தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


அதற்குக் காரணம் பஞ்ச பாண்டவர்களில் அர்ஜுனனும், வீமனும் மக்களுக்கு தம்மோடு உறவுடைய வீரர்களாகத் தோன்றுகிறார்கள். கண்ணன் உற்ற நண்பனாகவும், ஆபத்தில் உதவுபவனாகவும், மனிதப் பண்புகள் நிறைந்தவனாகவும் காணப்படுகிறான். கண்ணன் தனது சுயகாரியத்திற்காக எதனையும் செய்யவில்லை. தனது நண்பர்களுக்கு உதவவே கதையில் பங்கு பெறுகிறான். எனவே அவன் பாமர மக்களின் சிந்தனையைக் கவருகிறான்.

பாரத கதா பாத்திரங்களைக் கொண்டு பாரதத்தில் காணப்படாத நிகழ்ச்சிகளைக் கதைகளாகப் பின்னிய நாட்டுப் பாடல்கள் அல்லியரசாணிமாலை, பவளக்கொடி மாலை, ஏணியேற்றம், பொன்னுருவி மசக்கை முதலியன. பாரதக் கதையின் கதா பாத்திரங்கள் தமிழ் நாட்டின் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுவதாக இக் கதைகள் கூறுகின்றன. பாண்டியனின் மகள் அல்லி, பெண்ணாதிக்க சமுதாயத்தின் தலைவியாக வாழ்கிறாள். அர்ச்சுனன் தலைமறைவு வாழ்க்கையின் போது மதுரைக்கு வருகிறான். அல்லி மீது காதல் கொள்ளுகிறான். அல்லி அவனைக் காணவே மறுக்கிறாள். அவனைச் சிறைப்படுத்துகிறாள். கண்ணனது உதவியால் அல்லியை அர்ச்சுனன் மணம் புரிந்து கொள்ளுகிறான். இக்கதையில் இரு சமுதாயங்களின் உறவு உருவகமாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது. இக் கதைக்கு ஆதாரமெல்லாம் பாரதத்தில் வரும் அர்ச்சுனன்-சித்திராங்கதை சந்திப்பு மாத்திரமே.

இக் கதையின் தொடர்ச்சியே பவளக்கொடி மாலை. அல்லியோடு சிறிதுநாள் தங்கியிருந்துவிட்டு அர்ச்சுனன் பாரதப் போர் நடத்தப் போய் விடுகிறான். போர் முடிந்து வெற்றி பெற்றுச் சில ஆண்டுகளுக்குப் பின், அல்லியிடமிருந்து, குழந்தை புலந்திரனைப் பார்க்க வர வேண்டுமென்று அவனுக்கு அழைப்பு வருகிறது. அவன் குழந்தையைக் காண மதுரைக்கு வருகிறான். குழந்தை பவளத்தேர் வேண்டுமென்று அழுகிறான். அர்ச்சுனன் பவளம் தேடி பவளக் கொடி காட்டிற்குச் செல்லுகிறான். பவளக்காட்டின் ராணி பவளக்கொடியை பார்க்கிறான். காதல் கொள்ளுகிறான். பல இடையூறுகளைச் சமாளித்துப் பவளம் பெற்று வருகிறான். பின் அவளையும் மணந்து கொள்ளுகிறான். ருசிகரமாகக்கதை செல்லுகின்றது. இடையில் பவளக்கொடியோடு போராடி விஜயன் இறந்து போகிறான். தருமரும், கிருஷ்ணனும் தமிழ் நாட்டிற்கு வருகிறார்கள். பவளக்காட்டில் இறந்து கிடக்கும் விஜயனை உயிர்ப்பிக்கிறார்கள். கடைசியில் பவளக்கொடி விஜயனை மணந்து கொள்ளுகிறாள்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 04:51:53(இந்திய நேரம்)