தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

வாழ்ந்து காட்டிய இவரது சரிதங் குறித்து இன்பம் அளவும் என்றார்.
இவையே - இவ்வளவினவே - இன்பம்; பிற வெல்லாந் துன்பத்துக்கே
யேதுவாம் என்பது உண்மைநூற் றுணிபு. இன்பத்தை இவ்வாறு அளந்து
வாழ்க்கையிற் காட்டியதுடன், துலைக்கோல் கொண்டு நிறுத்தளவையானும்
அளந்து காட்டியவராதலின் அளவும் - அளத்தலைச் செய்யும் - அமர்நீதி
என்றார். இதனால் அவரது சரிதங்குறித்த அழகு காண்க.

5. நீண்ட புகழ் ஏனாதி - நீண்ட புகழ் என்றது தமது
மாற்றானேயாயினும் நீறு புனைந்த அடியாராயினார்க்கு, நிராயுதரைக்
கொன்றார் எனும் பாவ மெய்தாதபடி காக்கும் பொருட்டுத் தாம்
ஆயுதந்தாங்கி, மலைவார்போல் நின்று, தம் உயிரையும் அளித்த
பெரும்புகழ் குறித்தது. உயிரையும் உவந்தீயும் புகழின்மேற் புகழ் வேறில்லை.

6. திருக்கண்ணப்பர் - நக்கீரதேவர் அருளிய திருக்கண்ணப்பதேவர்
திருமறம் (பதினோராந் திருமுறை) “திருக்கண்ணப்பன்“ என்று தொடங்கி
அதனையே கொண்டு முடிந்தது இங்குப் போற்றப்பட்டது. திரு என்றது
ஆளுடையபிள்ளையார் காளத்தியப்பரைக் “கும்பிட்ட பய“னிதுவே (திருஞான
- புரா - 1022) யென்று காணும்படி, பேறினி யிதன்மே லுண்டோ?
எனப்பெற்ற மன்னுபேரருட்டிரு.

6. நற் கலயர் - குங்கிலியக்கலய நாயனார். பலபகல் உணவில்லாது
பசியால் வாடிய தமது மக்கள் முதலியோர் பசி தீர்க்க நெற்கொள்வதற்கு
மனைவியார் தந்த திருமங்கல நூற்றாலியை, நெற்கொள்ளாது, இறைவனுக்
கேற்ற குங்கிலியத்துக்கு மாறினார். அதனை ஏற்றுக்கொண்ட இறைவன்
பெருவள னீந்தருள, அது கொண்டு, ஆளுடைய அரசுக்கும்
ஆளுடையபிள்ளையார்க்கும் மற்றும் அடியார்க்கும் மாகேசுரபூசை
செய்தனர் நாயனார். இந்நலமெல்லாங் குறிக்க நல் என்றார்.

8. ஞானத் திரு மூர்த்தி நாயனார் - ஞானம் - திரு - என்ற
அடைமொழிகள். இவர் ஞானம் பெற்றுத் துறவறத்தில் நின்றமையும், அதில்
நின்று திருநீறு, கண்டிகை, சடைமுடி என்ற மும்மைத் திருவே பொருளாகக்
கைக்கொண்டு உலக வாழ்வாகிய அரசர் திருவை அதுகொண்டு அளந்த
திறங் குறித்தன.

9. மேன்மை முருகர் - இறைவன் முடிமேல் முப்போதும் மாலை
சாத்தி அவரது குறிப்பறிந்து களிக்கும் நாயனாரது மேன்மையினை
ஆளுடையபிள்ளையார் தேவாரத்திற் பாராட்டியது மிகு மேன்மையாம்.
பிள்ளையார்க்கும், அரசுகட்கும், சிறுத்தொண்டர், திருநீலநக்கர்,
திருநீலகண்டயாழ்ப்பாணர் முதலிய சீரடியார் பலர்க்கும் ஒக்க
அமுதளித்துபசரித்து உடனுறைவின் பயன் பெற்றது பெரு மேன்மை.
பிள்ளையார் திருமணத்திற் சிவனடி பெற்றது சிறந்த மேன்மை.
இவையெல்லாங் குறிக்க மேன்மை முருகர் என்றார்.

9. முன் நாளைப்போவர் - இவர் திருத்தில்லையினை உடம்பாற்போ
யடையு முன் பலநாளும் மனத்தாற் சென்றடைந்ததனையும், குலத்தாற்
கடையாராயினும், நலத்தால் முனியாகி, முன்னவர்க்கும் முன்னாகி
அணைந்ததனையும் குறிக்க முன் என்றார்.

10. துரிசில் - துரிசு - அழுக்கு. அடியாரது ஆடைகளின் துகள் மாசு
கழிப்பவர் போல, இந்நாயனார் செய்தசெயல் தமது “தொல்லைவினை
ஆசுடைய மலமூன்று மணையவரும் பெரும்பிறவி மாசுதனை
விடக்கழித்“தது குறிப்பு. ஆன்மாக்களாகிய நமது துரிசுகளையும்
இல்லையாகச் செய்பவர் என்ற குறிப்புமாம்.

10. மருவும் மறைச் சண்டீசர் - மலரின் முகையில் மணம்
மருவுவதுபோல முந்தையறிவின் தொடர்ச்சியினாலே வேதம் -
வேதாங்கம் - ஆகமம் எல்லாமறிந்த அறிவு மருவியவர் - வந்து
பொருந்தியவர் - என்றது குறிப்பு. மறை மருவும் என்க. மறை -
அகமங்களையும் ஆறு அங்கங்களையும் உடன் குறித்தது. (சண்டீசர் -
புரா - 13)

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 14:39:09(இந்திய நேரம்)