தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

எனக்கும் எத்தனை தூரம்? உயர் மலையுச்சியும் ஆழ்கடலாழமும் ஒப்பினும்
ஒவ்வாதே, ஆயினும் ஆசையும், எனது முன்னோர் செய்த நல்வினைப்
பயனும் சேர்ந்து இந்நல்வினை முயற்சியில் என்னையும் கூட்டிற்று. அதில்
தினமும் உபகரித்து நாடோறும் முன்னிற்பன தமிழ்க்கருணைத் தெய்வமாய் -
எனது ஆன்ம நாயகனாய் - உள்ள குமாரக் கடவுளது சேவடிகள்.

"புன்னெறி யதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலாம்
நன்னெறி யொழுகச் செய்து நவையறு காட்சி நல்கி
என்னையும் அடிய னாக்கி இருவினை நீக்கி யாண்ட
பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங் கயங்கள் போற்றி"

என்று கச்சியப்ப சிவாசாரியார் அருளிய தோத்திரத்தில் என்னையும் என்ற
இழிவு சிறப்பு எனக்கே முற்றிலும் பொருந்தப் பாடி யுபகரித்தனர் என நான்
பலகாலும் எண்ணியதுண்மை.

இவ்வெளியீடு முதற்சஞ்சிகையின் முதற்பகுதி திருத்தில்லையிலே
ஆயிரக்கால் மண்டபத்திலே வைத்துச் சேக்கிழார் சுவாமிகள் திருநக்ஷத்திரத்
தினமாகிய யுவ வருடம் வைகாசி மாதம் 23-ந் தேதிக்கு (5-6-1935)
புதன்கிழமை யன்று வெளியிடப் பெற்றது. அன்று ஸ்ரீ நடேசப் பெருமானுக்குத்
திருப்பாவாடை நிவேதனத்துடன் விசேட பூசை செய்யப் பெற்றது. சேக்கிழார்
நாயனார்க்குக் கோயிலிலும், ஸ்ரீ பழனியப்ப முதலியார் பாடசாலையிலும்
விசேட பூசையும் குரு பூசையும் நிகழ்ந்தன. மாலையில் ஆயிரக்கால்
மண்டபத்தில் ஒரு பெருங் கூட்டம் கூடிற்று. அது காலை இவ்வுரை
முயற்சியைப் பற்றிப் பல தமிழ்ப் பெரியார்கள் பாராட்டி ஊக்க மளித்தனர்.
தில்லைவாழந்தணர்கள் இதனை ஆதரித்து ஆசீர்வதித்தனர். ஸ்ரீ சச்சிதானந்த
தீட்சிதர் அதுபோழ்து சபைத் தலைமை பூண்டருளினர். திருவாவடுதுறை
ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் பரிவட்டம் அனுப்பி ஆசீர்வதித்தருளிற்று.
பெருங் கருணைத் தடங்கடலாகிய ஸ்ரீ நடேசப் பெருமான் றிருவருளே
உருவமாக இவை நிகழ்ந்தன என்று போற்றுவதன்றி வேறுரைக்குமா றறியேன்!

இவ்வெளியீட்டிற் காணும் குறை, மிகை, பிழைகளைப் பொறுத்துத்
திருத்தி ஏற்றுக்கொள்வது என்னையுடையவர்களாகிய பெரியோர் கடமை.
இப்பகுதியிற் செய்தக்க திருத்தங்களைக் காட்டி உபசரிப்பது அறிந்தோர்
கடமை. அவர்களது திருத்தங்களை மனமார ஏற்றுக்கொண்டு செய்வதனை
அடியேன். கடனாக மேற்கொள்வேன் என்பதற்கு இப்பகுதியினிறுதியிற்
காணும் திருத்தங்கள் உறுதி கூறும். ஏனையோர் இகழ்வரேல் அதனால்
எனக்காவதொன்றுமில்லை.

தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வரர்
எம்மை யுடைமை எமையிகழார் - எம்மை
யுணரா ருணரா ருடங்கியைந்து தம்மிற்
புணராமை கேளாம் புறன்.

என்ற எனது பரமாசாரியார் வாக்கு எனது தலைமேல் நிற்பதாம்.

இனிவர நிற்கும் இவ்வெளியீட்டின் எஞ்சிய பெரும் பகுதிகளும்
இவ்வாறே இனிது நிறைவேற இறைவனது திருவருளும், பெரியோர் ஆசியும்,
தமிழ்ச் சைவ வுலகத்தின் ஆதரவும் இனிது துணைசெய்து
மங்கலமாக்குவிப்பனவாக.

‘சேக்கிழார் நிலையம்'        

அடியேன்,

கோவை, 5-3-'37    

 C. K. சுப்பிரமணியன்.


புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 11:09:19(இந்திய நேரம்)