Primary tabs
அம்மன்னன் அங்ஙனம் இருக்க, அவனால் விளையும் துன்பங்களைச் சிவஞானதேசிகரிடம் அவருடைய தண்டநாயகராகிய ஞானவிநோதர் போய்த்தெரிவித்தார். கேட்ட சிவஞானதேசிகர் பாசமன்னனோடு பொருதுவெல்லும்படி ஞானவிநோதருக்குக் கட்டளையிட்டு அவரை விடுத்தார்.
பலவகை ஞானபக்குவங்கள் பூண்டவர்களை யெல்லாம் துணைக் கொண்டு ஞானவிநோதர் போருக்குப்புறப்பட்டனர். அப்பொழுது, அவர் தம்முடைய படைத் தலைவர்களை நோக்கி “நீங்கள் எந்த முறையை மேற்கொண்டு பாசமன்னன் படையினை அழிப்பீர்?” என்று வினாவ, அவர்களில் நிருபகன் காமனையும், பொறையன் போபனையும், சந்தோடன் உலோபனையும் விவகாரபராமுகன் மோகனையும், சாந்தன் அகங்காரனையும், அமுதசீலன் மற்சரனையும் அழிப்பதாகத் தத்தம் ஆற்றலை எடுத்துச் சொன்னார்கள்.
ஞானவிநோதருடைய படை போருக்கு எழுந்ததைப் பாச மன்னனுடைய வாயில் காவலர் அறிவிக்க அறிந்த அவன்படைவீரர்களிற்பலர் தங்கள் அரசன் அழிவானென்று அஞ்சினர் ; பின்பு அவர்கள் அச்செய்தியை அவனுக்கு அறிவித்தனர் ; அவன் மிக்க தருக்குடன், “எதிர்த்து வந்தவரை வெல்லாமல் நான் மீண்டால் என்னை அஞ்ஞனென்று சொல்லாமல் வேறுபெயரிட்டு அழையுங்கள்” என்று வஞ்சினங் கூறிப் போர்புரியும்படி தன்படையை ஏவினன். போருக்கு அஞ்சி அப்படையிற் பலர் ஓடிமறைந்தனர். அப்பொழுது ஞானவினோதர், ஓடாமல் எஞ்சிநின்றவர்களை மாய்க்கும்படி தம் படைவீரருக்குக் கட்டளையிட அவர்கள் அவரை நோக்கி, “நம்மவரென்றும் பகைஞரென்றும் வேறுபாடு காண்பது எவ்வாறு?” என வினாவினர். அதனைக்கேட்ட ஞானவிநோதர் தம்மவர்களாகிய உண்மைஞானியர் இயல்புகளை எடுத்துக்கூறி அவருக்கும் அஞ்ஞன்படைவீரராகிய அஞ்ஞானியருக்கும் பலவகையில் ஒப்புமை இருப்பதுபோலத் தோற்றினும் அவர்களிடையே உள்ள வேற்றுமைகள் இத்தகையனவென்று அறிவுறுத்தினர்.
பின்னர், போர் மூண்டது ; காமன்முதலியோர் நிருபகன் முதலியவர்களால் அழிக்கப்பட்டனர். பாசமன்னன் ஒருவனையன்றி ஏனையோரெல்லாம் மாய்ந்தபின்பு அவனை நோக்கி ஞானவிநோதர் படையிலுள்ள ஞானவீரர்கள், “ஞானவிநோதரை வணங்கு” என்று சொல்ல, அவன் அப்பொழுதும் பணியாமல் நின்றான்.