Primary tabs
முன்னுரை
எட்டுத் தொகையும், தமிழர் பண்பாடும் என்பது, எட்டுத் தொகை நூல்களைப்பற்றிக் கூறுவது. எட்டு நூல்கள் கொண்ட தொகுப்பு எட்டுத்தொகை. அவை இன்னின்னவை என்பதை எட்டுத்தொகை நூல்கள் என்ற தலைப்பிலே காணலாம்.
எட்டுத் தொகை நூல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாக எழுதலாம்; எட்டுப் புத்தகங்கள் எழுதலாம்; பலர் எழுதியும் இருக்கின்றனர்.
எட்டுத்தொகை நூல்களைப் பற்றி எழுதியிருப்போர், அந்நூல்களின் அருமை பெருமைகளை ஆராய்ந்து எழுதியிருக்கின்றனர். அந்நூல்களிலே அமைந்திருக்கும், சொல் நயம், பொருள் நயம், இயற்கைக் காட்சி, உவமைச் சிறப்பு, செய்யுள் அமைதி முதலியவைகளை எடுத்துக் காட்டி எழுதியிருக்கின்றனர்.
அந்நூல் பாடல்களின் ஆசிரியர்களான பழம் புலவர்களின் மாண்பையும், அந்நூல்களின் மூலம் அறியக் கிடக்கும் பழந்தமிழ் நாகரிகத்தையும் போற்றிப் புகழ்ந்திருக்கின்றனர்.
பண்டைத் தமிழர்களின், உண்மை வரலாற்றை உணரவேண்டும் என்பதுதான் இந்நூலை எழுதியதன் நோக்கம். பண்டைத் தமிழர்களின் சமுதாய வாழ்வு, அரசியல் முறை, குடும்ப வாழ்வு, பழக்க வழக்கப் பண்பாடுகள் எவ்வாறு இருந்தன என்பவை இந்நூலில் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. எட்டு நூல்களிலும் அமைந்துள்ள இக்கருத்துக்கள் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.