Primary tabs
வீரமாமுனிவர்
ஆய்வுக் கழகம் 1969இல் தொடங்கப்பெற்றது.
தேம்பாவணி மலர்கள், பரமார்த்த குருவின் கதை (3 பதிப்புகள்),
சதுரகராதி, திருக்குறள் மொழி பெயர்ப்பு, வித்தகர் வீரமாமுனிவர் சிறப்பு
மலர், இதோ தமிழ் இதழ்கள் (1970), உள்ளத்தின் ஒலி, இதோ தமிழ்
இதழ்கள் (1974) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளது. இப்போது
தேம்பாவணி முழுவதற்கும் விளக்கவுரை வெளியிடுவதில் மகிழ்ச்சியும்
பெருமையும் கொள்கிறது.
முன்னைய முயற்சிகள்
முன்னோர் விட்டுச்
சென்ற அடிச்சுவட்டில் நடந்து முன்னேறுவது
பின்னோர் இயல்பு. தேம்பாவணிக்கு முதல் உரை 1729இல்
எழுதப்பெற்றது; 1851இல் புதுவை, சன்ம இராக்கினி மாதா அச்சுக்கூடத்தில்
முதன்முறை அச்சிடப் பெற்றது. அது இதுவரை நான்கு பதிப்புகள்
கண்டுள்ளது. அதில் தேம்பாவணி முழுமைக்கும் பொழிப்புரையும், முதல்
நான்கு படலங்களுக்கு மட்டும் திரு. அ. ஆரோக்கியசாமி பிள்ளை
எழுதிய பதவுரையும் உள்ளன.
1866இல்
திரு. பு. ஆரோக்கிய நாயகர் புதுவையில் தேம்பாவணிக்
கீர்த்தனை என்ற இசைநூலை வெளியிட்டார்.அது தேம்பாவணியின் முதற்
காண்டச் செய்திகளைப் பாடுகின்றது. இது, பொதுமக்கள் தேம்பாவணியின்
அருமையைச் சுவைக்க இயற்றப்பட்டது எனச் சிறப்புப் பாயிரம் செப்புகிறது:
தேம்பா வணிகெழு தேம்பா வணிநனி
நூனவி லறிவு நுண்ணியோர்க் கன்றி
ஏனையோர்க் குணரு மியல்பிற் றன்றெனா
முன்னூற் பெயர்தழீஇ முதற்காண் டத்தை
நன்கீர்த் தனமா நவின்றனன் மாதோ
இந்நூல்
1866 இல் அச்சிடப்பட்டது. அவ்வமயம் 23 சாத்துக்
கவிகள் இந்நூலுக்குப் பொன்னாடை போர்த்தின. இவற்றிற்குப் பின் வரும்
அரங்கேற்றிய ஆசிரிய விருத்தம், இந்நூல் 1857ஆம் ஆண்டு தை மாதம்
அரங்கேறியது என்று கூறுகின்றது. இதற்குப் பின் சிறப்புப் பாயிரம்