Primary tabs
தொடரனைத்தும் மாய நூறி
அருட்கடைக்க ணளித்தாண்ட சுவாமிதே
வன்திருத்தாள் அகத்துள் வைப்பாம்.
என இவர் பாடிய குருவணக்கத்தால் இவரது குருபத்தி இனைத்தென்பது புலனாம்.
இவர் இயற்றிய நூல்கள் ஒவ்வொன்றும் சொல்வளமும் பொருள்வளமும் நிரம்பித் துளும்புவனவாயினும், உருக்கத்திலும் பத்தியிலும் இப்பதிற்றுப்பத்தந்தாதியே தலைசிறந்து நிற்கிறது. உள்ளத்தை உருக்கி உணர்வைக் கவர்வதில் ஒப்புயர்வற்ற திப்பிய நூலென ஆன்றோர் அனைவரும். உவந்து கொண்டாடும் திருவாசகம் என்னும் அரிய பெரிய அருள் நூலோடு இச் சிறு நூலை ஒப்பிட்டு, இதனைக் குட்டித் திருவாசகம் என வழங்கும் வழக்கொன்றே இதன் அருமையைப் புலப்படுத்தும்.
இந் நூலுக்கு யான் எழுதிய இவ்வுரையில், என் ஆசிரியர் ஸ்ரீலஸ்ரீ சுவாமி வேதாசலம் அவர்களின் கடைக் கணிப்பின் வலத்தாலும், அறிவுக்கறிவாய் உயிர்தோறும் உண்ணின்று அறிவிக்கும் சிவபெருமானது திருவருட் சாயலாலும் ஆண்டாண்டு, ஒரு சில நலங்கள் தோன்றக் கிடக்கும் என்னும் துணிவுடையேன். பாசவயப்பட்டுழலும் சிற்றறிவினேனது அறியாமையால் பிழைகள் சிலவும் அவ் வொருசில நலங்களுடன் கலந்து பரந்து கிடத்தல் இயலும். ஆதலின், அறிவானான்ற பெரியோர் ‘குணம்நாடிக் குற்றம்நாடி, அவற்றுள் மிகை நாடி மிக்க’ கொள்ளுமாறு வேண்டுகின்றேன். சிவபெருமான் திருவடி வாழ்க.
நாகை-சொ. தண்டபாணிப்பிள்ளை: