தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

ii
பாசவதைப் பரணி்

பாட்டியல் நூல்களில் ‘ஆயிரம் யானையைக் கொன்ற வீரனைப் பாராட்டிக் கடவுள்வாழ்த்து, கடைதிறப்பு முதலிய உறுப்புக்கள் அமையப் பாடப்படுவது’ என்று பரணியின் இலக்கணம் சொல்லப்பட்டுள்ளதாயினும் இலக்கியங்களை ஆராயும்பொழுது, பகைவரைவென்று களவேள்வி செய்த தலைவனது வீரத்தையும் வெற்றியையும் சிறப்பித்துப் பாடப்படுவது இந்நூலென்று தோற்றுகின்றது ;

“விரும்பரணில் வெங்களத்தீ வேட்டுக் கலிங்கப்
 பெரும்பரணி கொண்ட பெருமான்”                 (குலோத்துங்கசோழனுலா)

என்ற ஒட்டக்கூத்தர் வாக்கில் இக்குறிப்புக் காணப்படுதல் இங்கே அறிதற்குரியது. யானைகளைக் கொல்லுதல் இணையற்ற வீரச் செயலாதலின் முற்கூறிய விதி, பரணி பெருவீரனைப் பாராட்டியே பாடப்படுவதென்பதையும், சாமானியனான வீரனைச் சிறப்பித்துப் பாடப்படுவதன்றென்பதையும் தெரிவிக்கும் கருத்துடையதென்று தோற்றுகிறது.

பரணியென்னும் பெயர்க்காரணம்

பரணியென்னும் இப்பிரபந்தப்பெயர் பரணியென்னும் நட்சத்திரம் காரணமாக எழுந்தது.

“களப்பரணிக்கூழ்”

“பண்டு மிகுமோர் பரணிக்கூழ் பார தத்தி லறியோமோ”

என்ற கலிங்கத்துப்பரணி அடிகளாலும்,

“காடுகெழு செல்விக்குப் பரணிநாளிற் கூழும் துணங்கையும் கொடுத்து வழிபடுவதோர் வழக்கு”

(தொல். செய். சூ. 149, உரை)

என்ற பேராசிரியர் உரையாலும், போர்க்களத்தில் ஒரு தலைவன் வெற்றிகொள்ள அப்போரில் வீழ்ந்தோர் உடலுறுப்புக்களாலும் பிறவற்றாலும் பேய்கள் கூழ்சமைத்துப் பரணிநாளில் காளிக்குப் பலியிட்டு, வென்றோனை வாழ்த்தும் வழக்கினைச் சிறப்பித்தலின் இப்பெயர் வந்ததென்பது பெறப்படும். இங்கே கூறிய செய்திகள் பரணிநூல்களில் வரும் களங்காட்டல், கூழ் என்னும் உறுப்புக்களில் விரிவாகக் காணப்படும்.

பரணியில்வரும் புறத்துறைகள்

புறத்திணைத்துறைகளாகிய களவேள்வி முதலியன பரணிகளில் விரவிவரும்.

“அடுதிற லணங்கார
 விடுதிறலான் களம்வேட்டன்று”         (பு. வெ. 160)

என்பது களவேள்வியின் இலக்கணம் ;

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 15:57:15(இந்திய நேரம்)