Primary tabs
மச்ச புராணம்
பெருநாவ லிருநிழற்கீழ்க் குளிர்புனற்குண் முளைத்தெழுந்த பெம்மான் செம்மை
தருநாவுக் கிசைத்தமிழா லலைகடலி னிடைபிணித்த தனிக்கற் றூணன்
றொருநாவா யெனமிதப்ப வீற்றிருந்தங் கைந்தெழுத்தி னுண்மை யோது
திருநாவுக் கரசரிரு பிரசமலர்ச் சேவடியைச் சிந்தை செய்வாம்.
7
திருக்கூவப் புராணம்
மருக்கு லாவு மறைவனத் தொன்றிய
திருக்க பாடந் திறந்தசொல் வேந்தனை
யருட்கு லாவு மறிவினை மூடிய
விருட்க பாடந் திறக்கவு மேத்துவாம்.
8
திருவையாற்றுப் புராணம்
செஞ்சடையார் புகழ்விதைத்துத் திருஞான நீர்தேக்கி
யஞ்சுகளை யறுத்துடனே யமணர்களை வேரறுத்துப்
பஞ்சநதிக் கயிலையினிற் பயன்விளைந்து புகலூரிற்
றஞ்சமுதற் கண்டபிரான் சரணகம லம்போற்றி.
9
சீகாளத்திப் புராணம்
வேற்று ருக்கொள் விதியறி யாவரன்
கீற்று வெண்பிறைக் கேழ்கிளர் செஞ்சடை
1 யாற்று ணாச்சுமை யேற்று மருந்தமிழ்
மாற்ற ருநதவத் தோனை வழுத்துவாம்.
10
திருக்கழுக்குன்றப் புராணம்
குறித்தகுலத் திலகவல்லிக் கிளைவளைப்ப வளைப்புண்டு கொடிய நாகம்
பறித்தகுருந் தினைமீட்டு நீற்றறையின் வன்னிவென்று படருங் கோட்டு
வெறித்தமத மாக்களையும் விலகிமுழங் கியவத்தி மீதே குண்டர்
செறித்தகல்லான் மிதந்துவருந் திருநாவுக் கரசுநிழற் சேர்ந்து வாழ்வாம்.
செவ்வந்திப் புராணம்
புத்தியற் றிருக்கும் பொய்யர் புறச்சம யத்தை நீக்கிச்
சத்தியப் பொருளை யோர்ந்து தலைவனை யறிந்து சைவ
பத்தியிற் கனிந்த ஞானப் பழத்தினை யொருகற் றூணா
லத்தியைக் கடந்த நாவுக் கரசினை வணங்கு வோமே.
12
திருவெண்காட்டுப் புராணம்
சிற்றூணின் மரகதத்தி னொளிபகலு மிருள்காட்ட வெழுந்து காமன்
விற்றூணி மலரெடுத்து விளையாடுந் திருவாமூர் விளங்க வந்தோன்
கற்றூணைப் பிடித்துவளை கடல்கடந்தோ னிருபாத கமல மென்னும்
பொற்றூணைப் பிடித்துநம திடராழி கடந்துகதி புகுத லாமே.
13
காஞ்சிப் புராணம்
இடையறாப் பேரன்பு, மழைவாரு மிணைவிழியு, முழவா ரத்திண்
படையறாத் திருக்கரமுஞ், சிவபெருமான் றிருவடிக்கே பதித்த நெஞ்சு,
நடையறாப் பெந்துறவும், வாகீசப் பெருந்தகைதன் ஞானப் பாடற்
றொடையறாச் செவ்வாயுஞ், சிவவேடப் பொலிவழகுந் துதித்து
வாழ்வாம்.
1.
ஆற்றுணாச் சுமை - பொதிசோறு.