தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


உழைப்பின் கூட்டுறவில் காதல் துளிர்த்து வளர்கிறது. உப்பளத்திலும், தேயிலைத் தோட்டத்திலும், நடுகைநடும் வயலிலும்,களத்து மேட்டிலும், தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் போதும், களையெடுக்கும் போதும், தொழிலில் கூட்டுறவு கொள்ளும் ஆணும் பெண்ணும், வாழ்விலும், குடும்பத்திலும் கூட்டுறவு கொள்ள ஆசைப் படுகிறார்கள். தொழில்களைப்பற்றியும் உழைக்கும் மக்களது கண்ணோட்டத்தை நாடோடிப் பாடல்கள் புலப்படுத்துகின்றன.

சமூக வாழ்க்கையின் பல நிகழ்ச்சிகள் கிராம மக்களின் உணர்வில் எதிரொலி கிளப்புகின்றன. சில நிகழ்ச்சிகளில் அவர்களுக்குப் பங்கு இருக்கும்.

நேரடியாகக் கிராமத்தைப் பாதிக்கும் நிகழ்ச்சிகளில் எல்லோரும் பங்கு கொள்வர். உதாரணமாகக் கிராமத்திற்குக் கொள்ளைக்காரர்கள் வந்தால், ஜாதி வித்தியாசமின்றி அவர்களை ஒன்றுபட்டு விரட்டுவார்கள். ஆனால் ஜாதிக் கலகங்கள் வந்தாலோ நியாய அநியாயத்தை ஓர்ந்து நோக்காமல் ஜாதிப் பற்றில் மூழ்கி வேற்று ஜாதியர்களை வெட்டித் தள்ளுவார்கள். வெறியடங்கியதும் தங்கள் செய்கையை நினைத்து வருந்துவார்கள். சிவகாசிக் கலகம், கழுகுமலைக் கலகம் இவை இதற்கு உதாரணமானவை.

இத்தொகுப்பில், சிவகாசிக் கலகத்தின் சமூகப் பின்னணியை விளக்கியுள்ளேன். இக்கலகத்தில் பங்கு கொண்டவர்களின் கருத்துக்களும், இரு கட்சியிலும் சேராது, இருவரையும் சமாதனப்படுத்த முயன்ற நல்லவர்களின் கருத்துக்களையும், நாம் இப்பாடல்களில் காண்கிறோம். கிராம ஒற்றுமையைச் சிதைத்து அதில் லாபம் காண முயலும் பெரிய மனிதர்களின் சூழ்ச்சிகளையும், ஒழுக்கமின்மையும், நாடோடிப் பாடல்களில் வெளியாகின்றன. ஆட்சியாளர்களில் நன்மை செய்பவர்களைப் புகழ்ந்தும் தீமை செய் ப வர்களை இகழ்ந்தும் பாடல்கள் தோன்றியுள்ளன. நாட்டுப் பாடல்களில் அரசியல் உணர்வு அதிகமாகக் காணப்படுவதில்லை. ஏனெனில் சுமார் முப்பது வருஷங்களுக்கு முன் தேசிய உணர்வு நமது கிராம மக்களிடம் அதிகமாகப் பரவவி்ல்லை.

நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, பணக்காரர் எதிர்ப்பு, சாதி அகம்பாவ எதிர்ப்பு முதலிய உணர்ச்சிகள் நாடோடிப் பாடல்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. இவற்றை இணைக்கும் சமூகக் கண்ணோட்டப் பாடல்கள் தோன்றிய காலத்தில் உருவாகாததால், பணக்காரர்களுக்கு எதிர்ப்பு எவ்வுருவத்தில் வந்தாலும், அவை அவ்வப்பொழுது வரவேற்கப் படுகின்றன. இவ்வாறுதான் பணக்காரர்களைக் கொள்ளையடித்த ஜம்புலிங்கம், சந்தனத்தேவன், மணிக்குறவன் முதலியவர்கள் நாட்டுப் பாடலில் இடம் பெற்றுள்ளார்கள்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 04:53:42(இந்திய நேரம்)