தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


12

ஆறா அன்பின் தன்மையை   அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்
கவிமணி இயற்கை வாழ்வோடு       இயைந்த கவிமணி பறவை
வாழ்வினைப் போல் சிறந்த   வாழ்வு  இல்லை என்பார். ‘அச்சக்
கும்பிடு இல்லை; நடிக்கும்       அன்புக்கும்பிடு இல்லை’ என்று
அகமகிழ்வார்.     ‘பறவையின் சிந்தனை’ கவிமணியின் புலமைச்
சிந்தனையாக விளங்குகின்றது.

‘குருட்டுப் பையன்’,   “BLIND BOY” என்னும் ஆங்கிலப்
பாடலின் அரிய மொழிபெயர்ப்பாக விளங்குகின்றது.

You say what is that thing called light
Which I must never enjoy
What are the blessings of the sight
Oh Tell your Blind Boy

எனத் தொடங்கும் ஆங்கிலப்   பாடலைக் கவிமணி பின்வருமாறு
அழகிய நடையில் மொழிபெயர்த்துள்ளார்.

இப்பிறப்பில் ஒரு பொழுதும் எனக்கறிய முடியாது
     இருக்கும் ஒளி என்பது என்ன? இருவிழியின்அடையும்
ஒப்பரிய நன்மைகள் இக்கண்கெட்ட சிறியேன்
     உணரும் வண்ணம் உரைத்திடுவீர் உற்ற உறவினரே

என்று ஆங்கிலப் பாடலின் கருத்துகளைச் சற்றும் பிறழாது சுவை
மிளிரத் தந்துள்ள    கவிமணியின்       கவிதைகள் சிறப்பாகக்
குறிப்பிடத்தக்கன.

சமூக உணர்வோடு அவர் பாடும் ‘தீண்டாதார் விண்ணப்பம்’
என்னும் கவிதை அவர்தம் அன்புணர்வைக் காட்டும்.‘கண்ணப்பன்
பூசை கொளும் கடவுள்    திருக்கோயிலிலே நண்ணக் கூடாதோ?
நாங்கள் நடையில்வரல் ஆகாதோ?’ என அழுத்தமாக வினவுவார்.
‘பெற்றான் எனும் சாம்பானுக்குப் பேறளித்த பெருமானை - வற்றாத
அன்போடு யாம் வணங்குதலும்    வழுவாமோ?’ எனக் கேட்பார்.
‘நந்தனுக்குப் பதமளித்த நடராசன் கோயிலிலே வந்தனை செய்து
நாங்கள் வழிபடுதல் முறை அலவோ? என முழங்குவார்.

வேற்றுமை பாராட்டும்    ‘இந்தப் பிறப்பு வேண்டாம் - இது
வொழிய எந்தப் பிறப்பும்    வரட்டும்’ எனத் துன்புறுவார். ‘இட்ட
சகோதரரை எட்ட விலக்கி நிதம்கட்டமிகப் படுத்தும் துட்ட உலகு’
எனச் சாதி வேற்றுமை        பாராட்டும் இவ்வுலகைச் சாடுவார்.
‘தீண்டாமைப் பேய் இனிமேலும்  நமது நாட்டில் இருந்திடலாமோ?
கப்பலில் ஏற்றுவோம்;     நடுக்காயல் கடல் கண்டு தள்ளுவோம்’
எனக் குமுறுவார்.     குழந்தைக் கவிஞரின் குழந்தையுள்ளத்தில்
சினந்து வெளிவரும் இச் சுடுசொற்கள்    கவிமணியின் சமுதாயப்
பொதுமையுணர்வைக் காட்டும்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 03:21:56(இந்திய நேரம்)