தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

தோன்றி, வளர்ந்து, பின்னர் இறைவனால் மணந்து கொள்ளப் பெற்றவர்.
இறைவனது அருள் சுரக்கும் கூறு. ஒரு காலத்தில் பர்வத ராசனும் அவன்
மனைவி மேனையும் புத்திரப் பேற்றிற்காகத் தவஞ்செய்தபோது
இறைவனாணையின்படி குழந்தையுருக் கொண்டு சென்று அவர்களிடம்
வளர்ந்து வந்தமையால் "ஐமவதி" என்றும், பர்வதராசன் மகளாக உபசரிக்கப்
பெற்றமையின் "பார்ப்பதி" என்றும் அழைக்கப்பெற்றார். "குழந்தையாகி ஐந்து
வயது நிறைந்த பருவத்திற் றவத்தில் விருப்பமுற்று அதனைத் தாய்
தந்தையர்க்குக் கூறியபோது (உ = ஒ, பெண்ணெ! மா = வேண்டாம் என்று)
தடை செய்யப்பட்டமையின் இவருக்குப், பிரணவத்தின் (வியஷ்டி ரூபமாய் -
வர்ணவியத்தியயத்தினால் எய்திய உ+ம்+அ) சொரூபமாகிய, உமை
என்னுந்திருநாமம் எய்திற்று" - என்று ஸ்காந்தம் - சம்பவகாண்டம் கூறும்.
மணப்பருவம் வரச், சிவபெருமான் அம்மையார் "கொண்ட தவங்கண்டு,
குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினை நன்கறிந்து விரும்புவரங்
கொடுத்தருளி வேட்டருளிச் செய்த"னர். மற்றும் பல சரிதங்கள்
புராணங்கடோறும் காண்க. அடியார்களுக்கு வெளிப்படும்போதெல்லாம்
உமையொருபாகமாகவே இறைவன்வருவர். ஆசிரியர் சேக்கிழார் பெருமான்
"ஆரணமு முலகேழு மீன்றருளி - யனைத்தினுக்குங் காரணமாய்
வளம்பெருகு கருணை திரு வுருவான சீரணங்கு" எனவும், "அருட்கருணை
தானாய திருவுள்ள முடைய தவவல்லி" எனவும் இன்னும் பற்பல படியும்
வாழ்த்தியவற்றானும் பிறவாற்றானும் இவர் தன்மைகள் அறிக.

எரிமூன்று (354) - ஆகவனீயம், காருகபத்தியம், தட்சிணாக்கினி -
எனும் வைதிக அக்கினி மூன்று.

ஐந்தெழுத்து (84) - அஞ்செழுத்து (305) - சீபஞ்சாக்கர மகாமந்திரம்.
இதனியல்புகள் நல்லாசிரியர்களை யடுத்து அறியத்தக்கன.

ஐம்பூதம் (16) - பூதம் (43) - பூதமைந்து (142) - நிலன் - நீர் -
நெருப்பு உயிர்ப்பு (காற்று) - விசும்பு என்பன.

ஐந்துபேரறிவு (252) - ஐந்துவகையாக ஐந்துவகைகளிலே -
பெயர்கின்ற அறிவு. ஐம்பொறிகளின் வழியே சென்று ஐந்து புல(விடய)
ங்களை அறிவதாதலின் ஐயறிவெனப்படும்.

 ஐயாறு (45) - இது சோழநாட்டுக் காவிரியின் வடகரையிலுள்ள
சிவதலங்களுளொன்று. நங்கள் நாதனாம் நந்திதவஞ் செய்தது. முனிவரும்
தேவரும் பஞ்சாக்கர செபஞ் செய்த பேறு பெற்றதாற் "செப்பியேசம்" என்ற
காரணப் பெயர் பெற்றது. வடமொழியிற் பஞ்சநதம் என்று சொல்லப்
பெறுவது. காவிரி, சுவாமிபாத கங்கை, தேவிகங்கை, இடபகங்கை,
நந்திதேவருவகை இவ்வைந்து நதிகள் சேருமிடம். அப்பர் சுவாமிகள்
கைலைக் காட்சி கண்ட தலம்.ஓசை ஐந்து (215) : ஐந்து (245) - பஞ்சநாதம்.
தேவவாத்திய முழக்கு. தேவதுந்துபி என்பர். முதலிற் காளத்தி
மலையேறும்போது திண்ணனார் இவை கேட்டனர். இக்காலத்தும்
கொங்கு நாட்டில் வெள்ளிமலையின்மேல் தேவபூசை நடைபெறும்போது
இரவில் இம்மலை உச்சியில் தங்கும் அன்பர் கேட்க முழங்குவன.

கங்கை (55 - 147 - 311 - 388 -16 - 518) - பெருநதிகளில் ஒன்று.
தேவருலகத்திலுள்ள ஏழு தீர்த்தங்களில் ஒன்று. மிகப் புனிதமுடையது.
தன்னுட் படிந்தாரைப் புனிதமாக்குவது. சிவபிரான் முடியிலணிவது. பகீரதன்
வேண்டப் பெருமானால் உலகிற்றரப்பட்டது.

கடவுள் (76) - பெரும்பெயர்(ச்சாலை) (77) (பெரும் பெயர் -
மகாவாக்கியம்)

கமலாலயம் - திருவாரூரிலுள்ள திருக்குளம். இது இலக்குமியால்
உண்டாக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது. திருமுதுகுன்றில் மணிமுத்தா
நதியிலிட்ட பொன்னை ஆரூரர் சிவபெருமானருளினாலே இக்குளத்தின்
வடகிழக்கு மூலையிலெடுத்துப் பரவை நாச்சியாருக்குக் கொடுத்தனர்.
ஐந்து வேலிப் பரப்புடையது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 15:48:58(இந்திய நேரம்)