Primary tabs
முன்சேர்க்கை - 2
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசு நாயனார் தோத்திரத்திரட்டு
*************************************
கந்த புராணம்
பொய்யுரை நூல்சில புகலுந் தீயமன்
கையர்கள் பிணித்துமுன் கடல கத்திடு
வெய்யகற் றோணியாய் மிதப்ப மேற்படு
துய்யசொல் லரசர்தா டொழுது போற்றுவாம்.
1
உபதேச காண்டம்
முப்ப ணைத்திற மூரிற் காட்டியோர் முதலாய்க்
கப்ப னைத்துமா ருயிரெனக் கவைத்தரு வானோற்
கொப்ப னைத்திரு நாவினுக் கரசெனு மொருபே
ரப்ப னைத்தொழு தகற்றுது மும்மலத் தவலம்.
2
திருவிளையாடற் புராணம்
அறப்பெருஞ் செல்வி பாகத் தண்ணலஞ் செழுத்தா லஞ்சா
மறப்பெருஞ் செய்கை மாறா வங்சக ரிட்ட நீல
நிறப்பெருங் கடலும் யார்க்கு நீந்துதற் கரிய வேழு
பிறப்பெனுங் கடலு நீத்த பிரானடி வணக்கஞ் செய்வாம்.
3
சேது புராணம்
தேவரையு முனிவரையுந் துளவ மார்பிற்
றிருவரையுங் குரவரையுஞ் செல்வ மிக்கோர்
யாவரையு மேவல்கொளு நெற்றி நாட்டத்
திறைவரைமுன் னிகழ்ந்திருந்த வெண்ணந் தோன்றச்
சேவரையு நெடுங்கொடியின் றகைமை யெல்லாத்
திசைவரையுஞ் செலத்தமிழின் செய்யுள் பாடு
நாவரையர் புகழ்மொழிகள் வரைந்து கூறி
நயந்தவர்செய் திருத்தொண்டு வியந்து வாழ்வாம்.
4
திருவாரூர்ப் புராணம்
ஆலநிழ லமர்ந்தபிரான் அருளி னாலே யன்றொருகற் புணையாக வாழ நீந்தி
ஞாலமுழு துய்ந்தருள நவை யிலாத நறுந்தமிழின் பலமினிது நாளு நல்கிச்
சாலமிகு பாவமுது வேனில் வெம்மைத் தழலாற வாகமநூற் றருமஞ் சான்ற
சீலநிறை சைவநெறி நிழல்ப ரப்புந் திருநாவுக் கரசினடி சிந்தை செய்வாம்.
5
வாயு சங்கிதை
வலஞ்சுழி யுந்தி வயிற்றெழு நோயு மயங்கிடு பிறவிவெந் நோயுங்
கலங்கியே யகலக் கரைபொரு திரங்கு கருங்கட லுண்முளைத் தெழுந்த
விலங்கொளிப் பவள வரைநிகர் முதலை யின்னிசைத் தமிழினாற் பாடிப்
புலன்களைந் தினையும் வென்றுமெய்ஞ் ஞானம் பூத்தவன் பொன்னடிதொழுவாம்.