தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Periya Puranam

பின்னர், மூலனைக் காணாது வருந்தும் பசுக்களாகிய உயிர்களின் பொருட்டு
ஆகமப் பொருளைத் தமிழ் வகுப்பத் தம் உடல் கரக்க இறைவன் அருள்
வைத்தமையும், உலகர் “பிறவிவிடந் தீர்ந்துய்ய“ அருள்கொண்டு “ஞானமுத
னான்குமலர் நற்றிருமந் திரமாலை“ அருளியமையும் குறிக்க அருள் மூலர்
என்றார்.

16. வருமூக்கர் - தொண்டை நாட்டுத் திருவேற்காட்டூரினின்றும்
சோழ நாட்டுத் திருக்குடந்தைக்கு வரும் என்றும், சூதினில் வென்ற
பொருளால் முன்னர் அடியார்க் கமுதளித்துத் தாம் அமுது செயக்
கடைப்பந்திக்கு வரும் என்றும், தீமை பயக்கும் பாதகமாமென்று
விலக்கிய சூதினையும் நன்மை பயக்க வல்லதாக்க வரும் என்றும்
குறிக்க வரும் என்றார்.

17-18. சூழ் ஆக்கூர் - நாமார் - சிறப்புலியார். இன்மையாற்
சென்றிரப்பார்க்கில்லை யென்னாதே யீயும், தன்மையார் சூழ்ந்திருக்கப்பெற்ற
சிறப்பும், இதனை ஆளுடையபிள்ளையாரது மறைத்திருவாக்கினாற் பாரட்டப்
பெற்ற பெருஞ் சிறப்பினாற் சூழப்பெற்றதும், குறிக்கச் சூழ் ஆக்கூர் என்றார்.
மறைத்திரு வாக்கூர் அவ்வூர் - என்பது புராணம். நாம் ஆர் - நாமம் -
நாம் என நின்றது. நாம் - கீர்த்தி - புகழ். இவரது புகழாவது
“இரப்பார்க்கொன் றீவார்மே னிற்கும் புகழ்“ என்றபடி வள்ளன்மை
யுடையராதல். இது பற்றியே திருத்தொண்டத் தொகையில் “சீர்கொண்ட
புகழ்வள்ளல்“ என்று நம்பியாரூரராற் றுதிக்கப் பட்டனர் என்றது குறிப்பு.

18-19. நற்றொண்டினேமச் சிறுத்தொண்டர் - அடியார் முன்பு
மிகச் சிறியராய் அடைந்து வழிபட்டார் என்றதும், அடியார்க்கு அமுது
படைத்தலே நியமமாக - நேமமாகக் - கொண்டொழுகினார் என்றதும்,
அத்தொண்டின் ஏமம் - காவல் - பெற்றனர் என்றதும் குறிப்பாம்.

19. செய்ய கணநாதர் - திருநின்ற செம்மை என்னும் சிவத்தன்மை
பெறுவிக்கும் பலவகைத் திருத்தொண்டினுறுதி பெறத் தொண்டருக்
கறிவளித்துச், செம்மைத் தொண்டரையாக்கித், தாமும் செம்மை பெற்றனர்
என்பது குறிக்கச் செய்ய என்றார்.

20. விறற்களந்தைக் கூற்றுவனார் - மாற்றலர் வெருளுங் கருவி
நான்கும் நிறைவீரச்செருக்கின் மேலாராயினார் எனவும், வேந்தர் வளநாடு
பலவும் கவர்ந்த விறலினர் எனவும், முடி ஒன்றுமொழிய அரசர்திரு
வெல்லாமுடையாராயின விறல் படைத்தனர் எனவும், தாம் சூட எண்ணிய
அரசர் முடியைத் தில்லைவாழந்தணர் தமக்குச் சூட்டாதொழியவும்
தில்லைவாழ் பேரந்தணராகிய இறைவர் பால் வேண்டி அவரது
திருவடியினையே முடியாகச் சூட்டப்பெற்ற விறலினையுடையார்
எனவும் குறிக்க விறல் என்ற அடைமொழி தந்தோதினார்.

20-21. விஞ்சைத் திறத்து மிகும் - விஞ்சை - வித்தை; திறம் -
அதனாலாய பயன். மிகும் - அதில் முனைத்து நிற்றல். செய்யுணிகழ்
சொற்றெளிவு பெற்ற திறமும், செவ்விய நூல் பல கற்றதனாலாய
பயனிதுவே யென அறிந்து ஈசன் மலரடிக்கேயாளாயின திறமும்,
இவற்றில் மிக்கு நின்றமையும் குறிப்பாம்.

22. மொய் கொள் - மொய் - போர். போர்க்களம். கொள் -
வெற்றி கொண்ட. இந்நாயனார் பல போர்களிலும் வெற்றி பெற்றார்
என்பது சரிதம். “தெம்முனைகள் பல கடந்து“ என்பது புராணம்.
தீங்குநெறிப் பாங்காகும் போரினும் அடியாரடி யடைதலே புனைந்து
வெற்றி பெறற்வர். “சீலமிலரே யெனினும் திருநீறு சார்ந்தாரை ஞாலம்
இகழ்ந்து அருநரக நண்ணாமற்“ செய்ய வல்லது ஒருபெரும் மாயப்போரின்
வெற்றியாம். காமக்குறி மலர்ந்த ஊனநிகழ்மேனியராய் நீறணிந்து வந்த
அடியவருக்குப், பிறர்முன்னே, படி இரட்டிப்பொன் கொடுத்த வகையாலே
இம்மாயப் போரிலும் வெற்றிகொண்டார் என்பனவாதி குறிப்புக்கள் பெற
மொய்கொள் என்றார்.
 

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 14:43:09(இந்திய நேரம்)