தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Siva Prakasa Panuval Thirattu-சிவப்பிரகாச சுவாமிகள் வரலாறு


சிவப்பிரகாச சுவாமிகள் வரலாறு

சான்றோர் வாழுந் தொண்டை நாட்டில், உலகைப் புரக்கும் உமையம்மை
வெள்ளப்பெருக்கிற்கஞ்சித் தழுவ வெளிப்பட்ட கள்ளக் கம்பனையுடையது காஞ்சிமா நகரம்.
காஞ்சிமா நகரை ஐம்பூதத் தலங்களில் ஒன்றாகிய மண்தலம் என்று ஆண்டவனருளைப் பெற்ற அருளாளர்கள் கூறிப் போற்றுவர். இத்துணைச் சிறப்பு வாய்ந்த இந்நகரில் வேளாண் மரபுக்குக்
குருக்களாயிருந்தவர் குமாரசுவாமி தேசிக ரென்பவர். இவர் வீரசைவர். இத் தேசிகர் தம்
இல்லறத்தின் பயனாக மூன்று ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றனர்.
இந்நால்வர்க்கும் முறையே அவர் சிவப்பிரகாசம், வேலாயுதம், கருணைப்பிரகாசம், ஞானாம்பிகை எனப் பெயரிட்டார். ஆண்மக்கள் மூவரும் தண்டமிழ்க்கல்வி வாய்ந்தவர்கள்; இறைவனைப்
பத்திமையாற் பணியும் பேறு பெற்றவர்கள்; என்றாலும், பேரிலக்கணங்களைப் பெரிதுங் கற்க அவாவிச் சிவப்பிரகாசர் தென்னாட்டிற்குச் சென்றனர். இடையில் அவர் வாலி கண்டபுரத்திற்குத் தெற்கிலுள்ள துறைமங்கலம் அண்ணாமலை ரெட்டியார் என்பவரால் ஆதரிக்கப்பெற்று,
அவருக்கு அறநெறி கற்பித்துப் பின்பு அவரிடம் விடைபெற்றுச் சிந்துபூந்துறை தருமபுர
ஆதீனத்து வெள்ளியம்பலசுவாமிகளை அடைந்தனர்.

வெள்ளியம்பல சுவாமிகள் சிவப்பிரகாசரை மாணவராக ஏற்றுக்கொள்ளுமுன் கல்வியின்
ஆழத்தைக் கண்டறியக் ‘கு’ என்பதை முதலிலும் முடிவிலும் வைத்து ‘ஊருடையான்’ என்பதை இடையே நிறுத்தி ஒரு செய்யுளியற்றப் பணித்தனர். சிவப்பிரகாசர், ஆசிரியர் பணித்தபடியே,
 

 
குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல்
 முடக்கோடு முன்னமணி வாற்கு-வடக்கோடு
 தேருடையான் றெவ்வுக்குத் தில்லைதோன் மேற்கொள்ளல்
 ஊருடையான் என்னு முலகு

 

என்று ஒரு வெண்பாவைத் திருவாய்மலர்ந்தருளினர். இவ்வெண்பாவில், ‘ஊருடையான்’
என்பதோடு ‘வடக்கோடு தேருடையான்’ என வந்துள்ளதையும் ஆசிரியர் வியந்து பாராட்டி,
அவர்க்கு ஐந்திலக்கணங்களையும் பெருமகிழ்வுடன் கற்பித்து முடித்தார். ஐந்திலக்கணங்கற்ற அன்பின் பெருக்கால் அவர் தம் ஆசிரியர்க்குக் காணிக்கை கொடுக்க முற்பட்டனர். ஆசிரியர் காணிக்கையை மறுத்துத் தம்மைப் பழிக்கும் தமிழ்ப் புலவரொருவரை வென்று அவரைத்
தம்மிடம் பணிய வைக்குமாறு கூறினர். சிவப்பிரகாசர் அலைவாய் சென்று முருகப்பெருமானைப் போற்றும்போது, அவ்வூரவரான தமிழ்ப்புலவர், அவர் வெள்ளியம்பலசுவாமிகள் மாணவர் என்பதறிந்து வழக்கம்போல் பழிக்கத் தொடங்கினார். அதனால் ஒருவர்க்கொருவர் வாதம் நிகழ்ந்து, ‘யாரொருவர் திருச்சீரலைவாய் முருகன் பேரில், ‘நிரோட்டகயமக வந்தாதி’ ஒன்று முதலிற்பாடி
முடிக்கின்றார்களோ அவர்களுக்கு மற்றையவர் அடிபணிந்தவராவர்’ என்று முறை ஏற்படுத்திக் கொண்டனர். முருகனருளால் முதலில் முடித்தவர் சிவப்பிரகாசரே. அதனால் அவ்வூர்த் தமிழ்ப் புலவர் அடிபணியவேண்டியதாயிற்று. புலவரைச் சிவப்பிரகாசர் செந்தூரிலிருந்து அழைத்து வந்து ஆசிரியர்முன் நிறுத்தி நடந்தவை கூறித் தலைவணங்கச் செய்தனர்.

பின்பு அவர் ஆசிரியரிடம் விடைபெற்றுத் தில்லையை அடைந்தனர். இடையிற் சிவனுறையும்
ஊர்கள்தோறுஞ் சென்று வணங்கினர். அவ்வாறு வணங்கிய ஊர்களுள் திருவெங்கையும்
ஒன்றாகும். அங்கே பல நூல்களைச் செய்தருளினர். வெங்கைப் பிடாரியின் தேர்விழாவன்று அடியார்க்குதவும் முருங்கை, அத்தேரால் அழிந்தமை கேட்டுக் காளிக்குக் கடிதமெழுதித் தேரையழித்தனர். தம்பியரிருவர்க்குந் திருமணத்தை முடித்தனர். ஒருநாள் திருவெங்கைத் தெருவில் உப்பு விற்கும் ஒரு மாதின் தமிழ்ப் புலமையைப் பிறர்க்குப் புலப்படுத்த “நிறைய வுளதோ வெளிதோ” என்னும் வெண்பாவை யுரைத்தலும், அம்மாது உடனே “தென்னோங்கு தில்லை” என்னும் வெண்பாவைப் பாடி முடித்து அடிபணிந்து மனமுருகவே அவர் அருள் பொழிந்து வாழ்த்தினர். இதன்பின் வன்றொண்டர்க்குக் கண் தந்த ஏகம்பரை வணங்கக் காஞ்சிமா நகர்க்குச் செல்லும்போது வழியில் பேரூரிலிருந்து வரும் சாந்தலிங்க சுவாமிகள் என்னும் அடியார் ஒருவரோடு கலந்துறவாடி இருவரும் சிவஞானபாலைய சுவாமிகளைக் காணவேண்டும் என்னும் நோக்கத்தோடு சென்றனர். செல்லும்போது சாந்தலிங்கசுவாமிகள், சிவப்பிரகாச சுவாமிகளைச் சிவஞானபாலைய சுவாமிகள்பேரில் வணக்கப் பாடல்கள் சில கூறுமாறு
வேண்டினர், சிவப்பிரகாச சுவாமிகள் “நரர்களைப் பாடுவதில்லை” என்று கூறிவிட்டார். இது நிற்க.

ஒருகால் உமையவள் தான் நீர்விளையாடிவரும் வரையில் ஒருவரையும் உள்ளே விடாதே எனச்
சங்குகன்னருக்குக் கட்டளையிட்டபடி சிவபெருமான் உள்நுழையும்போது சங்கு கன்னர் ஒன்றுங் கூறாதிருந்தமையின், உமையம்மையும் மற்றையோரும் நாணத்தால் வெட்கி ஒருபுறம் ஒதுங்க, அது கண்ட சிவபெருமான் சங்குகன்னருக்குச் சாபந்தந்தனர். சங்குகன்னர் சிவபெருமானை
அடிபணிந்து ‘சாபம் நீங்கு நாள் எந்நாளோ?’ என்று வினவ, ‘முருகப் பெருமானொடு மாறுபட்டுப் போர் தொடுக்கும் நாளே சாபத்தின் முடிவு நாள்’ என அவர் விடை
கிடைத்தது. அவ்வாறே அவர் உலகத்திற் பிறந்து பாலசித்த ரெனப் பெயர்பெற்று அருந்தவம் ஆற்றி மயூரமலையிற் றங்கினர். தேவியர் வேண்டுகோளுக்கிரங்கிச் சித்தருக்கு முருகர் அருள் கூராதுவிடவே, அவர் மனைவியர் இருவரும் மண்ணுலகுக்கு வந்து சித்தருக்கு மகளிராயினர். காதலியரைக் கைவிட்ட முருகப்பெருமான் வேட்டையணிபூண்டு அங்கே அரசர்
வடிவிற்றோன்றினர். பாலசித்தர் அரசரை வெறுத்து விற்போர், வாட்போர் தொடுத்தார். மற்போர் புரிந்தார். அவர் வேலைச் செலுத்தித் தாம் முருகரென விளக்கினர். சித்தர் தாம் மக்களாகக் கொண்ட அம்மையாரிருவரையும் முருகர்க்கு மணம்புரிவித்தனர். முருகப்பெருமான் பால
சித்தருக்குத் திருவுளமிரங்கி, “ஐந்நூறாண்டுகள் உலகத்தில் மக்களுக்குச் சைவ சமயத்தைப் பரவச் செய்து பின் எம்மைச் சேர்வீராக” எனக் கட்டளையிட்டனர். பாலசித்தர்,
பச்சைக்கந்த தேசிகர் மரபில் மகப்பேறின்றி வருந்திய அம்மவை என்பவளால் பெருமுக்கல் மலையில் சதுரக்கள்ளிப்பால் கொடுக்கப்பெற்று உண்டு சிவஞான பாலைய சுவாமிகள் எனப் பெயர் பெற்றனர். உலகில் பல அற்புதங்களும் நிகழ்த்தி முடிவில் பொம்மபுரத்திலே
தங்கியிருந்தார்.

பொம்மபுரத்துக் கருகிலுள்ள புத்துப்பட்டு என்னும் நகரத்தையடைந்து அன்றிரவு சிவப்பிரகாச சுவாமிகளும் சாந்தலிங்க சுவாமிகளும் ஐயனார் கோயிலின் பின்புறத்திற் றங்கினர். அன்றிரவு முருகப்பெருமான், சில விடுமலர்கள் கொடுத்துத் தொடுத்துத் தமக்கு அணியக் கட்டளையிட, அதுகொண்டு சிவஞான பாலைய சுவாமிகளின் பத்தித்தன்மை ஈதெனவறிந்து சில பாடல்கள் பாடி வழுத்திப், பாலையசுவாமிகளிடமிருந்து சிவஞானம் பெற்றனர். பின்பு ஆசிரியரின் ஆணைப்படி சாந்தலிங்க சுவாமிகளுக்குத் தம் தங்கை ஞானாம்பிகையைத் திருமணம் முடித்து வைத்தனர்.

சில நாட்கள் கழிந்தபின் சிவஞானபாலைய சுவாமிகள் இறைவனொடு இரண்டறக் கலந்தமை
கண்டு மனங்கலங்கிப்பின் ஒருவாறு தெளிந்து. தாமும், சில நாட்கள் உலகில் இருந்து பல
நூல்கள் இயற்றிய பின், தமது முப்பத்திரண்டாம் ஆண்டில் ஒரு முழுநிலவுநாளில் சிவப்பிரகாசர் இட்டலிங்க பரசிவத்தில் இரண்டறக் கலந்தருளினர்.

சிவப்பிரகாச சுவாமிகள் திருவண்ணாமலையில் இருந்தபொழுது சோண சைலமாலையும்
திருச்செந்தூரில் தமிழ்ப் புலவருடன் வாதிட்டு வெற்றிகாண நிரோட்டகயமகமும்;
திருவெங்கையூரில் இருந்தபொழுது திருவெங்கைக்கோவை, திருவெங்கைக் கலம்பகம்,
திருவெங்கையுலா, திருவெங்கை யலங்காரம் ஆகியவைகளும்; பொம்மபுரத்திற் றங்கியக்கால் தம் ஞானாசிரியர் மீது தாலாட்டு, நெஞ்சுவிடுதூது என்னும் நூல்களும்; காஞ்சீபுரத்திலிருந்த காலத்தில் வேதாந்த சூடாமணி, சித்தாந்த சிகாமணி, பிரபுலிங்க லீலை, திருப்பள்ளி யெழுச்சி, பிள்ளைத்தமிழ் என்பவைகளும், கூவத்தில் திருக்கூவப் புராணமும், விருத்தாசலத்திலிருந்தபொழுது
பழமலையந்தாதி, பிட்சாடன நவமணிமாலை, கொச்சகக்கலிப்பா, பெரியநாயகியம்மை
நெடுங்கழிநெடிலடியாசிரியவிருத்தம், பெரியநாயகியம்மை கட்டளைக் கலித்துறை என்பவைகளும்; மீண்டும் பொம்மபுரத்திற்கு வந்தபின் சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்,
நன்னெறி என்பவற்றோடு வீரமாமுனிவரை மறுத்து ஏசுமத நிராகரணம் என்பதும்,
நல்லாற்றூரை யடைந்து சிவநாம மகிமை, அபிடேகமாலை, நெடுங்கழி நெடில், குறுங்கழிநெடில், நிரஞ்சனமாலை, கைத்தலமாலை, சீகாளத்தி புராணத்தின் கண்ணப்பச் சருக்கம், நக்கீரச்சருக்கம் ஆகிய பல நூல்களும் இன்னும் ஆங்காங்குச் சிற்சில தனிப் பாடல்களும்
அருளிச்செய்தனர் என்ப.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 01:57:25(இந்திய நேரம்)