தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


சிறப்புப் பாயிரம்
7

 

கூற்றாவன: இந்நூல் பரவி விளக்கி வரும் தெய்விகப் பெருநிலையை நோக்கிப் பயந்து இதனால் மக்கள் பெருநோய் பரவுதல்போலக் கேடுறுவர் என்று சுட்டெரிக்கவேண்டும் என்பவனவும், விதவை மணம் என்னும் மறுமணம், சாதி ஒழித்தல் சாதிக்கலப்பு கதம்ப சமரசம் என்னும் பேரால் மக்கட் கூட்டச் சமூக சீர்திருத்தம் வேண்டும் என்பனவும், இன்னும் ஒருபடி மேலாகச் சமயச் சீர்திருத்தம் வேண்டும் என்பனவும், இவ்வாறு தாந்தாங்கொண்ட இழி கொள்கைகளுக்கெல்லாம் இப்புராணத்தில் ஆதரவும் நிராதரவும் தேடிக் கூறும் பயனற்ற பேச்சுக்களாம்.

சைவ சமயத்தின் சமரசம், எல்லாம் ஒரே குவியலாகச் சேர்க்கும் கதம்ப சமரசமன்று; படிமுறையாகப் பலப்பல வகைகளையும் ஒரே கோர்வையாக ஒற்றுமைப்படுத்தி வேற்றுமையில் ஒற்றுமைமையும், ஒரே பெரிய நிலையிலிருந்து பலப்பல படிமுறையாக வகுத்தெடுத்து ஒன்றுபடத்தக்க நேர்மையாக ஒற்றுமையில் வேற்றுமையையும் ஆராய்ச்சி அனுபவ உணர்ச்சி வாயிலாக அறிவினிடத்தே கண்டறிவதோர் அரிய செயலாவதேயன்றி, வெறுவெளிபோலப் பேச்சினால் அன்று. பலவகைப்பட்ட ஒவ்வொரு அனுபவ உண்மைக்கு மாறாகப் பேசும் போலிச் சமரசம் ஒவ்வோர் சுயநலம்பற்றிச் சூழந்த ஆராய்ச்சிகள் அறிவற்ற பேதைமையே. இம்மட்டிலமையாது இன்னும் இப்பெரிய புராண அடியார்களின் அரும்பெரும் செயல்களை நம்பத்தகாதென ஒதுக்கி நாத்திகம் பேசி, அந்தோ! நாத்தழும்பேற வீணே காலம் கழிக்கும் மக்கட் பதர்களும் உண்டு.

அரன் பணியும் அடியாரர் பணியும் என்ற இருபயன்களே மக்கட்பிறவியின் பயன் என்றதனை உள்ளுறையாகக் கொண்டு பேரறிவுக்கும் அருள் ஞானத்துக்கும் நிலைக்களமாய் விளங்கும் இந்நூலினின்றும் அதற்குரிய பயனைப் பெறாது, இந்நாளுலகம் குரங்கின் கையில்கொண்ட பூமாலையைப்போலப் பயன்படுத்தி அலங்கோல முறுகிறது. இனித் தமிழ்ப்பேரிலக்கியமாயும் பெருங்காப்பியமாயும் உள்ள இதனை அந்தப் பயன் கருதிப் பயில்வாரும் சிலர் உண்டு,. உயர்தரப்பள்ளிகளில் பரிட்சைப் பாடப்பகுதிகளாக நியமிக்கப்படும் அவ்வப் பகுதிகளை, ஆசிரியர்களும், மாணவர்களும், அந்நிலையினின்று பயின்று வருகிறார்கள்.

இனி இதனை, ஞானப் பெருஞ்சாதனமாகக் கொண்டு மேலாகிய பெரும் பயன் பெறுவார் ஒரு சிலரும் உண்டு. ஸ்ரீமத் குமரகுருபரர் அருளியபடி அறிவன் நூல் என்னும் ஒரு பெரிய வேதவிருக்ஷத்தில் படுபயன் பலவாக, அவற்றுள் இலைதளிர், அரும்பு, மலர், பிஞ்சு, காய் என்ற ஒவ்வொன்றையும் விரும்பியபடி கொண்டு பயன் பெற்றோர் பலப்பலராக, அதன் உச்சியிற் பழுத்த ஆரா இன்ப அருங்கனி பிழிந்து சாரங்கொண்ட சைவசித்தாந்தத் தேனமுதருந்தினர் சிலரேயாவர். அச்சித்தாந்த இலக்கணத்துக்கு இலக்கிய அனுபூதி வாழ்க்கை உண்மை வரலாற்று நாயன்மார்களை அறியக்கூடியவர்களும் ஒரு சிலரே யாதல் தகுதியே.

இந்நிலையில் இப்பெரு நூலுக்கு ஆசிரியர் கருத்துக்கு இயைந்தபடி ஒரு பேருரை மிகவும் இன்றியமையாதது ஒன்றாகும். அக்குறையை நீக்கி நிறைவு செய்ய முன்வந்துள்ள பெரியாரைப்பற்றி இனிப் பேசுவாம்.

முன்னவனே முன்னின்றால் முடியாத பொருளுளதோ? தென்திசை செய்த மாதவத்தால் அவதரித்த சமய குரவர் நால்வருள் ஒருவராகிய ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் "தில்லைவாழந்தணர்" என்று ஸ்ரீ தியாகராஜப் பெருமான் அடியெடுத்துக் கொடுக்கத் திருத்தொண்டத்தொகையை முதனூலாகப் பாடியருளினார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 11:13:11(இந்திய நேரம்)