்களிலிருந்தும் பல
பழைய ஏட்டுப் பிரதிகள் கிடைத்தன. இவற்றோடு அச்சிடப்பட்ட மூலப்
பாடப் பதிப்புக்களும் உரைப்பாடப் பதிப்புக்களும் இவ்வுரைக்குப்
பெருந்துணை செய்தன. இவற்றுள் சிதம்பரம், திருவாவடுதுறைப் பிரதிகள்
சுத்தமாயும் நல்லாதரவு தருவனவாயுமுள்ளன. திருநெல்வேலிப் பிரதிகளில்
சில துணிகரமான இடைச் செருகல்கள் காணப்ப பெற்றன. அகத்திய
முனிவரும் பயந்து சென்று பின் அதினின்றும் மீளாது ஆங்கே வதிகின்ற
தமிழ்ப் பெருமை தென்பாண்டிநாட்டுக் குரிமையானதன்றோ?
நாட்டுக்கோட்டை நகரச் செட்டியார்களது மரபில் வந்த தமிழ் வல்லுநராகிய
ஒரு பெரியார் திரு. இராமநாத செட்டியார்
என்பார் ஏறக்குறைய 60
ஆண்டுகளின் முன் சிதம்பரத்தில் வாழ்ந்தனர். ஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள்
மாணாக்கராகிய ஸ்ரீ பொன்னம்பலம் பிள்ளையவர்களிடம் பெரியபுராணத்தை
முறையாய்க் கற்றுப்பாடங்கேட்பதற்கென்றே இவர் யாழ்ப்பாணஞ் சென்று
தங்கிப் பாடங்கேட்டனர் என்பர். இப்புராணம் அவர்கள்பால் பாடங்கேட்ட
பல பெரியார்களுள் மேற்குறித்த எனது தீட்சா குருவும், சிதம்பரம் ஸ்ரீ நடராச
ஒதுவாரவர்களும் தாங்கள் பாடங் கேட்டபோது குறித்துவைத்த கையெழுத்துக்
குறிப்புப் புத்தகம் ஒன்றை இப்போது சிதம்பரத்தில் திருக்கழிப்பாலை ஸ்ரீ
பழனியப்ப முதலியார் தேவாரப் பாடசாலை உபாத்தியாயர் ஸ்ரீஇராமலிங்க
ஒதுவார் மூர்த்திகள் பலநாட் சேமித்துப் போற்றிவைத்திருந்து அன்போடு
உதவினார்கள். இவ்வாறு கிடைத்த ஏட்டுப் பிரதிகள் பன்னிரண்டினையும்
அன்புடன் மிகுந்த சிரமப்பட்டு ஆராய்ந்து பாடபேத முதலியவற்றைக்
குறித்து உதவிய பெரியார் சூரியனார்க்கோயிலாதீனத்தில் நிருவாண தீட்சை
பெற்றவரும் பேரன்பருமாகிய பவானித் தமிழ்ப்பண்டிதர் திரு.
க.
குமாரசாமிப் பிள்ளையவர்கள். இவ்வாராய்ச்சியாற் பல பல அரும்
பொருள்கள் கிடைத்தன. இடைச்செருகலான பாட்டுக்களை ஒருவாறு
நிச்சயிக்க இவை பேருதவியாயின. "துலையெனும் சலத்தால் - கலத்தால் -
இச்சழக்கினின்றேற்றுவார்" (அமர்நீதி நாயனார் புராணம் 41), "இனியமொழி
விளம்பி விடை - கொடுத்தார் - கொண்டார்"
(நரசி. முனை. புரா. 7),
வெந்தொழில்வன் கூற்றுண்ண - விடந் தீண்ட - (திருமூல. புரா. 11)
என்பனபோன்ற பாடபேதங்கள் எவ்வளவு பொருளாழமான
உண்மைகளை
விளக்கி நிற்கின்றன என்று பாருங்கள்!
பத்தராய்ப்
பணிவார் சருக்கத்திலே துதிக்கப்பெற்ற தொகையடியார்
பண்புகளை ஒவ்வோர் தொகையடியார்க்கு ஒவ்வோர் பாட்டினாலே புராணம்
செய்தமைத்தனர் ஆசிரியர் என்றும் இப்போது அவற்றிற் காணும் மற்றும்
பற்பல பாட்டுக்களும் பிறராய் பிற்காலத்திற் சேர்க்கப்பட்டன என்றும்
ஊகிக்க இடமிருக்கின்றது. ஆயின் இப்பதிப்பிலே நல்லபொருட்பேதமுள்ள
சில பாடபேதங்களை மட்டும் குறித்துள்ளேன். பெரியபுராணத்தை நியதியாய்ப்
பாராயணஞ் செய்வோர் முறையாகப் படித்து வரும்போது நிறுத்தவும்
தொடங்கவும் உள்ள உரிய இடங்களைத் தெரிந்த அளவில்
அவ்வப்பாட்டுக்களின் முன் போட்ட *நட்சத்திரக் குறியீடு கொண்டு காட்ட
முயன்றுள்ளேன்.