தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Library

உறுதியாமே'' என்று தம் முகவுரையிற் குறிப்பிடுகிறார். உரையும்
வீரமாமுனிவரே எழுதினாரென்ற தவறான கருத்து இதன் அடிப்படையில்
எழுந்ததுபோலும். மேலும் பன்னிரு படலங்களைத் தனித்தனியே கொண்ட
முதற்காண்டம், இரண்டாங்காண்டம், மூன்றாங் காண்டம் என்ற பகுப்பு
முறையும் இந்தப் பதிப்பின் அடிப்படையில் எழுந்ததேயாம்.
புறவுரையாசிரியமோ;

 
''ஆறறு நூற்றைமூன்று அரும்பொருட் பாவும்,
     ஆறறு படலமும்''

என்கின்றதேயன்றி, காண்டம் பற்றிப் பேசவே இல்லை.

1851 அச்சுப்பதிப்பின்படி, தேம்பாவணி முழுமைக்கும் 'உரை'
எனப்படும் பொழிப்புரையும், முதல் நான்கு படலங்கட்கு மட்டும் அ.
ஆரோக்கியசாமி பிள்ளை 'இதனது பதப்பொருள் (இ-ள்)' என்ற
முறையில் இயற்றித்தந்த பதவுரையும் அமைந்துள்ளன. இப்படலங்களைப்
பதவுரையோடு பயின்றதன்பின், பொழிப்புரை கொண்டே
பிறவற்றிற்கெல்லாம் பொருள் உணரக் கூடுமென்ற உறுதியோடு இவ்வாறு
செய்ததாக இப்பதிப்பின் முன்னுரை குறிப்பிடுகிறது. முழுவுரையைச்
செய்தவர் யார்?

காப்பிய முதற்கண் அமைந்துள்ள பாவுரை பதிகம்,

 
''பெயர்பெறும் சூசை பெரும்பயன் சரிதை
 செய்யுளும் உரைத்த செய்யுளோடு இசைப்படச்
 செய்யுள்நிரை பிறழாத் தெளிவுரை வழங்க''

எனத் தொடங்கி,
 
''பெரும்பயன் உறும்படி பேதை மொழியுடன்
 அரும்பயன் உணர்ந்துஉரை அறைகுது நானே''
என்று தொடர்கிறது, இந்த 'நான்' யாரென்பது வெளிப்படையாய் இல்லை.
காப்பிய முடிவில், 'மாணாக்கன் புகழ்ந்துரைத்த' என்ற அடைமொழியோடு
புறவுரையாசிரியம் அமைந்துள்ளது. அதன்கண்,

 
 ''தயிரிய சாமி தவறா மொழியுடன்
 உயிர் இயல் பயனே உரைத்த திருக்கதை''

என்று பிரித்துக்காட்டி,

 
''தென்மலை உச்சியைச் சேர்திறம் இல்லார்
     சொல்மலைப் பயன் உற, துணிவில்அம் மலையினின்று
     ஈங்குயான் கொணர்ந்தென, ஈரறம் அருள்நலம்
     வீங்குயாப்பு அரும்பயன் விரித்த உரைஇதே''

என்று தன்னைச் சுட்டி நிற்கிறது. எனவே, ஆசிரியரின் வேறாய
இம்மாணாக்கனே உரையாசிரியன் என்பது தெளிவாகிறது. இதன்மூலம்,
''அவ்வீரமா முனிவராலேயே அருளிச் செய்யப்பட்ட பழையதோர்
பொழிப்புரை'' என்ற ஜெகராவு முதலியார் குறிப்பும் அடிபட்டுப்
போகிறது.

சென்னை இராயபுரம் வித்துவான் A. S. ஜெகராவு முதலியார்
தேம்பாவணி முதற் பன்னிரு படலங்கட்கு மட்டும், பதவுரை
பொழிப்புரை விளக்கவுரை கொண்ட விருத்தியுரை அமைத்துள்ளார்.

இது 1901-ம் ஆண்டு பதிப்பாகியுள்ளது. முழு நூலுக்கும் இவ்வுரை
அமையாது போயிற்றே என்று வருந்த வேண்டியுள்ளது.

இப்புதிய உரையும் முனிவர் கருத்துக்களையெல்லாம் முற்ற முடிய
வெளிக் கொணர்ந்த நிறையுரையென்று நான் கருதவில்லை. அன்பர்கள்
தக்க ஏதுக்களுடன் சுட்டிக்காட்டும் குறைகள் திருத்தங்கள் எப்பொழுதும்
நன்றியுடன் ஏற்றுக் கொள்ளப்படும்.

                                        வி. மரியஅந்தோணி,
                                        மறவன் குடியிருப்பு
                                        நாகர்கோவில்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-10-2017 14:08:05(இந்திய நேரம்)