தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

xii
பாசவதைப் பரணி

டாகினி முதலிய பரிசனங்களாக அமைக்கப்படுகின்றனர். இப் பகுதியால் ஞானியர்களுடைய நிலை நன்றாகத் தெரியவருகின்றது.

கலிங்கத்துப்பரணி முதலிய பரணிகள் சிலவற்றில் ‘இந்திர சாலம்’ என்னும் ஒருபகுதி சொல்லப்படுவதுண்டு. அதனைப் பேய் முறைப்பாட்டின் தொடக்கத்தில்,

“இறப்பதும்பிறப்புமாய இந்த்ரசால வித்தையைச்
சிறப்பொடுங்குறிக்கொளென்று தேவிமுன்பு காட்டியே”

என்னும் ஒருதாழிசையில் ஆசிரியர் அடக்கியுள்ளார்.

கூளிகூறியதில், பாசமன்னனை ஞானவிநோதர் வென்ற வரலாறு சொல்லப்படுகிறது. அதன் சுருக்கம் வருமாறு :

சங்கற்பமாகிய மதில் முதலியவைகளாற் சூழப்பெற்ற மாயாபுரத்தில் பாசனென்றும் அஞ்ஞனென்றும் வழங்கப்படும் மன்னன் ஒருவன் பலவகைத் தீய குணங்களுக்கு இருப்பிடமாகித் துன்மதியென்பவனை மந்திரியாகக் கொண்டு நீதியற்ற அரசாட்சியை நடத்தி வந்தான். அந்தப் பாசமன்னனது பழிமாசு உலகெலாம் படர்ந்து மூடும் தன்மையைச் சிவபெருமான் அறிந்து சிவஞான தேசிகராக மயிலத்தில் அவதரித்து ஞானக்கோலம் பூண்டு ஞானமுடிசூடி யோகாசனத்தில் வீற்றிருந்தருளினார்.

இங்ஙனம் அவர் வீற்றிருந்தபொழுது பாசமன்னனுடைய ஒற்றர்கள் அவன்பால் ஓடிச்சென்று அவர் அவதரித்தசெய்தியைக் கூறினர். அதனைக்கேட்டும் பிறரால் அறிந்தும் பாசமன்னன் துன்மதியென்னும் மந்திரியோடு ஆலோசித்துச் சிவஞான தேசிகரோடு பொருவதற்கு எண்ணும் பொழுது, அவனுடைய படைத்தலைவர்களுள் ஒருவனாகிய காமன் எழுந்து தன்னுடைய பெருவீரத்தை எடுத்துக் கூறினான் ; பின்பு கோபன் தனது வெற்றிச்சிறப்பைக் கூறினான். கேட்ட பாசமன்னன், “கோபன் காமனைப்போன்ற வன்மையுடையவனே” என்று பாராட்டினான். ‘காமனைப்போன்றவன்’ என்று கூறியதனால் நாணமடைந்த கோபன், மீண்டும் தான் காமனாலும் செய்யமுடியாத பல செயல்களைச் செய்ததாகத் தெரிவித்தான். பிறகு உலோபன், மோகன், அகங்காரன், மற்சரன் என்பவர்கள் தத்தம் பெருமைகளையும் வலியையும் எடுத்து உரைத்தனர்.உடனே துன்மதிமந்திரி, “நம்முடைய படையின் ஊக்கத்தை எவர் உரைக்க வல்லார்?” எனப்பாராட்டினான். பாசமன்னன் தருக்குடன் இருந்தான்.

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 12:06:32(இந்திய நேரம்)