தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

11. தக்க குலச்சிறையார் - (திருவாலவாய் - பண் - புறநீர்மை)
ஆளுடைய பிள்ளையாரருளிய திருப்பதிகத்தில் ஆறு திருப்பாட்டுக்களிற்
பாராட்டப்பெற்ற தகுதியும், அவர் செய்த சைவத் தாபனத்திற்குத்
துணைக்காரணமாகி நின்ற தகுதியும், அடியார் திருவேட வழிபாட்டுச்
சிறப்பின் தகுதியும் குறிக்கும்படி தக்க என்றார்.

12. கொண்ட - தாம் குருவாகக் கொண்ட நம்பியாரூராது பாதமே
பற்றாகக் கொண்டு, அச்சிறப்பினாலே அவர்க்குமுன் இறைவர் பாதங்
கைக்கொண்ட சிறப்புக் குறிக்கக் கொண்ட என்றார்.

12-13. தொண்டு செயும் நீள் காரைக்காலம்மை - நீள் தொண்டு
செயும் என மாற்றுக. மறவா வரம்பெற்று, மகிழ்ந்து பாடித், தொண்டுசெய்து,
இறைவர் திருவடிக்கீழ் என்றுமிருக்கின்றாராதலின் நீள் என்றும், செயும்
என்றும் கூறினார். காலங்கடந்து நீளும் தொண்டினை முக்காலத்தும் செயும்
என்க. “பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாங் காதல், சிறந்துநின் சேவடியே
சேர்ந்தேன்“ என்ற அம்மையாரது அற்புதத் திருவந்தாதிக் கருத்துங்
குறித்தது.

14. மூளு நமிநந்தி - பொறாமை மூண்ட அமணர் சொற்கள் கேட்டு
மனத்தில் வருத்த மூண்டனர். இறைவனருள் மூள, அரனெறியார் கோயில்
முழுதும் பலநாளும் நீராற்றிருவிளக்கு மூள எரித்தனர். திருமணலிக்கு
இறைவனது திருஎழுச்சி, சேவிக்க எல்லாக் குலத்துள்ளோரும் உடன்
நண்ணியதனால் இழிவு தொடக்கிற்று என மனத்தில் மூண்ட இழிபினை,
இறைவன் காட்டிய அறிவுச்சுடர் மூளத், திருவாரூர்ப் பிறந்தார்கள்
எல்லாரும் கணநாதர்களாகக் காட்டக் கண்டு, அந்த அறிவு மூளப்
பெற்றனர். “தொண்டர்க்காணி“ என ஆண்ட அரசுகள் பாராட்டும்படி
மூண்ட அடிமைத் திறம் பெற்றனர் என்பனவாதி குறிப்புக்கள் பெற மூளும்
என்றார்.

14 - 15. முத்தமிழை ஆளும் - ஆளுடையபிள்ளையார் முத்தமிழ்
விரகராந் தன்மை குறித்தது. “தமிழ்ஞான சம்பந்தன்“, “தமிழாகரன்“,
“அருந்தமிழ் ஞானசம்பந்தன் செந்தமிழ்“ என்பனவாதி அவரது தேவார
ஆட்சிகளும், “அணைந்த மாமறை முதற்கலை யகிலமு மோதா, துணர்ந்த
முத்தமிழ் விரகன்வந்தானென வூத“ - (223) என்ற புராணமும் குறிக்க.
தமிழை ஆளுதல் - மூலவிலக்கியங்களை யருளிச்செய்து,
தமிழிலக்கியங்களை யருளிச்செய்து, தமிழிலக்கணங்கள் தமது
ஆணையினடங்கி நின்று உறுதிப்பொருள் தரப் பயன்படுத்துதல். இக்
கருத்துப்பற்றியே நாவலூர்ப்பெருமானும் ‘நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்“
(திருப்புன்கூர் - தக்கேசி - 4), “நாளு மின்னிசை யாற்றமிழ் பரப்பு
ஞானசம்பந்தன்“ (திருக்கோலக்கா - தக்கேசி - 8), “தமிழ் ஞானசம்பந்தன்“
(திருக்கேதாரம் - நட்டபாடை - 10) எனத் தமிழொடு புணர்த்தியே
துதித்ததும், “பழுத்த செந்தமிழ்மலர்“ (திருவீழிமிழலை - 10) எனச்
சேந்தனார் திருவிசைப் பாவிற் றுதித்ததும், “இருந்தமிழ்“ எனத்
திருவந்தாதி (39) யிலும், “ஞானத்தமிழ்“ என மும்மணிக்கோவையிலும் (11)
நம்பியாண்டார் நம்பிகள் துதித்ததும், “அசைவில்செழுந் தமிழ்வழக்கே
யயல்வழக்கின் றுறைவெல்ல“ எனச் சேக்கிழார் சுவாமிகள் புராணத்துக்
(24) காட்டியதும், பிறவும் காண்க.

15. செய்ய - செம்மையையுடைய. செம்மையாவது“எந்தை தந்தை
தந்தையெங் கூட்டமெல்லாந், தம்பிரானீரே யென்று வழிவழிச் சார்ந்து
வாழும், இம்பரின் மிக்க வாழ்க்கை“யுடைய நீர்மை குறித்தது. (ஏயர்கோன்
- புரா - 392,)

16. அருண்மூலர் - தம்மை மேய்ப்பானாகிய மூலன் பிரிவினால்
வருந்திய பசுக்களின் துன்ப நீங்க அருள் கொண்டமையும், அதன்
பொருட்டுத் தம்முடலினின்றும் அவனுடலிலே தாமுயன்ற பவனவழித்
தம்முயிரைப் பாய்த்தியமையும்,

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 14:39:38(இந்திய நேரம்)