தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


கிராம சமுதாய முறை பெரிய மாறுதல் எதுவுமின்றி நிலைத்திருந்தது. போர்த்துகீசியர், டச்சுக்காரர் வருகைக்குப் பின் கடற்கரைப் பகுதியிலுள்ள சமுதாய அமைப்பு மாறத் தொடங்கிற்று. வெளிநாட்டு வியாபாரத்திற்காகத் துணி, மீன், தானியங்கள் முதலியவற்றை ஏற்றுமதி செய்யும் வியாபாரத்தில் அவர்கள் ஈடுபட்டனர். கடற்படை வலிமையால் கீழ்க்கடற்கரைத் துறைமுகங்களை ஐரோப்பியர்கள் பிடித்துக் கொண்டனர். இலங்கை, இந்தோனேஷ்யா முதலிய நாடுகள் அவர்கள் கைவசப்பட்டிருந்ததால் கடல் வியாபாரத்தில் அவர்களுடைய ஆதிக்கம் ஓங்கியிருந்தது. மதுரை நாயக்கர்களது அரசு உள் நாட்டில் அரசியல் ஆதிக்கம் பெறுவது கடினமாக இருந்தது. ஆனால் கடற்கரைப் பகுதிகளில் கிராம சமுதாய வாழ்க்கை அழிந்து போயிற்று. கிராமங்களை விட்டு மக்கள் துறைமுகங்களுக்குக் குடியேறினர். ஆனால் உள்நாட்டில் குறிப்பிடத்தக்க சமூக மாற்றங்கள் எதுவும் ஏற்பட வில்லை.

அயல் நாட்டினர் வியாபாரப் போட்டியில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். ஆங்கில நாட்டில் தொழில் வளர்ச்சி மிகுதிப் பட்டதால் பல பொருள்களை இந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடிந்தது. அவர்களுடைய கப்பல் படை வலிமையும் அதிகரித்தது. தமிழ் நாட்டில் மத்திய அரசு பலவீனப்பட்டது. ஆற்காட்டில், நவாபு பதவிக்குப் போட்டி ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஆங்கிலேயர் நாடு பிடிக்கத் தொடங்கினர். பாளையக்காரர்கள் பலர் பல சமயங்களில் எதிர்த்து நின்றனர். ஆயினும், வளர்ந்து வரும் தொழில் வளமுள்ள நாட்டினர் ஆனதாலும், கப்பற்படை மிகுதியும் உடையவர்களாதலாலும், புது முறைப் போர்க் கருவிகள் உடையவர்களாதலாலும் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.

அவர்களுடைய வியாபார முறைகளால் கிராம சமுதாயம் சீரழிந்தது. நிலச்சுவான்தார் முறை அமுலாக்கப்பட்டது. பாளையக்காரர்கள் நிலச்சொந்தக்காரர் ஆனார்கள். முன்பிருந்ததைவிடக் கிராமப் பகுதி மக்கள் கடுமையாகச் சுரண்டப்பட்டனர். ஜாதிப் பிரிவினைகள் தூண்டிவிடப்பட்டு மக்கள் பிரித்து வைக்கப்பட்டனர். ஆங்கில ஆட்சியில் மிகப் பெரிய சமுதாய மாற்றங்கள் தொடங்கின. நிலபிரபுத்துவ முறை வலுப்பெற்றது. பெரிய தொழில்கள் முதன் முதலில் துவங்கின. இயந்திரத் தொழிலாளர் வர்க்கம், ஒரு புதிய சக்தியாக இந்திய சமுதாயத்தில் தோன்றிற்று. தொழில்கள் வளர ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து நிற்க வேண்டிய தேசீயத் தொழிலாளி வர்க்கமும் தோன்றிற்று.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 04:51:33(இந்திய நேரம்)