Primary tabs
உ
கணபதி துணை
முகவுரை
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரம
பண்-காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
“பாச மான களைவார் பரிவார்க்கழதம் அனையார்
ஆசை தீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார்
காசை மலர்போன் மிடற்றார் கடவூர் மயான மமர்ந்தார்
பேச வருவா ரொருவர் அவரெம் பெருமா னடிகளே.”
திருச்சிற்றம்பலம்
----
பரணியின் இலக்கணம்
தமிழில் உள்ள பிரபந்தங்கள் பெரும்பாலும் தலைவர்களுடைய வெற்றிச்சிறப்பு கொடைச்சிறப்பு முதலியவற்றைப் பாராட்டிக் கூறுவனவாகும். அவற்றுள், அகப்பொருளமைதி உள்ளவை தலைவன் புகழைச் 1சார்த்துவகையாற் பெயரொடு சுட்டிப் புகழும். புறப்பொருளமைதி யுள்ளவற்றிற் பெரும்பாலன பாட்டுடைத் தலைவரையே நூலின் தலைவராக அமைத்துப்புகழுவதன்றித் தலைவர்களுடைய வீரத்தைப் பலபடப் பாராட்டிக் கூறும்.
அங்ஙனம் வீரத்தைச் சிறப்பித்துப் புறப்பொருளமைதி தோன்றப் பாடப்படுவனவற்றுட் சிறந்தது பரணியென்னும் பிரபந்தமாகும். புறத்திணைத்துறைகளுட் பலவற்றிற்கு இலக்கியம் பரணி நூல்களுட் காணலாம் :
“மற்றுப் பரணியுட் புறத்திணை பலவும் விராய்வருதலின்”
(தொல். செய். சூ. 149, உரை)
என்பர் பேராசிரியர்.;
1. “அகத்திணைக்கட் சார்த்துவகையான் வந்தன அன்றித் தலைமை வகையான் வந்தில என்பது.” தொல். அகத். சூ. 54, ந.